துரத்திக் கொண்டு வந்த நாய்கள்.. பயந்து குடோனுக்குள் புகுந்த புள்ளிமான் - பூட்டிவைத்து பாதுகாத்த மக்கள்
4 அடி உயரமுள்ள புள்ளிமான் ஒன்று வனப்பகுதியில் இருந்து தப்பித்து வந்து சுற்றி திரிந்துள்ளது. ஐந்துக்கும் மேற்பட்ட நாய்கள் மானை துரத்தி வந்தபோது தனியார் குடோனில் புகுந்துள்ளது.
கரூரில் குடியிருப்பு பகுதியில் புள்ளிமான் ஒன்றை நாய்கள் துரத்திக் கொண்டு வந்ததால் தனியார் குடோனுக்குள் புகுந்தது. பொதுமக்கள் புள்ளிமானை பத்திரமாக பூட்டி வைத்ததால், தீயணைப்புத் துறையினர் உதவியுடன் வனத்துறையினர் பிடித்து சென்றனர்.
கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட அண்ணாநகர் பகுதியில் 4 அடி உயரமுள்ள புள்ளிமான் ஒன்று வனப்பகுதியில் இருந்து தப்பித்து வந்து சுற்றி திரிந்துள்ளது. அப்பகுதியில் உள்ள ஐந்துக்கும் மேற்பட்ட நாய்கள் மானை துரத்தி வந்தபோது, பதட்டமடைந்த மான் பல்வேறு தெருக்கள் வழியாக சுற்றித்திரிந்து, அப்பகுதியில் உள்ள ஒரு தனியார் குடோனில் புகுந்துள்ளது.
பொதுமக்கள் குடோனுக்குள் வைத்து அந்த புள்ளி மானை பத்திரமாக பூட்டி வைத்துவிட்டு, காவல்துறை மற்றும் வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். தகவலின் பெயரில் அப்பகுதிக்கு வந்த காவல்துறையினர், தீயணைப்புத் துறையினர் உதவியுடன் அந்த புள்ளி மானை பத்திரமாக மீட்டு வனத்துறை வசம் ஒப்படைத்தனர்.
கரூர் மாநகர் பகுதியில் புள்ளிமான் இருப்பதை கேள்விப்பட்டு பொதுமக்கள் ஆச்சரியத்துடன் வந்து பார்த்து சென்றனர். சுமார் இரண்டு வயதுடைய பெண் புள்ளிமான் காவிரி ஆற்றின் படுகையில் இருந்து வந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. மேலும், வனத்துறை அதிகாரிகள் மான் எப்படி வந்தது என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.