High Court: தமிழ்நாடு உள்துறை செயலாளருக்கு ரூ.10,000 அபராதம் - உயர்நீதிமன்ற மதுரைக்கிளை அதிரடி.. நடந்த தவறு என்ன?
தமிழ்நாடு உள்துறை செயலாளர் நீதிமன்ற உத்தரவை செயல்படுத்தவில்லை என ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.
பாலியல் துன்புறுத்தலால் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ஒரு லட்சம் நிதி உதவி அளிக்க ராமநாதபுரம் மாவட்ட சிறப்பு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை உடனடியாக நிறைவேற்ற கோரிய வழக்கில் உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.
வழக்கின் பின்புலம் என்ன?
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி பகுதியைச் சேர்ந்த ராமலட்சுமி என்பவர் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில், பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த நான் எனது கணவர் மற்றும் மூன்று குழந்தைகளுடன் தவளைகுளம் பகுதியில் வசித்து வருகிறேன். எங்களது பகுதியில் வசிக்கக்கூடிய வேலுச்சாமி என்பவர் கடந்த டிசம்பர் 2020 ஆம் ஆண்டு எனது 7 வயது மகளை பாலியல் ரீதியாக துன்புறுத்தினார். இதுகுறித்து பரமக்குடி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தேன். அதன் அடிப்படையில் போலீசார் போக்சோ சிறப்பு வழக்கில் அவரை கைது செய்தனர்.
இந்த வழக்கு ராமநாதபுரம் சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்றது. வழக்கில் எனது மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தது உறுதி செய்யப்பட்டு குற்றவாளிக்கு ஏழு வருட சிறை தண்டனையும் பாதிக்கப்பட்ட எனது மகளுக்கு ஒரு லட்ச ரூபாய் இழப்பீடு வழங்கவும் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. இந்த ஒரு லட்சத்தை ஒரு மாதத்திற்குள் எங்களுக்கு வழங்க மார்ச் 2022 ல் நீதிமன்றம் உத்தரவிட்டது. இது குறித்து மாவட்ட ஆட்சியர் மற்றும் உள்துறை செயலருக்கு மனு அனுப்பினோம். இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை. எனவே வறுமையில் வாடும் எனது குடும்பத்திற்கு நீதிமன்ற உத்தரவுப்படி ஒரு லட்சத்தை வழங்க உத்தரவு பிறப்பிக்குமாறு” மனுதாரர் கோரிக்கை விடுத்து இருந்தார்.
மனுதாரர் தரப்பு கோரிக்கை:
இந்த வழக்கு இன்று நீதிபதி புகழேந்தி முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் பாலியல் ரீதியான பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ஒரு லட்சம் உதவி தொகை வழங்க அறிவித்து ஒரு வருடம் ஆகிவிட்டது. இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே அந்த இழப்பீட்டுத் தொகையை உடனடியாக வழங்க உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என வாதிட்டார்.
உள்துறை செயலாளருக்கு அபராதம்:
இதனைத் தொடர்ந்து பேசிய நீதிபதி புகழேந்தி, ”போக்சோ வழக்கில் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு உதவித்தொகை வழங்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஒரு வருட காலமாகியும் இதுவரை உதவித்தொகை வழங்கவில்லை என்பது ஏற்கத்தக்கது அல்ல. எனவே பாதிக்கப்பட்ட சிறுமிக்கு 6 சதவீத வட்டியுடன் உடனடியாக உதவித்தொகை வழங்க வேண்டும். மேலும் உதவித்தொகை வழங்குவதில் காலதாமதம் செய்த உள்துறைச் செயலாளருக்கு பத்தாயிரம் அபராதம் விதிக்கப்படுகிறது. இந்த பத்தாயிரம் அபராத தொகையையும் சேர்த்து சிறுமிக்கு வழங்க வேண்டும்” என கூறி வழக்கை முடித்து வைத்தார்.