Kongu Food Festival: களேபரமான கொங்கு உணவுத் திருவிழா; கொந்தளித்த கோவையன்ஸ்- நடந்தது இதுதான்!
Kongu Food Festival Issue: கோவை மக்கள், இத்தனை ரூபாய் பணம் கட்டியும், யாசகர்கள் போன்று கூட்டத்துக்கு நடுவில் தட்டை ஏந்தி நிற்க வேண்டி இருக்கிறதே? இதுதான் நடந்துகொள்ளும் முறையா? என்று குமுறினர்.
கோவை, கொடீசியா அரங்கத்தில் நடைபெற்ற கொங்கு உணவுத் திருவிழாவில் முன்னேற்பாடுகள் உரிய வகையில் செய்யப்படாததால், தள்ளுமுள்ளு ஏற்பட்டதுடன் உணவும் சரியாகக் கிடைக்கவில்லை. இதனால் கோவை மக்கள் கொந்தளித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கோவையில் நடந்த கொங்கு உணவுத் திருவிழா!
கோவை மாவட்டம் கொடீசியா அரங்கத்தில் தமிழ்நாடு கேட்டரர்கள் சங்கம் சார்பில் நவம்பர் 30, டிசம்பர் 1 ஆகிய தேதிகளில், கொங்கு உணவுத் திருவிழா நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது.
அசைவ, சைவ உணவுகள் 400 வகைகள் சமைக்கப்பட்டு உள்ளதாகவும் அறுசுவையுடன் காத்திருப்பதாகவும் விளம்பரம் செய்யப்பட்டது. நூற்றுக்கும் மேற்பட்ட கேட்டரிங் நிறுவனங்களில் இதில் பங்கேற்கும் என்று தெரிவிக்கப்பட்டது. இதற்கான கட்டணமாக பெரியவர்களுக்கு 799 ரூபாயும் குழந்தைகளுக்கு 499 ரூபாயும் நிர்ணயிக்கப்பட்டு இருந்தது. ரசிக்கலாம், ருசிக்கலாம் என்ற வாசகத்தோடு விளம்பரம் செய்யப்பட்டது.
முழுமையாக விற்றுத் தீர்ந்த டிக்கெட்டுகள்
ஆன்லைன் முன்பதிவு நிறுவனமான புக் மை ஷோ மூலம் மட்டுமே டிக்கெட் விற்கப்பட்டது. எதிர்பார்ப்பு அதிகமாக இருந்ததாலும் சனி, ஞாயிறு என வார இறுதி என்பதாலும் டிக்கெட்டுகள் முழுமையாக விற்றுத் தீர்ந்தன.
இந்த நிலையில் இரண்டு நாட்களிலுமே கூட்டம் அள்ளியது. எனினும் சரியாக முன்னேற்பாடுகள் செய்யப்படாததால், தள்ளுமுள்ளு ஏற்பட்டது. தட்டைப் பெறவே நீண்ட வரிசையில் மக்கள் காத்திருந்தனர்.
கட்டுக்கடங்காத கூட்டம்; கணக்கில்லாமல் குறைகள்
மெலிதான, சிறிய தட்டைக் கொடுத்ததால் சில உணவு வகைகள் மட்டுமே அதில் வைக்க முடிந்தது. மீண்டும் தட்டை வாங்க, மேலும் நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டி இருந்தன. உணவு வகைகள் சுமாராக இருந்ததாகக் குற்றச்சாட்டு எழுந்தது. அதேபோல, மிகவும் குறைவாக ஸ்பூனில்தான் உணவு பரிமாறப்பட்டதாகவும் கூறப்படுகிறது. மேலும் சிலர் ஐஸ்கிரீமாவது சாப்பிடலாம் என்று கேட்டதற்கு, ஐஸ்க்ரீம் உள்ளிட்ட வகைகள் மாலை 6 மணிக்கு மேல்தான் அளிக்கப்படும் என்று சில ஐஸ்க்ரீம் நிறுவனங்கள் அளிக்க மறுத்துவிட்டன.
யாசகர்கள் போன்று தட்டை ஏந்தி நிற்க வேண்டி இருக்கிறதே?
இதனால் கோவை மக்கள், இத்தனை ரூபாய் பணம் கட்டியும், யாசகர்கள் போன்று கூட்டத்துக்கு நடுவில் தட்டை ஏந்தி நிற்க வேண்டி இருக்கிறதே? இதுதான் விழா ஏற்பாட்டாளர்கள் நடந்துகொள்ளும் முறையா? என்று குமுறினர்.
இதுதொடர்பான பதிவுகள் ஃபேஸ்புக், எக்ஸ் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் அதிகம் பதிவிடப்பட்டு வருகின்றன. கொங்கு மக்கள், விதவிதமாக ஏமாந்துபோகிறார்கள் என்றும் அதில் விமர்சிக்கப்பட்டு வருகின்றன.