EPS Press Meet: வேளாண் பட்ஜெட்டால் எந்த நன்மையும் இல்லை.. விவசாயிகளை ஏமாற்றும் வேலை - எடப்பாடி பழனிசாமி
தமிழக அரசு தாக்கல் செய்த வேளாண் பட்ஜெட்டால் எந்த நன்மையும் இல்லை என்றும், இது விவசாயிகளை ஏமாற்றும் செயல் என்றும் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு சட்டமன்றத்தில் வேளாண் பட்ஜெட்டை வேளாண் அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட் குறித்து எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது, அவர் கூறியதாவது,
நன்மை இல்லை:
"விடியா தி.மு.க. அரசு வேளாண் பட்ஜெட் என்று தாக்கல் செய்யப்பட்டிருப்பது விவசாயிகளை ஏமாற்றும் பட்ஜெட்டாக பார்க்கப்படுகிறது. வேளாண்மை மாநில கோரிக்கையில் என்ன இடம்பெற்றிருந்ததோ, அதுதான் வேளாண் பட்ஜெட்டில் இடம்பெற்றிருக்கிறது.
விவசாயிகளுக்கு எந்த நன்மையும் கிடைப்பதாக தெரியவில்லை. வேளாண் மானியக் கோரிக்கையில் என்னனென்ன அம்சங்கள் இடம்பெற்றதோ, அதுதான் இடம்பெற்றுள்ளது. விவசாயிகளுக்கு பெரிய திட்டங்கள் ஏதும் இடம்பெறவில்லை. பல துறைகளை ஒருங்கிணைத்து வேளாண் பட்ஜெட் என்று வேளாண் அமைச்சர் 2 மணிநேரம் வாசித்திருக்கிறார்.
ஏமாற்று வேலை:
2 மணி நேர வேளாண் பட்ஜெட்டில் பேசியதில் விவசாயிகளுக்கு முக்கியமாக கிடைக்க வேண்டிய நன்மைகள் ஏதுமில்லை. 2021 சட்டமன்ற தேர்தலின்போது, அன்றைய எதிர்க்கட்சி தலைவர், இன்றைய முதலமைச்சர் ஸ்டாலின் தி.மு.க. சார்பில் தேர்தல் அறிக்கையை வெளியிட்டார். தி.மு.க. ஆட்சி பொறுப்பேற்றவுடன் கரும்புக்கு ஆதார விலை 4 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்றார்.
ஆனால், இப்போது வேளாண் பட்ஜெட்டை நிதியமைச்சர் வாசிக்கிறபோது வெறும் ரூபாய் 195தான் ஊக்கத்தொகை வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார். இது மிகப்பெரிய ஏமாற்று வேலை. தி.மு.க. ஆட்சிக்கு வந்தவுடன் விவசாயிகளுக்கு கரும்புக்கு வழங்க வேண்டிய நிலுவைத்தொகை முழுவதும் வழங்கப்படும் என்றனர். அதைப்பற்றிய எந்த அறிவிப்பும் இல்லை. நெல் சாகுபடி செய்யும் விவசாயிகள் தி.மு.க. தேர்தல் அறிக்கையில் ஆட்சிக்கு வந்தவுடன் குவிண்டாலுக்க 2 ஆயிரம் வழங்கப்படும் என்றனர்.
விவசாயிகளை ஏமாற்றும் அரசு:
ஆனால், இப்போது ரகங்களை பிரித்து வழங்கப்படும் என்று அறிவித்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 3வது முறையாக தாக்கல் செய்யப்படும் இந்த பட்ஜெட்டில் மிகவும் எதிர்பார்த்தனர். ஆனால், இந்த வேளாண் பட்ஜெட்டில் அது இடம்பெறாதது ஏமாற்றம் அளிக்கிறது. விவசாயிகளை ஏமாற்றும் அரசாகதான் உள்ளது.
பயிர் காப்பீட்டு திட்டத்திலே இந்தியாவிலே அதிகளவு இழப்பீடு பெற்றுத்தந்த அரசு அ.தி.மு.க. அரசு. வறட்சி வந்த பிறகு விவசாயிகளுக்கு அதிகளவு இழப்பீடு வழங்கியதும் அ.தி.மு.க. அரசு. தி.மு.க. ஆட்சி பொறுப்பேற்ற பிறகு விவசாயிகள் இயற்கை சீற்றத்தால் பாதிக்கப்படும்போது அவர்களுக்கு இழப்பீடாக ரூபாய் 13,500 தான் அளித்துள்ளனர். ஆனால், அ.தி.மு.க. அரசில் நானே நேரடியாக விவசாயிகளை நேரில் சென்று ஆறுதல் கூறி இழப்பீடு ரூபாய் 20 ஆயிரம் அளித்தோம்.
வீணாகும் நெல்மூட்டை:
விவசாயிகள் கட்டிய ப்ரிமீயம் தொகை கூட விவசாயிகளுக்கு கிடைக்கவில்லை. அப்படிப்பட்ட அவலநிலைதான் இந்த ஆட்சியில் உள்ளது. நெல் மூட்டைகளை உடனடியாக கொள்முதல் செய்வதில்லை. இதனால், பல லட்சம் நெல்மூட்டைகளை பார்த்தோம். விவசாயிகள் பாதிக்கப்படுவதை தி.மு.க. ஆட்சி நெல்மணி அளவும் கண்டுகொள்ளவில்லை. இதனால், விவசாயிகள் மிகுந்த நஷ்டத்திற்கு ஆளாகியுள்ளனர். கடலூரில் 60 ஆயிரம் நெல் மூட்டைகள் மழையில் நனைந்து வீணாகிவிட்டது. நெல்மூட்டைகளை பாதுகாப்பதற்கு தார்ப்பாய்களை ஏற்பாடு செய்ய வேண்டும்.
அ.தி.மு.க. ஆட்சியில் நீர்நிலைகளை பாதுகாக்க குடிமராமத்து திட்டம் கொண்டு வந்தோம். அ.தி.மு.க. அரசின் திட்டம் என்பதற்காக அப்படியே கைவிட்டுவிட்டார்கள். கோதாவரி – காவேரி திட்டத்திற்கு முக்கியத்துவம் அளிக்கப்படவில்லை. காவிரி- குண்டாறு திட்டத்தின் முதற்கட்ட பணிகள் நடைபெற்ற நிலையில், அதற்கு நிதி ஒதுக்கீடு செய்யாதது கண்டனத்திற்குரியது. உபரி நீர் வெளியேறும்போது 5 மாவட்ட மக்கள் பயன்பெறுவார்கள். அதற்கான நிதியையும் அரசு ஒதுக்கவில்லை. வேளாண் பட்ஜெட் என்ற மாயத்தோற்றத்தை வெளியிட்டுள்ளனர். இந்த அரசு தமிழக விவசாயிகள் வாழ்வில் கண்ணாமூச்சி ஆட்டம் காட்டியுள்ளது."
இவ்வாறு அவர் கூறினார்.