Relief Fund: மிக்ஜாம் புயல் பாதிப்பை சரி செய்ய 5 ஆயிரம் கோடியை உடனே விடுவிக்க வேண்டும் - திருச்சி சிவா எம்.பி. வலியுறுத்தல்
மிக்ஜாம் புயலால் ஏற்பட்ட பாதிப்பை சரிசெய்ய ரூ.5 ஆயிரம் கோடியை உடனடியாக விடுவிக்க வேண்டும் என மாநிலங்களவையில் திமுக எம்.பி., திருச்சி சிவா வலியுறுத்தியுள்ளார்.

வங்கக்கடலில் உருவான மிக்ஜாம் புயல் காரணமாக கடந்த 2 தினங்களாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் மிகப்பெரிய அளவில் கனமழை பெய்தது. நேற்று முன்தினம் (டிசம்பர் 3) இரவு தொடங்கி நேற்று (டிசம்பர் 4) இரவு வரை இடைவிடாது கனமழை கொட்டி தீர்த்தது.
47 ஆண்டுகள் இல்லாத மழை:
இதனால் சென்னையில் பல்வேறு இடங்களிலும் மழைநீர் தேங்கியது. சூறைக்காற்றும் வீசியதால் பல இடங்களில் மரங்கள் சரிந்து விழுந்தது. கடந்த 47 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு கனமழை பெய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த கனமழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது. தண்ணீர் தேங்கியதால் பேருந்து, புறநகர் ரயில் சேவை, விமான சேவை, விரைவு ரயில் சேவை பெரிதும் பாதிக்கப்பட்டது. மாநகரம் முழுவதும் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. தற்போது மழை ஓய்ந்து விட்ட நிலையில் சென்னை மாநகராட்சி ஊழியர்கள் மீட்பு பணிகள் தீவிரம் காட்டி வருகின்றனர். இதனையடுத்து அனைத்து இடங்களிலும் படிப்படியாக மின்சார விநியோகம் தொடங்கும் என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முதலமைச்சர் ஆய்வு:
இப்படியான நிலையில் இன்றைய தினம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெள்ளம் பாதித்த பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டார். தொடர்ந்து சென்னை நேரு ஸ்டேடியம் பின்புறமுள்ள கண்ணப்பர் திடலில் உள்ளநிவாரண முகாமை பார்வையிட்டார். அங்கு தங்க வைக்கப்பட்டுள்ள மக்களுக்கு ஆறுதல் தெரிவித்ததோடு, அவர்களுக்கு அடிப்படை வசதிகள் கிடைப்பதையும் உறுதி செய்தார். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த முதலமைச்சர், 4000 கோடி ரூபாய் மதிப்பில் சென்னை மாநகராட்சியில் பணிகள் நடந்ததால் தான் இவ்வளவு மழை பெய்தும் பாதிப்பு குறைவாக இருப்பதாக கூறினார்.
5 ஆயிரம் கோடி:
மேலும் மிக்ஜாம் புயலால் ஏற்பட்ட பாதிப்புகளை சீரமைக்க 5000 கோடி ரூபாயை உடனடியாக விடுவிக்க வேண்டும் என மத்திய அரசுக்கு கடிதம் எழுத உள்ளோம் என கூறினார். இதுதொடர்பாக திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்றத்திலும் கோரிக்கை வைப்பார்கள் எனவும் தெரிவித்திருந்தார். இந்நிலையில் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் தொடங்கி நடந்து வரும் நிலையில், மாநிலங்களவையில் திருச்சி சிவா எம்.பி., தமிழகத்தில் வெள்ளப் பாதிப்புகளை சரி செய்ய உடனடியாக ரூ.5000 கோடியை விடுவிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

