Sterlite Case: ”ஸ்டெர்லைட் ஆலையை மூடியது சரியே” - உச்சநீதிமன்ற தீர்ப்பை வரவேற்ற முதலமைச்சர் ஸ்டாலின்
CM MK Stalin on Sterlite Case: ”ஸ்டெர்லைட் ஆலையை மூடியது சரியே” என்ற உச்சநீதிமன்ற தீர்ப்பு வரலாற்று சிறப்புமிக்கது என முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
CM MK Stalin on Sterlite Case: ”ஸ்டெர்லைட் ஆலையை மூடியது சரியே” என்ற உச்சநீதிமன்ற தீர்ப்பு வரலாற்று சிறப்புமிக்கது என முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
முதலமைச்சர் ஸ்டாலின் பெருமிதம்:
இதுதொடர்பாக முதலமைச்சர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், “தூத்துக்குடியில் சுற்றுச்சூழலுக்கு எதிரான ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நமது அரசு முன்வைத்த வலுவான வாதங்களால், ஆலை நிர்வாகத்தின் அனைத்து விளக்கங்களும் நொறுங்கி, ஆலையை மூடியது சரியே என்று உச்சநீதிமன்றம் வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பை வழங்கியுள்ளது. நச்சு ஆலைக்கு எதிராகத் தொடர்ந்து போராடிய மக்களுக்கும், நமது அரசின் வலிமையான சட்டப் போராட்டங்களுக்கும் கிடைத்த வெற்றி இது! எத்தகைய ஆபத்தில் இருந்தும் மக்களைக் காப்போம்!” என தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடியில் சுற்றுச்சூழலுக்கு எதிரான #Sterlite ஆலைக்கு எதிராக நமது அரசு முன்வைத்த வலுவான வாதங்களால், ஆலை நிர்வாகத்தின் அனைத்து விளக்கங்களும் நொறுங்கி, ஆலையை மூடியது சரியே என்று உச்சநீதிமன்றம் வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பை வழங்கியுள்ளது.
— M.K.Stalin (@mkstalin) February 29, 2024
நச்சு ஆலைக்கு எதிராகத் தொடர்ந்து… pic.twitter.com/NqHOGWcTVQ
உச்ச நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை:
கடந்த 2018ம் ஆண்டு மே 22ல் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடந்த போராட்டத்தின்போது, போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் உயிரிழந்தனர். இதையடுத்து ஆலையை மூட தமிழக அரசு உத்தரவிட்டது. இந்நிலையில், தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடி தமிழக அரசு பிறப்பித்துள்ள உத்தரவை எதிர்த்து வேதாந்தா நிறுவனம் சார்பில் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்ததை தொடர்ந்து ஆலை நிர்வாகம் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. இந்த வழக்கு தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திர சூட் தலைமையிலான அமர்வு விசாரணை நடத்தி வந்த நிலையில், இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது.
"ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க அனுமதிக்க முடியாது”
அதன்படி, ”உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பில் தவறு உள்ளது என்ற ஆலையின் வாதத்தை ஏற்க முடியாது. உயர்நீதிமன்றத்தின் முடிவில் தலையிட வேண்டிய அவசியம் இல்லை. ஆலையால் செய்யப்பட விதிமுறை மீறல்கள் அடிப்படையில் உயர்நீதிமன்றம் மற்றும் அரசால் இந்த முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளது என்பதை மறுக்க முடியாது.
மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் தனது கடைமையை செய்ய தவறி விட்டது. தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலை ஏற்படுத்திய சுற்றுச்சூழல் மாசுபாடு மற்றும் காப்பர் கழிவுகளை கையாண்ட முறை மிகவும் கவலைக்குரியது. 2013 முதல் உச்ச நீதிமன்றம் பல வாய்ப்புகளை கொடுத்தும் கழிவுகளை அகற்ற ஸ்டெர்லைட் தவறிவிட்டது.
ஸ்டெர்லைட் ஆலை தொடர்ந்து சுற்றுச்சூழல் மாசை ஏற்படுத்தி வந்துள்ளது. ஸ்டெர்லைட் ஆலையை சுற்றியுள்ள மக்களுடைய சுகாதாரம் மிக முக்கியமானது. எனவே, ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க அனுமதிக்க முடியாது” என்று கூறி மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.