Government Hospitals: மருத்துவர்களுக்கு செக்...! கலெக்டர்களுக்கு பறந்த உத்தரவு - சுகாதாரத்துறை செயலாளர் அவசர கடிதம்
சரியான நேரத்தில் மருத்துவர்கள் பணியில் இருப்பதை உறுதி செய்ய அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் சுகாதாரத்துறை செயலாளர் ககன்தீப் சிங் பேடி கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.

சரியான நேரத்தில் மருத்துவர்கள் பணியில் இருப்பதை உறுதி செய்ய அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் சுகாதாரத்துறை செயலாளர் ககன்தீப் சிங் பேடி கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.
தமிழ்நாட்டில் பல்வேறு படிநிலைகளில் அரசு மருத்துவமனைகள் செயல்பட்டு வருகிறது. இங்கு மருத்துவர்கள், செவிலியர்கள், பணியாளர்கள் சரியான நேரத்தில் பணிக்கு வருவது இல்லை என்ற புகார்கள் அவ்வப்போது எழுவது வழக்கம். இதுதொடர்பாகவும், சிகிச்சையில் ஏதாவது பிரச்சினை ஏற்பட்டாலும் உடனடியாக அரசு நடவடிக்கை எடுத்தும் வருகிறது. இப்படியான நிலையில் தென்காசி அரசு மருத்துவமனையில் நடைபெறும் அவலங்களை ராஜாமணி என்பவர் வீடியோவாக எடுத்து வெளியிட்டார். உடனடியாக இந்த தகவல் சுகாதாரத்துறை அதிகாரிகள் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.
இந்த நிலையில் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் சுகாதாரத்துறை செயலாளர் ககன்தீப் சிங் பேடி கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில் அரசு மருத்துவமனையில் மருத்துவர்கள் பணி நேரம், உள் மற்றும் வெளி நோயாளிகள் சிகிச்சைப் பெறும் நேரம் உள்ளிட்ட பல தகவல்கள் அடங்கியுள்ளது. மேலும் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள், அரசு மருத்துவமனைகள், அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் மருந்தகங்களில் சேவைகள் சரியான நேரத்தில் தொடங்கப்படுகிறதா என்பதை கண்காணிக்க வேண்டும்.
இதில் டீன்கள், மருத்துவ சேவைகள் இணை இயக்குநர் மற்றும் சுகாதாரப் பணிகள் துணை இயக்குநர் தங்கள் தனிப்பட்ட கவனத்தைச் செலுத்தி கண்காணிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசு கல்லூரி மருத்துவமனைகள்
- வெளிநோயாளிகள் பிரிவுக்கு பொறுப்பான மருத்துவர்கள், பணியாளர்கள் காலை 7.30 மணி முதல் மதியம் 12.00 மணி வரை பணியில் இருக்க வேண்டும். 24 மணி நேரமும் உள்நோயாளிகள் சேர்க்கையை கண்காணிக்க வேண்டும்.
- மற்ற மருத்துவர்கள் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை
- மருத்துவ கண்காணிப்பாளர் காலை 8 மணி முதல் அவசரகால அடிப்படையில் 24 மணி நேரமும் பணியில் இருக்க வேண்டும்.
அரசு தலைமை மருத்துவமனை மற்றும் பிற அரசு மருத்துவமனைகள்
- வெளிநோயாளிகள் சிகிச்சை நேரங்கள்: காலை 7.30 மணி முதல் மதியம் 12.00 மணி வரை
- 24 மணி நேர பணியில் இருக்கும் மருத்துவர்கள் மாலை 3 மணி முதல் 5 மணி வரை வெளிப்புற நோயாளிகள் சிகிச்சையில் இருக்க வேண்டும்
- பல் மற்றும் பிசியோதெரபிஸ்ட் மருத்துவர்கள் காலையில் 8 மணி முதல் மதியம் 1 மணி வரையும், மதியம் 3 மணி முதல் 5 மணி வரை வெளிப்புற நோயாளிகளை கவனிக்க வேண்டும்.
-
தலைமை மருத்துவ அதிகாரிகள் (நிர்வாகம்) - காலை 7.30 மணி முதல் மதியம் 1.30 மணி வரையும், மதியம் 3 மணி முதல் மாலை 5 மணி வரை இருக்க வேண்டும்
அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள்
- 1 முதல் 3 பணியாளர்களை கொண்ட ஆரம்ப சுகாதார நிலையங்களில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை வெளிநோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க வேண்டும்.
- 5 வரையிலான பணியாளர்களை கொண்ட சுகாதார நிலையங்களில் காலை 8 மணி முதல் 2 மணி வரையும்(2 பேர்), மதியம் 2 மணி முதல் மறுநாள் காலை 8 மணி வரையும் (ஒருவர்) பணியில் இருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

