IT Raid: பரபரப்பு.. செந்தில் பாலாஜி நண்பர் வீட்டில் வருமான வரித்துறை சோதனை...! என்ன நடக்கிறது..?
அமைச்சர் செந்தில் பாலாஜியின் நண்பர் கொங்கு மெஸ் மணி வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.
அமைச்சர் செந்தில் பாலாஜி மீது பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகள் இருந்து வந்த நிலையில், அவர் அமலாக்கத்துறையினரால் கைது செய்யப்பட்டார். இது தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. செந்தில் பாலாஜி கைது விவகாரம் தமிழக அரசியலில் ஏற்படுத்திய பரபரப்பு அடங்குவதற்குள் மீண்டும் பரப்பான சூழல் ஏற்பட்டுள்ளது.
செந்தில் பாலாஜி நண்பர் வீடு:
கரூர் ராயனூர் பகுதியில் அமைந்துள்ளது கொங்கு மெஸ் மணி என்பவரது வீடு. இவர் அமைச்சர் செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர் ஆவார். இந்த நிலையில், இவரது வீட்டில் இன்று காலை முதல் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். இதற்காக ஏராளமான போலீசார் அங்கு குவிக்கப்பட்டுள்ளனர்.
கரூரில் ஏற்கனவே அமைச்சர் செந்தில் பாலாஜி, அவரது சகோதரர் அசோக்குமார் ஆகியோரது வீடுகள் மற்றும் அலுவலகங்கள் மற்றும் அவர்களுக்கு நெருக்கமானவர்களது வீடுகளில் நடத்தப்பட்ட சோதனை பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், தற்போது மீண்டும் இதுபோன்ற வருமான வரித்துறை சோதனை நடைபெற்று வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அமலாக்கத்துறை சோதனை:
முன்னதாக, கடந்த ஜூன் மாதம் 13-ந் தேதி சென்னை மற்றும் கரூரில் உள்ள செந்தில் பாலாஜியின் வீடுகளில் அமலாக்கத்துறையினர் காலை முதல் சோதனை நடத்தினர். தலைமை செயலகத்தில் உள்ள அவருக்கான அமைச்சர் அறையிலும் அமலாக்கத்துறை சோதனை நடத்தினர். இந்த சோதனையில் பல்வேறு ஆவணங்கள் அமலாக்கத்துறையினரால் கைப்பற்றப்பட்டதாக தகவல்களும் வெளியானது.
இந்த சூழலில், கடந்த மாதம் 14-ந் தேதி அதிகாலை செந்தில் பாலாஜியை அதிகாரிகள் கைது செய்தனர். ஆனால், அவர் தனக்கு நெஞ்சு வலி ஏற்படுவதாக கூறினார். பின்னர், அவரை ஓமந்தூரரார் அரசு மருத்துவமனைக்கு அதிகாரிகள் அழைத்துச் சென்றனர். அங்கு அனுமதிக்கப்பட்ட செந்தில் பாலாஜியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள் நேரில் சென்று நலம் விசாரித்தனர்.
நீதிமன்ற விசாரணை:
பின்னர், ஆழ்வார்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்ட செந்தில் பாலாஜிக்கு பை-பாஸ் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. தற்போது மருத்துவர்கள் கண்காணிப்பில் செந்தில் பாலாஜி சிகிச்சையில் உள்ளார். மேலும், செந்தில் பாலாஜி விவகாரத்தில் அவரை இலாகா இல்லாத அமைச்சராக தமிழக அரசு மாற்றியதும், அவரை பதவிநீக்கம் செய்து ஆளுநர் உத்தரவிட்டதும் தமிழ்நாட்டில் மேலும் பரபரப்பை ஏற்படுத்தியது.
தமிழக அரசியலில் பல்வேறு பரபரப்பை ஏற்படுத்தியுள்ள செந்தில் பாலாஜி விவகாரத்தில், தற்போது அடுத்த நெருக்கடியாக வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். அதேசமயம், செந்தில் பாலாஜி வழக்கு தொடர்பாக 3வது நீதிபதி முன்பு சென்னை உயர்நீதிமன்றத்தில் தற்போது விசாரணை நடைபெற்று வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க: ADMK: எடப்பாடி பழனிசாமிதான் அதிமுக பொதுச்செயலாளர் - அங்கீகரித்தது இந்திய தேர்தல் ஆணையம்
மேலும் படிக்க: 17 வயது சிறுமிக்கு கருகலைப்பு?: அரசு மருத்துவரிடம் ரூ.12 லட்சம் கேட்டு மிரட்டிய ஆய்வாளர் சஸ்பெண்ட்!