
Ranipet Jaguar Mega: ராணிப்பேட்டையில் ஜாகுவார் கார், மெகா காலணி உற்பத்தி ஆலை - 25,000 பேருக்கு வேலை - முதலமைச்சர் ஸ்டாலின் அதிரடி
Ranipet Jaguar Mega: ராணிப்பேட்டை மாவட்டத்தில் அமைய உள்ள ஜாகுவார் கார், மெகா காலணி உற்பத்தி ஆலைகளுக்கு, செப்டம்பர் 28ம் தேதி முதலமைச்சர் ஸ்டாலின் அடிக்கல் நாட்டுகிறார்.

Ranipet Jaguar Mega: ராணிப்பேட்டை மாவட்டத்தில் அமைய உள்ள ஜாகுவார் கார், மெகா காலணி உற்பத்தி ஆலைகள் மூலம், 25 ஆயிரம் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் என கூறப்படுகிறது.
செப்.28 அடிக்கல் நாட்டுகிறார் முதலமைச்சர் ஸ்டாலின்:
தமிழ்நாட்டிற்கு முதலீடுகளை ஈர்க்கும் நோக்கில், முதலமைச்சர் ஸ்டாலின் பல்வேறு அதிரட் நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். அதன் பலனாக பல புதிய மற்றும் ஏற்கும் மாநிலத்தில் இயங்கும் நிறுவனங்கள், முதலீடுகளை மேற்கொண்டு வருகின்றன. அந்த வகையில் ராணிப்பேட்டை மாவடத்தில் அமைய உள்ள, இரண்டு முக்கிய ஆலைகளுக்கு வரும் 28ம் தேதி முதலமைச்சர் ஸ்டாலின் அடிக்கல் நாட்ட உள்ளார். அதாவது, பனப்பாக்கம் பகுதியில் சுமார் 400 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட உள்ள, மெகா காலண் உற்பத்தி ஆலைக்கும், அதேபகுதியில் 9 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட உள்ள ஜாகுவார் லேண்ட் ரோவர் கார் உற்பத்தி ஆலைக்கும் , முதலமைச்சர் ஸ்டாலின் அடிக்கல் நாட்ட உள்ளார். இதன் மூலம், 25 ஆயிரம் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் என்பதால், அப்பகுதி இளைஞர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
ஜாகுவார் லேண்ட் ரோவர் கார் உற்பத்தி ஆலை:
பனப்பாக்கம் பகுதியில் 400 ஏக்கர் பரப்பளவில் சுமார் 9 ஆய்ரம் கோடி ரூபாய் பட்ஜெட்டில், ஜாகுவார் லேண்ட் ரோவர் கார் உற்பத்தி ஆலை அமைக்கப்பட உள்ளது. இந்த பிரீமியம் கார் முழுக்க முழுக்க இந்தியாவிலேயே தயாரிக்கப்படுவது இதுவே முதல்முறையாகும். 2025 ஆம் ஆண்டின் இறுதிக்குள் அல்லது 2026 ஆம் ஆண்டின் தொடக்கத்திற்குள் இந்த யூனிட் முழுமையாக செயல்படத் தொடங்கும் என கூறப்படுகிறது. இந்த ஆலையில் முழுக்க முழுக்க மின்சார வாகனங்கள் மட்டுமே தயாரிக்கப்படும் என கூறப்படுகிறது. அதே நேரத்தில் டாடா மோட்டார்ஸ் ஹைபிரிட்கள் உட்பட விரிவான அளவிலான மற்ற வாகனங்களை தமிழ்நாட்டில் உள்ள மற்ற ஆலைகளில் உற்பத்தி செய்யும் என கூறப்படுகிறது. இந்த ஆலை மூலம் நேரடியாக மற்றும் மறைமுகமாக என, 5 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்.
மெகா காலணி உற்பத்தி ஆலை:
அதே பனப்பாக்கம் பகுதியில் 250 ஏக்கர் பரப்பளவில் 400 கோடி ரூபாய் செலவில், மெகா நிறுவனத்தின் காலணி உற்பத்தி ஆலை அமைய உள்ளது. இதன் மூலம், சர்வதேச காலணி உற்பத்தி மற்றும் ஏற்றுமதி மையமாக ராணிப்பேட்டை மாவட்டத்தின் நிலை வலுவடையும் என்று நம்பப்படுகிறது. இந்த உற்பத்தி ஆலையானது 20,000 க்கும் மேற்பட்டவர்களுக்கு, குறிப்பாக பெண்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்கும் என கூறப்படுகிறது.
சென்னை-பெங்களூரு நெடுஞ்சாலையை சார்ந்துள்ள ராணிப்பேட்டை மாவட்டத்தில் இந்த ஆலைகள் அமைவதால், உற்பத்தியாளர்கள் மற்றும் உதிரிபாக சப்ளையர்களுக்கு பயணம் மிக எளிதானதாக இருக்கும். மேலும், சென்னை மற்றும் எண்ணூர் துறைமுகங்களுக்கு அருகாமையில் இருப்பதால், டாடா மோட்டார்ஸ் மற்றும் மெகா நிறுவனங்கள் பனப்பாக்கம் பகுதியை தேர்வு செய்துள்ளன.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

