DMK Vs ADMK: மேயருக்கு ரூ.40 லட்சத்தில் அறை... "குடிப்பதற்கு தண்ணீர் இல்லை... மேயருக்கு குழு குழு ரூம் தேவையா?" -அதிமுக ஆவேசம்
சேலம் மாநகராட்சியில் மக்கள் வரிப்பணத்தில் மேயருக்கு ரூ.40 லட்சம் ரூபாயில் புதிதாக சொகுசு அறை தேவையா? என அதிமுக கவுன்சிலர் கேள்வி எழுப்பியதால் பரபரப்பு.

சேலம் மாநகராட்சியில் மாமன்ற இயல்பு கூட்டம் மேயர் ராமச்சந்திரன் தலைமையில் இன்று நடைபெற்றது.
முதலில் பேசத் தொடங்கிய அதிமுக கவுன்சிலர் ஆனைவரதன், தனது வார்டில் அடிப்படை வசதிகள் எதுவும் செய்யவில்லை. இரண்டு ஆண்டுகளாக எனது கோட்டத்திற்கு நகர்ப்புற சுகாதார நிலையம் கேட்டு கோரிக்கை வைத்து வருகிறேன். ஆனால் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. நாங்கள் எங்களது தலைவர் எடப்பாடியாரிடம் கேட்டு பெற்றுக் கொள்கிறோம் என்று பேசினார்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்த திமுக கவுன்சிலர்கள், அதிமுக கவுன்சிலரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இதைத் தொடர்ந்து பேசிய திமுக மாமன்ற உறுப்பினர் தெய்வலிங்கம், நாளுக்கு நாள் மாநகராட்சியில் நாய் தொல்லை அதிகரித்து வருகிறது. நாய்களுக்கு கருத்தடை செய்யும் மையத்தினை மூடிவிட்டனர். இதனால் பொதுமக்கள் அதிகளவில் பாதிக்கப்படுகின்றனர். எனவே, மாநகராட்சி நாய் கருத்தடை மையத்தை மீண்டும் செயல்படுத்த வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்.
அவரைத் தொடர்ந்து பேசிய அஸ்தம்பட்டி மண்டல குழு தலைவர் உமாராணி, சேலம் மாநகராட்சியில் புதிதாக நடைமுறைப்படுத்த உள்ள சொத்து வரி மற்றும் குடிநீர் வரிகள் குறித்து மாமன்ற கூட்டத்தில் தெளிவாக எடுத்துரைக்க வேண்டும். அதன்பின் மண்டல குழு தலைவர்களிடம் கருத்துக்களை தெரிவித்து. அதன் பின்னர் செய்திகள் வாயிலாக பொதுமக்களுக்கு முறையான தகவல் தெரிவிக்கப்பட்டு அதன்பின்னர் வரிகளை உயர்த்த வேண்டும் என கோரிக்கை வைத்தார்.

தொடர்ந்து பேசிய 23வது அதிமுக மாமன்ற உறுப்பினர் செல்வராஜ், மாநகராட்சியில் சேமிக்கப்படும் குப்பைகளை பயோ கேஸாக மாற்றுவதற்கு தனியார் நிறுவனத்திற்கு ஒப்பந்தம் வழங்கப்பட்டுள்ளது. இதில் பல்வேறு முறைகள் உள்ளதாக குற்றம் சாட்டினார். மேலும், 200 டன் மக்கும் குப்பையை தனியார் நிறுவனத்திற்கு இலவசமாக வழங்குகின்றனர். இதனால் மாநகராட்சிக்கு பல கோடி ரூபாய் இழப்பு ஏற்படுகிறது என்றார். அடிப்படை தேவையை நிறைவேற்றதுக்கு ஒவ்வொரு மாமன்ற உறுப்பினருக்கும் குறைந்தபட்சம் 50 லட்சம் ரூபாய் போதும் என்ற நிலை உள்ளது. மக்கள் வரிப்பணத்தில் மாநகராட்சி மேயருக்கு 40 லட்சம் ரூபாயில் புதிதாக சொகுசு அறை தேவையா? என கேள்வி எழுப்பியதால் சலசலப்பு ஏற்பட்டது. சேலம் மாநகராட்சி மக்களுக்கு அல்போ கொடுத்து விட்டது என கையில் அல்வாவை எடுத்து காட்டியதால் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் இதனை கண்டித்து அதிமுக மாமன்ற உறுப்பினர்கள் அவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர். குறிப்பாக மாநகராட்சியில் "குடிப்பதற்கு தண்ணீர் இல்லை... மாநகராட்சி மேயருக்கு குழு குழு அரை தேவையா?" என கோசங்களை எழுப்பிய படி அதிமுக மாமன்ற உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.

தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த சேலம் மாநகராட்சியின் எதிர்க்கட்சித் தலைவர் யாதவ் மூர்த்தி, மாநகராட்சியில் பல்வேறு முறைகேடுகள் நடைபெறுகிறது. குறிப்பாக பயோ கேஸ் திட்டத்திற்கு தனியார் நிறுவனத்திடம் குறைந்த விலைக்கு குப்பைகளை கொடுக்கின்றனர். மக்கள் மீது வரி தினைக்கப்படுகிறது. குறிப்பாக கோடை காலத்தில் பல பகுதிகளில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படுகிறது. இதனைக் கண்டு கொள்ளாமல் மேயருக்கு 40 லட்சம் செலவில் புதிய சொகுசுவரை கட்டி வருகின்றனர். சேலம் மாநகராட்சியில் மக்களின் வரிப்பணம் வீணடிக்கப்படுகிறது. இதனை கண்டித்து விரைவில் அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளதாக கூறினார்.





















