“அதிகார போதை! பில்டப்! ஸ்டாலின் ஒரு....” - பதிலுக்கு பதில் இறங்கி அடிக்கும் இபிஎஸ்
எடப்பாடி பழனிசாமி வைக்கும் குற்றச்சாட்டுகளை நான் மதிப்பதில்லை. - ஸ்டாலின்
அதிகார போதையில் என்ன பேசுகிறோம் என்றே தெரியாமல் முதலமைச்சர் ஸ்டாலின் பேசுகிறார் என எதிக்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார்.
இதுகுறித்து அவர் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “நேற்று கூட ஸ்டாலின் சொல்லியிருக்கிறார். எடப்பாடி கொடுக்கும் அறிக்கைக்கோ, பேட்டிக்கோ பதில் சொல்ல எனக்கு விருப்பம் இல்லை என்று சொல்லியிருக்கிறார். அப்படி விருப்பம் இல்லாத காரணத்தால்தான் இப்படி இருக்கு. நாங்கள் கொடுக்கும் எச்சரிக்கையை ஊடகத்தின் வாயிலாகவாவது தெரிந்து கொண்டு கடைபிடித்திருந்தால் நேற்றைய தினம் விழுப்புரம் மக்கள் கனமழையால் பாதிக்கப்பட்டிருக்கமாட்டார்கள். குறிப்பிட்ட ஏரியை தூர்வாரியிருந்தால் மக்கள் பாதிக்கப்பட்டிருக்கமாட்டார்கள்.
ஆகவே அலட்சியமாக பதில் சொல்லுகிற முதலமைச்சரை கண்டிக்கிறோம். ஒரு பிரதான எதிர்க்கட்சி முக்கிய பிரச்சினையை முன் வைக்கிறோம். கும்பகர்ணன் போல் அரசு தூங்கிக்கொண்டிருக்கிறது. அதை தட்டி எழுப்பி குறைகளை சுட்டிக்காட்டுகிறோம். அப்போதாவது விழித்துக்கொண்டு அரசு நடவடிக்கை எடுத்திருந்தால் மக்கள் பாதிக்கப்படமாட்டார்கள். அவதிக்குள்ளாகியிருக்கமாட்டார்கள். அதிகார போதையில் என்ன பேசுகிறோம் என்றே தெரியாமல் பேசும் முதலமைச்சர் தற்போதைய முதலமைச்சர். மக்கள் பிரச்சினையை கவனிக்காத ஒரு முதலமைச்சர் தமிழ்நாடு முதலமைச்சர். அதுமட்டுமில்லாமல் நேற்று ஒரு அறிக்கை விடுகிறார். 24 மணிநேரத்தில் சென்னையின் அனைத்து சாலைகளிலும் மழை நீர் வடிந்துவிட்டது என்று. இன்றைக்கு விழுப்புரத்தில் கனமழை பெய்துள்ளது. இது 24 மணிநேரத்தில் சரியாகுதா என்று பார்ப்போம். அதுதான் சாதனை. சென்னையில் 8 செ.மீ மழைதான் பெய்திருக்கும். அதை வைத்துக்கொண்டு பில்டப் செய்கிறார் முதலமைச்சர். விழுப்புரம் மழைக்கு என்ன செய்கிறார் என்று பார்க்கலாம்” எனத் தெரிவித்துள்ளார்.
முன்னதாக, நேற்று முதலமைச்சர் ஸ்டாலின் செய்தியாளர்களை சந்திக்கும்போது ஃபெங்கால் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து எடப்பாடி பழனிசாமி வைக்கும் குற்றச்சாட்டுகள் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த முதலமைச்சர் ஸ்டாலின் “எடப்பாடி பழனிசாமி வைக்கும் குற்றச்சாட்டுகளை நான் மதிப்பதில்லை. எதையும் எதிர்கொள்ள சென்னை தயார் நிலையில் உள்ளது. என் தொகுதி மட்டுமல்ல. சென்னையில் மழை பெய்தால் எங்கெல்லாம் தண்ணீர் தேங்குமோ அங்கெல்லாம் தண்ணீர் தேங்குவதில்லை. எதிர்க்கட்சி தலைவருக்கு குற்றச்சாட்டு வைப்பதே வேலையா போச்சு. ஓட்டு போட்டவர்களுக்கு மட்டுமல்ல. ஓட்டு போடாதவர்களுக்கும் சேர்த்து தான் வேலை பார்த்துக்கொண்டு இருக்கிறோம். அதுதான் எங்கள் குறிக்கோள். அதுதான் எங்கள் கொள்கை” எனத் தெரிவித்தார்.