திருப்பூர், கோவை சம்பவங்கள்; காவல் நிலையத்தில்கூட சட்டம் ஒழுங்கு இல்லையா? கொந்தளித்த ஈபிஎஸ்!
காவல் நிலையத்தில் கூட இல்லாத சட்டம் ஒழுங்கிற்கு என்ன பதில் வைத்துள்ளார் பொம்மை முதல்வர்?- எடப்பாடி பழனிசாமி கேள்வி.

திருப்பூர் மாவட்டம், சிக்கனூத்து அருகில் அடிதடியை விசாரிக்கச்சென்ற சிறப்பு உதவி ஆய்வாளர் சண்முக வேலு, சம்பவ இடத்திலேயே வெட்டிப் படுகொலை செய்யப்பட்டது மாநிலம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.
அவரின் குடும்பத்தினருக்கு ரூபாய் ஒரு கோடி நிதியுதவி வழங்கப்படுவதாக முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதுதொடர்பாக 6 தனிப்படைகள் அமைக்கப்பட்டு, விசாரணை நடந்து வருவதாக மேற்கு மண்டல ஐஜி செந்தில் குமார் தகவல் தெரிவித்துள்ளார்.
எடப்பாடி பழனிசாமி கேள்வி
இதற்கிடையே விசாரிக்க செல்லும் காவல்துறையினருக்கே பாதுகாப்பு இல்லை என்பதையும், காவல் நிலையத்திலேயே ஒருவர் தூக்கிட்டுக் கொள்ளும் அளவிற்கு அலட்சியமாக இருந்தது என்பதையும் எப்படி எடுத்துக் கொள்வது என்று எதிர்க் கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.
இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், ’’திருப்பூர் மாவட்டத்தில் குடும்பத் தகராறை விசாரிக்கச் சென்ற எஸ்.ஐ. சண்முகவேல் படுகொலை செய்யப்பட்டதாகவும், கோவை காவல் நிலையத்தில் எஸ்.ஐ. அறையில் ஒருவர் தூக்கிட்ட நிலையில் உயிரிழப்பு எனவும் செய்திகள் வருகின்றன.
காவல் நிலையத்தில் கூட இல்லாத சட்டம் ஒழுங்கிற்கு என்ன பதில் வைத்துள்ளார் பொம்மை முதல்வர்?
காவல்துறையினருக்கே பாதுகாப்பு இல்லையா?
விசாரிக்க செல்லும் காவல்துறையினருக்கே பாதுகாப்பு இல்லை என்பதையும், காவல் நிலையத்திலேயே ஒருவர் தூக்கிட்டுக் கொள்ளும் அளவிற்கு அலட்சியமாக இருந்தது என்பதையும் எப்படி எடுத்துக் கொள்வது?
முதல்வர் ஸ்டாலின் செய்யும் அத்தனை அரசியலும் இந்த சீர்கெட்ட சட்டம் ஒழுங்கைப் பற்றி யாரும் பேசக் கூடாது என்பதற்கான Diversion Tactic மட்டுமே!
தமிழகத்தை மீட்க ஒரே வழி
ஆனால், மக்கள் தெளிவாக இருக்கிறார்கள்- அவர்களுக்கு தேவை பாதுகாப்பான தமிழகம்! மக்களைக் காக்க, தமிழகத்தை மீட்க ஒரே வழி, இந்த கையாலாகாத விடியா திமுக அரசை வீட்டுக்கு அனுப்புவதே!
மேற்கூறிய வழக்குகளில் முறையான விசாரணை நடத்திடவும், குற்றவாளிகள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கவும் ஸ்டாலின் மாடல் திமுக அரசை வலியுறுத்துகிறேன்’’ என்று எதிர்க் கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
ட்ரெண்டிங் செய்திகள்























