IND vs ENG 2nd Test: 58 ஆண்டுகால சோகம்.. எட்ஜ்பாஸ்டன் எனும் எமன்! தோல்விதான் நிலையா? வரலாறு மாறுமா?
IND vs ENG 2nd Test: இங்கிலாந்து அணியுடன் இந்திய அணி 2வது டெஸ்ட் போட்டியில் ஆடும் எட்ஜ்பாஸ்டன் மைதானத்தில் கடந்த 58 ஆண்டுகளில் ஒரு முறை கூட வெற்றி பெற்றதே இல்லை.

IND vs ENG 2nd Test: இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இதில் இரு அணிகளும் லீட்ஸ் மைதானத்தில் மோதிய முதல் போட்டியில் இந்திய அணியின் மோசமான ஃபீல்டிங்கால் இந்திய அணி தோற்றது. இந்த நிலையில் இரு அணிகளும் விளையாடும் 2வது டெஸ்ட் போட்டி பர்மிங்காமில் உள்ள எட்ஜ்பாஸ்டன் மைதானத்தில் வரும் 2ம் தேதி தொடங்குகிறது.
பர்மிங்காம் எனும் பாதாளம்:
பர்மிங்காம் மைதானத்தைப் பொறுத்தமட்டில் இந்திய அணிக்கு மிகவும் மோசமான மைதானமாகவே இந்த மைதானம் அமைந்துள்ளது. அதாவது, 1967ம் ஆண்டு முதல் இந்த மைதானத்தில் இந்திய அணி ஆடி வருகிறது. இந்த மைதானத்தில் இதுவரை 8 டெஸ்ட் போட்டிகளில் ஆடியுள்ள இந்திய அணி ஒரு போட்டியில் கூட வெற்றி பெற்றது இல்லை. ஒரே ஒரு போட்டியில் மட்டும் டிரா செய்துள்ளனர். மற்ற 7 போட்டியிலும் இந்திய அணி தோல்வியே அடைந்துள்ளது.
1967 - இங்கிலாந்து வெற்றி - 132 ரன்கள் வித்தியாசம்
1974 - இங்கிலாந்து வெற்றி - இன்னிங்ஸ் மற்றும் 78 ரன்கள்
1979 - இங்கிலாந்து வெற்றி - இன்னிங்ஸ் மற்றும் 83 ரன்கள்
1986 - டிரா
1996 - இங்கிலாந்து வெற்றி - 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி
2011 - இங்கிலாந்து வெற்றி - இன்னிங்ஸ் மற்றும் 242 ரன்கள்
2018 - இங்கிலாந்து வெற்றி - 31 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
2022 - இங்கிலாந்து வெற்றி - 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி
1967ம் ஆண்டு: முதல் தோல்வி
1967ம் ஆண்டு இந்தியா இங்கு விளையாடிய முதல் டெஸ்ட் போட்டியில் 132 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது. முதல் இன்னிங்சில் இந்தியா 92 ரன்களையும், இங்கிலாந்து 298 ரன்களையும் எடுக்க, இரண்டாவது இன்னிங்சில் இங்கிலாந்து 298 ரன்களையும், இந்தியா 203 ரன்களையும் எடுத்தனர்.
1974ம் ஆண்டு: 2வது தோல்வி
1974ம் ஆண்டு இரு அணிகளும் இதே மைதானத்தில் இந்திய அணி முதல் இன்னிங்சில் 165 ரன்களில் சுருள, இங்கிலாந்து 459 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்ய இந்தியா 2வது இன்னிங்சில் 216 ரன்களுக்கு சுருண்டதால் இந்தியா இன்னிங்ஸ் மற்றும் 78 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது.
1979ம் ஆண்டு: 3வது தோல்வி
1979ம் ஆண்டு நடந்த போட்டியில் இந்திய அணி 297 ரன்கள் முதல் இன்னிங்சில் எடுக்க, இங்கிலாந்து 633 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. 2வது இன்னிங்சில் இந்தியா 253 ரன்களுக்கு ஆல் அவுட்டாக இந்தியா இன்னிங்ஸ் மற்றும் 83 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது.
1986ம் ஆண்டு: டிரா
எட்ஜ்பாஸ்டன் மைதானத்தில் தொடர்ந்து தோல்வியையே தழுவி வந்த இந்திய அணி முதன்முறையாக தோல்விக்கு பதிலாக டிராவை அங்கு பதிவு செய்தது. முதல் இன்னிங்சில் இங்கிலாந்து 390 ரன்கள் எடுக்க, இந்தியாவும் 390 ரன்கள் எடுத்தது. இரண்டாவது இன்னிங்சில் இங்கிலாந்து 235 ரன்களுக்கு ஆல் அவுட்டாக இந்தியா 174 ரன்கள் எடுத்திருந்தபோது போட்டி டிரா ஆனது.
1996ம் ஆண்டு: 4வது தோல்வி
1996ம் ஆண்டு இதே மைதானத்தில் இந்திய அணி முதல் இன்னிங்சில் 214 ரன்கள் எடுக்க இங்கிலாந்து 313 ரன்கள் எடுத்தது. இரண்டாவது இன்னிங்சில் இந்தியா 219 ரன்கள் எடுக்க, 121 ரன்கள் என்ற இலக்குடன் ஆடிய இங்கிலாந்து 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து அந்த இலக்கை எட்டி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
2011ம் ஆண்டு: 5வது தோல்வி
இந்திய அணி முதல் இன்னிங்சில் 224 ரன்கள் எடுத்து ஆல் அவுட்டாக, இங்கிலாந்து 710 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. இதையடுத்து, 244 ரன்களுக்கு இந்தியா 2வது இன்னிங்சில் ஆல் அவுட்டாக இங்கிலாந்து அணி இன்னிங்ஸ் மற்றும் 242 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
2018ம் ஆண்டு: 6வது தோல்வி
இந்திய அணி இந்த போட்டியின் முதல் இன்னிங்சில் இங்கிலாந்து 287 ரன்கள் எடுக்க, இந்தியா 274 ரன்களுக்கு முதல் இன்னிங்சில் ஆல் அவுட்டாக, இங்கிலாந்து 2வது இன்னிங்சில் 180 ரன்கள் எடுத்து ஆல் அவுட்டாக இந்திய அணி 2வது இன்னிங்சில் 162 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதனால், இந்திய அணி 31 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.
2022ம் ஆண்டு: 7வது தோல்வி
2022ம் ஆண்டு நடந்த போட்டியில் இந்திய அணி முதல் இன்னிங்சில் 416 ரன்கள் குவிக்க, இங்கிலாந்து 284 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இந்திய அணி 2வது இன்னிங்சில் 245 ரன்களுக்கு ஆல் அவுட்டாக, 378 ரன்கள் என்ற கடினமான இலக்கை இங்கிலாந்து அணி 3 விக்கெட்டுகள் மட்டுமே இழந்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்திய அணி வெற்றியே பெறாத இந்த மைதானத்தில் சுப்மன்கில் தலைமையிலான இந்திய அணி 58 ஆண்டுகால சோகத்திற்கு முடிவு கட்டி வெற்றி பெறுமா? என்ற பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.




















