JK Encounter: அடக்கொடுமையே..! 4 காவலர்கள் சுட்டுக்கொலை, வெடித்த என்கவுன்டர் - நடந்தது என்ன?
JK Encounter: ஜம்மு & காஷ்மீரில் நடந்த என்கவுன்டரில் நான்கு காவலர்கள் சுட்டுக் கொல்லப்பட்டதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

JK Encounter: ஜம்மு & காஷ்மீரில் நடந்த என்கவுன்டரில் நான்கு காவலர்களுடன்,2 தீவிரவாதிகளும் சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளன.
வெடித்த என்கவுன்டர்:
ஜம்மு & காஷ்மீரின் கதுவா மாவட்டத்தில் தீவிரவாதிகள் மற்றும் போலீசாரிடையே துப்பாக்கிச் சூடு வெடித்தது. இந்த மோதலில் நான்கு போலீசார் கொல்லப்பட்டதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. பயங்கரவாதிகளில் இருவர் சுட்டுக் கொல்லப்பட்டனர், அதே நேரத்தில் மூன்று முதல் நான்கு தீவிரவாதிகள் இன்னும் பதுங்கியுள்ளனர் என்றும், அவர்களை தேடும் பணி முடுக்கிவிடப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனிடையே, துணை காவல் கண்காணிப்பாளர் உட்பட ஐந்து பாதுகாப்புப் பணியாளர்கள் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
போலீசாருக்கு கிடைத்த தகவல்:
ராணுவம், தேசிய பாதுகாப்புப் படை, எல்லைப் பாதுகாப்புப் படை, காவல்துறை, சிறப்பு நடவடிக்கைக் குழு மற்றும் மத்திய ரிசர்வ் காவல் படை ஆகிய அணிகள் கடந்த ஐந்து நாட்களாக அந்தப் பகுதியில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டன. ஞாயிற்றுக்கிழமை கூட ஒரு துப்பாக்கிச் சண்டை நடந்தது. இந்நிலையில் கடந்த செவ்வாயன்று சந்தேகிக்கும் வகையில் சிலர் தங்கள் பகுதியில் சுற்றி திரிவதாக போலீசாருக்கு பொதுமக்கள் தகவல் தெரிவித்துள்ளனர். அதனடிப்படிஅயில் போலீசார் காடுகளுக்குள் நுழைந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அதிக ஆயுதம் ஏந்திய தீவிரவாதிகளுடன் ஏற்பட்ட நெருக்கமான சண்டையில் ஈடுபட்டபோது, போலீசார் உயிரிழப்புகளை சந்தித்தனர்.
இரண்டு தீவிரவாதிகள் சுட்டுக்கொலை
தொடர்ந்து நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில், இரண்டு தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். ஆனால், தீவிரவாதிகளின் செயல்பாடுகளை ஒடுக்கும் முன்பு, நான்கு போலீசார் கொல்லப்பட்டனர் மற்றும் ஐந்து பேர் காயமடைந்தனர். ஆபத்தான நிலப்பரப்பு மற்றும் அதிகப்படியான தீவிரவாதிகள் இருப்பதால், இதுவரை கொல்லப்பட்ட போலீசாரின் உடல்கள் கூட மீட்க்கப்பட முடியவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன. கதுவாவில் நடைபெறும் இந்த மிகப்பெரிய பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைக்கு ஜம்மு காஷ்மீர் காவல்துறை இயக்குநர் ஜெனரல் நலின் பிரபாத் தலைமை தாங்குகிறார். மீதமுள்ள தீவிரவாதிகளும் கொல்லப்பட்டு, இயல்பு நிலை மீட்கப்படும் என அவர் உறுதி அளித்துள்ளார்.
சுற்றி வளைகத்த ராணுவம்
முன்னதாக ஞாயிற்றுக்கிழமை, சன்யால் காடுகளில் குறைந்தது ஐந்து தீவிரவாதிகள் சிக்கிக்கொண்டனர். போலீசாருடனான கடுமையான துப்பாக்கிச் சண்டைக்குப் பிறகு, அவர்கள் தப்பித்து 20 கி.மீ தொலைவில் உள்ள ஜூதானாவை அடைந்தனர். அப்போது அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட M4 துப்பாக்கிகளின் உபகரணங்களை விட்டுச் சென்றனர், இது அவர்கள் அதிநவீன ஆயுதங்களை கொண்டிருப்பதை உணர்த்தியது.
வியாழக்கிழமை காலை, ஜூதானா காடுகளில் போலீசார் அவர்களை மீண்டும் சுற்றி வளைத்தனர், மேலும் கடுமையான மோதல் வெடித்தது. இந்த நடவடிக்கைக்கு ஹெலிகாப்டர்கள், ட்ரோன்கள், குண்டு துளைக்காத வாகனங்கள் மற்றும் மோப்ப நாய்கள் ஆதரவு அளித்தன. மேலும் பாதுகாப்பு நிறுவனங்கள் பலரை விசாரித்து மூன்று சந்தேக நபர்களை கைது செய்தனர்.
சன்யால் காடுகளில் ஏராளமான வெடிமருந்துகள் மற்றும் பிற பொருட்களில் இருந்து கண்டெடுக்கப்பட்ட டிராக்சூட்கள், கடந்த ஆண்டு ஜூன் மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் அசார் காடுகள் மற்றும் தோடாவில் கொல்லப்பட்ட நான்கு ஜெய்ஷ்-இ-முகமது (ஜெ.எம்) தீவிரவாதிகள் அணிந்திருந்ததைப் போலவே இருந்தன என்று கூறப்படுகிறது.

