மங்கள்யான்-2 திட்டத்தில் இஸ்ரோ.! பிரதமர் மோடியின் ஒப்புதலுக்கு காத்திருப்பு..திட்டம் என்ன?
Mangalyaan-2: செவ்வாய் கோளில் விண்கலத்தை தரையிறக்கி, ரோவரில் ஊர்ந்து சென்று ஆய்வு செய்யும் வகையிலான திட்டத்திற்கு பிரதமரின் ஒப்புதலுக்காக காத்திருக்கிறது, இஸ்ரோ. மங்கள்யான்-2 திட்டம் என்றால் என்ன?

செவ்வாய் கிரகத்தை சுற்றி வரக்கூடிய செயற்கைக்கோளை ஏற்கனவே இஸ்ரோ அனுப்பிய நிலையில், தற்போது புதிய விண்கலத்தை தரையிறக்கும் வகையிலான ஒரு புதிய பயண திட்டத்தை இஸ்ரோ திட்டமிட்டுள்ளது. இந்நிலையில், பிரதமரின் தலைமையிலான கேபினட் ஒப்புதலுக்காக காத்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
மங்கள்யான் திட்டம் -1:
மங்கள்யான் -1 திட்டப்படி, 2014 ஆம் ஆண்டு செவ்வாய் கிரகத்திற்கு, செயற்கைகோளை அனுப்பியது இஸ்ரோ. அந்த விண்கலம் வெற்றிகரமாக செவ்வாய் சுற்றுப்பாதையில் நுழைந்தது. இந்த திட்டமானது, இந்தியாவை உலகையே திரும்பி பார்க்க வைத்தது.
அதற்கு காரணம், குறைந்த செலவில் அனுப்பியது மட்டுமல்லாமல், செவ்வாய் கிரகத்தின் சுற்றுப்பாதையை அடைந்த முதல் ஆசிய நாடாகவும், மேலும், முதல் முயற்சியிலேயே வெற்றியடைந்த, உலகின் முதல் நாடு என்ற சாதனையை படைத்ததே காரணம்.

மங்கள்யான் திட்டம் -2
இந்நிலையில் இஸ்ரோவை தனது ஆய்வு முயற்சிகளை ஒரு படி மேலே கொண்டு செல்லும் வகையில், செவ்வாய் கிரகத்தில் அடுத்தகட்ட ஆய்வை மேற்கொள்ளும் வகையில், மங்கள்யான் 2 திட்டத்திற்கு திட்டமிட்டுள்ளது.
மங்கள்யான் -2 திட்டமானது, செவ்வாய் கிரகத்தின் அதிநவீன அறிவியல் ஆய்வுகளை மேற்கொள்ள நோக்கமாகக் கொண்டுள்ளது. இதன்படி செவ்வாய் கிரகத்தின் மேற்பரப்பில் ஒரு லேண்டர் மற்றும் ரோவரை தரையிறக்க திட்டமிடப்பட்டுள்ளது.மங்கள்யான்-2 என்றும் அழைக்கப்படும் மார்ஸ் லேண்டர் மிஷன், அதாவது செவ்வாய் கிரகத்தில் விண்கலத்தை தரையிறக்கி, ரோவர் மூலம் சில தூரம் ஊர்ந்து சென்று, ஆய்வு செய்ய திட்டமிட்டுள்ளது.
Also Read: Pakistan Moon: நிலவுக்கு விண்கலத்தை அனுப்பும் பாகிஸ்தான்: நல்ல பெயரை சொன்னால் 1 லட்சம் பரிசு!
பிரதமர் ஒப்புதல்:
மங்கள்யான் -2 திட்டமானது விண்வெளி ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்டு விட்டது. தற்போது பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவையின் இறுதி ஒப்புதலுக்காகக் காத்திருக்கிறது.
இதுமட்டுமன்றி வருங்காலத்தில் பல்வேறு முக்கிய திட்டங்களை செயல்படுத்த, இஸ்ரோ திட்டமிட்டுள்ளது. 2035க்குள் இந்திய விண்வெளி நிலையத்தை அமைப்பதும், 2040க்குள் முதல் இந்தியரை நிலவுக்கு அனுப்புவதும் இஸ்ரோவின் வருங்கால திட்டத்திற்குள் அடங்கும்.

செவ்வாய் கிரகத்தைத் தவிர சந்திராயன் 4 திட்டம், வெள்ளி கோளை சுற்றி வரக்கூடிய செயற்கைகோளை அனுப்புவது உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை இஸ்ரோ திட்டமிட்டுள்ளது.
இஸ்ரோ, இந்திய நாட்டின் செயற்கைக்கோள்களை அனுப்புவது மட்டுமன்றி வெளிநாடுகளின் செயற்கைக்கோள்களையும் விண்ணில் அனுப்பி வணிக ரீதியாகவும் வெற்றியை பதித்து வருகிறது, இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம்.






















