திருவண்ணாமலை கிரிவலம் போறீங்களா? இடுக்குப் பிள்ளையாரை பாக்க மறக்காதீங்க..
திருவண்ணாமலை அண்ணாமலையாரை தரிசனம் செய்து கிரிவலம் செல்லும் பக்தர்களின் உடல் வலியை நீக்கும் இடுக்கு பிள்ளையார் கோவிலுக்குப் போய் தரிசனம் செய்ய மறந்திடாதீங்க
உலக பிரசித்தி பெற்ற திருத்தலமாகவும் பஞ்சபூத தலங்களில் அக்னித்தலமாக விளங்குவது திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோயில். இத்திருக்கோயிலின் பின்புறத்தில் மலையே சிவனாக காட்சியளிக்கிறார். மலையைச் சுற்றிலும் சுமார் 14 கிலோ மீட்டர் தூரம் கிரிவலப்பாதை அமைந்துள்ளது. இந்த கிரிவல பாதையை பௌர்ணமி மற்றும் தீபத் திருவிழா உள்ளிட்ட விசேஷ நாட்களில் பக்தர்கள் வருகை தந்து கிரிவலம் செல்வது வழக்கம்.
கிரிவலம் பாதையைச் சுற்றிலும் அஷ்ட லிங்கங்கள் அமைந்துள்ளது. கிரிவலப் பாதையில் பல்வேறு கோயில்கள் உள்ளது. அதில் குபேர லிங்கம் அடுத்தபடியாக பழமை வாய்ந்த இடுக்கு பிள்ளையார் கோவில் அமைந்துள்ளது. அப்படி இந்த இடுக்கு பிள்ளையார் கோவிலில் என்ன ஸ்பெஷல் இருக்கு? என நினைப்பீர்கள். இந்த இடுக்கு பிள்ளையார் கோயில் அளவில் சிறியது அறிவில் மிகப்பெரியது. இந்த இடுக்கு பிள்ளையார் கோவிலை பார்த்தவுடன் அனைவரும் வாயை பிளந்து நிற்கும் அளவிற்கு கோயிலின் அமைப்பு இருக்கும்.
கோயிலின் உள்ளே நுழைந்து வரலாம்
அப்படி இந்த கோயிலில் என்னவென்றால் சிறிய குகை போன்ற அமைப்புடன் மூன்று வாசல்கள் கொண்ட கோயில் ஆகும். அதன் முன்னாள் நந்தியும், பின்புறத்தில் பிள்ளையார் உள்ளனர். கோயிலில் பின் வாசல் வழியாக ஒருகளித்து படுத்தவாறு உள்ளே நுழைய வேண்டும். மெதுமெதுவாக கையூன்றி நகர்ந்து, நகர்ந்து முன் வாசல் வழியாக வெளிவர வேண்டும். முழுதாக வெளியே வரும்போது நந்தி சிலை முன்பு இருக்கும். ஆனால் வெளியே வந்து நந்தியை தொட்டு வணங்கி விட்டு எழுந்து நின்று பார்த்தால் அதற்குள் தான் நாம் வந்தோமா? என்று தோன்றும்
உடற்பருமன் இருப்பின் இதில் நுழைந்து சிரமப்பட வேண்டாம். மனதார வழிபட்டாலே போதும். சகல நன்மையும் கிடைக்கும் என்பது நம்பிக்கை
இடுக்குப் பிள்ளையார் கோயிலின் சிறப்புகள்
இடுக்கு பிள்ளையார் கோயில் நேர்கோட்டில் அமையாத நிலையில் மூன்று வாசல்கள் உள்ளது. இதில் பின் வாசல் வழியாக நுழைந்து ஒருகளித்து படுத்தவாரு வளைந்து தவழ்ந்து இரண்டாவது வாசலில் நுழைந்து முன் வாசல் வழியாக வெளிவர வேண்டும். இடுக்கு பிள்ளையார் வழிபட்டால் குழந்தை வரம் கிடைக்கும் என்பது ஐதீகம். இது கோவிலில் நுழைந்து வருவதால் தலைவலி, பில்லி, சூனியம், உடல் வலி, பிற நோய்கள் தீரும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது.
கிரிவலம் வரும்போது நடந்து வந்த வலி குறையும் என்பது ஐதீகம். நீண்ட வரிசையில் நின்று இடுக்கு பிள்ளையார் கோவிலில் நுழைந்து வெளிவதற்காக பக்தர்கள் காத்திருந்து விநாயகரை தரிசிக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த கோவில் 24 மணி நேரமும் திறந்திருக்கும் எனவே நீங்கள் எப்போது கிரிவலம் சென்றாலும் தரிசனம் செய்தால் பிணிகள் விலகும் என்பது ஐதீகம்.