புறக்கணிக்கப்பட்டவர்களை தூக்கி விடுவதுதான் சமூக நீதி... தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் முழக்கம்..!
"சிறுபான்மையினருக்கு முறையாக இடஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும். சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த வேண்டும். மத்திய அரசு, அதன் தரவுகளை வெளியிட வேண்டும்"
தமிழ்நாடு முதலமைச்சரால் தொடங்கப்பட்ட அனைத்திந்திய சமூக நீதி கூட்டமைப்பின் முதல் தேசிய மாநாடு இன்று டெல்லியில் தொடங்கியுள்ளது. இந்த மாநாட்டில் ஸ்டாலின் தலைமை உரை ஆற்றி உள்ளார்.
கொலை செய்யப்பட்ட சமூக நீதி:
சென்னையில் இருந்து காணொளி காட்சி வாயிலாக கலந்து கொண்ட ஸ்டாலின், "கர்நாடகாவில் வெளிப்படையாகவே சமூக நீதி கொலை செய்யப்பட்டுள்ளது. சமூக நீதியை காக்கும் கடமை நமக்கே உள்ளது. அதனால்தான் இணைந்துள்ளோம். ஒட்டுமொத்த இந்தியாவை இணையத்தில் இணைத்துள்ளோம்.
சிறுபான்மையினருக்கு முறையாக இடஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும். சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த வேண்டும். மத்திய அரசு, அதன் தரவுகளை வெளியிட வேண்டும். பெரியார் உள்ளிட்ட சமூக சீர்திருத்தவாதிகள் குறித்து மற்ற மாநில இளைஞர்கள் அறிய ஸ்டடி சர்க்கிள் உருவாக்க வேண்டும். புறக்கணிக்கப்பட்டவர்களை தூக்கி விடுவதுதான் சமூக நீதி.
அதென்ன உயர்சாதி ஏழைகள்?
ஏழைகள் என்றால் அனைவரும் ஏழைகளாகத் தானே இருக்க முடியும்: அதென்ன உயர்சாதி ஏழைகள். பொருளாதார இட ஒதுக்கீட்டை பாஜக அரசு தந்துள்ளது. பொருளாதாரம் என்பது நிலையானது இல்லை: அது சமூக நீதிக்கு எதிரானது. இதன் காரணமாகவே நாம் பொருளாதார இட ஒதுக்கீட்டை எதிர்க்கிறோம்" என்றார்.
இந்த மாநாட்டில், திரிணாமுல் காங்கிரஸ் எம்பி டெரெக் ஓ பிரையன், தேசியவாத காங்கிரஸ் எம்எல்ஏ சகன் சந்திரகாந்த் புஜ்பால், ஆம் ஆத்மி எம்பி சஞ்சய் சிங், ராஷ்டிரிய ஜனதா தள கட்சியின் மூத்த தலைவர் மனோஜ் குமார் ஜா, எம்பி முகமது பஷீர், பாரத் ராஷ்டிர சமிதி எம்பி கேசவ ராவ், மகாராஷ்டிரா எம்எல்சி மகாதேவ் ஜாங்கர், எம்பி நபர் குமார் சரணியா, முன்னாள் எம்பி ராஜ்குமார் சைனி உள்ளிட்டோர் சிறப்புரை ஆற்றினர்.
விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான திருமாவளவன், மதிமுக பொதுச்செயலாளரும் மாநிலங்களவை உறுப்பினருமான வைகோ, திராவிடர் கழக தலைவர் வீரமணி உள்ளிட்ட தலைவர்களும் மாநாட்டில் கலந்து கொண்டனர்.
இந்த மாநாட்டின் கருப்பொருளாக, "சமூக நீதி போராட்டத்தை முன்னோக்கி எடுத்து செல்வது மற்றும் சமூக நீதி இயக்கத்தின் தேசிய திட்டத்தில் இணைவது" என்ற தலைப்பு தேர்வு செய்யப்பட்டுள்ளது.
கடந்த 9 ஆண்டுகளாக, மத்தியில் ஆட்சியில் செய்து வரும் பாஜகவை வீழ்த்த காங்கிரஸ் கட்சியும் சில மாநில கட்சிகளும் தொடர் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன.
ஆனால், முக்கிய தலைவர்கள் சிலர் பாஜக, காங்கிரஸ் என இரண்டு கட்சிகளையும் ஒரே அளவில் எதிர்த்து வருகின்றனர். இது பாஜகவை வெற்றி பெறவே வைக்கும் எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து செயல்பட்டால் மட்டுமே பாஜகவை வீழ்த்த முடியும் என அரசியல் வல்லுநர்கள் கருது வருகின்றனர்.
இப்படிப்பட்ட சூழ்நிலையில், இந்த தேசிய மாநாடு நடந்திருப்பது முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக கருதப்படுகிறது.