மன அழுத்தத்தில் தவிக்கும் மாணவர்கள்... சுற்றுலா அழைத்து செல்ல சூப்பர் திட்டம்
மாணவர்களை, குறிப்பாக CLAT தேர்வு எழுத உள்ளவர்களை, தஞ்சாவூருக்கு ஒரு நாள் சுற்றுலா அழைத்துச் செல்ல திட்டமிடப்பட்டுள்ளது.

திருச்சி: மாணவர்களின் மன அழுத்தத்தை போக்கும் விதமாக திருச்சி அரசு மாதிரி பள்ளி நிர்வாகத்தினர் ஒரு செம ஐடியா செய்துள்ளனர். என்ன தெரியுங்களா? ஒரு நாள் சுற்றுலாவாக மாணவர்களை அழைத்து செல்லும் திட்டம்தாங்க அது.
மாணவர்கள் தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தை தொடர்ந்து ஒரு நாள் சுற்றுலாவாக தஞ்சாவூர் அழைத்து செல்ல திட்டமிடப்பட்டு உள்ளது. இதனால் மாணவர்களின் மன அழுத்தம் குறையும் என்று ஆசிரியர்களும், கல்வித்துறை அதிகாரிகளும் நம்புகின்றனர்.
திருச்சி அரசு மாதிரி பள்ளியில் இரண்டு மாதங்களில் இரண்டு மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பெரும்பாலான மாணவர்கள் விடுதியில் தங்கி, போட்டித் தேர்வுகளுக்கு தயாராகி வருகின்றனர். இந்த நிலையில், மாணவர்களின் மன அழுத்தத்தை குறைக்க பள்ளி நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
முதற்கட்டமாக, மாணவர்களை, குறிப்பாக CLAT தேர்வு எழுத உள்ளவர்களை, தஞ்சாவூருக்கு ஒரு நாள் சுற்றுலா அழைத்துச் செல்ல திட்டமிடப்பட்டுள்ளது. இதுகுறித்து கல்வித்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், "சமீபத்தில் தற்கொலை செய்து கொண்ட இரண்டு மாணவர்களும் CLAT தேர்வு எழுத இருந்தவர்கள். தற்போது, இந்த மாணவர்கள் அதிக மன அழுத்தத்தில் இருப்பதாக புகார் அளித்துள்ளனர். எனவே, இந்த குழுவுக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது. படிப்படியாக மற்ற பிரிவு மாணவர்களையும் கண்டறிந்து நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்
தற்கொலை சம்பவங்களை தடுக்க பள்ளி நிர்வாகம் தீவிரமாக செயல்பட்டு வருகிறது. பள்ளியில் சுமார் 520 மாணவர்கள் பல்வேறு போட்டித் தேர்வுகளுக்கு பயிற்சி பெற்று வருகின்றனர். மாணவர்களின் மன அழுத்தத்தை குறைக்க வாழ்க்கை மற்றும் மன அழுத்த மேலாண்மை குறித்து சிறப்பு பேச்சாளர்களை அழைக்கவும், அரசு மனநல மருத்துவர் மற்றும் மனநல குழுவினரை 15 நாட்களுக்கு ஒருமுறை பள்ளிக்கு வரவழைத்து ஆலோசனை வழங்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. மேலும், பெற்றோர்-ஆசிரியர் கூட்டங்களை அடிக்கடி நடத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
பள்ளியில் நிரந்தர மனநல ஆலோசகர் மற்றும் செவிலியர் பணியிடங்களை நிரப்பவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன. வேலூரைச் சேர்ந்த மாணவர் பி. யுவராஜ் தனது விடுதி அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதையடுத்து கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பள்ளிக்கு நேரில் சென்று மாணவர்கள் மீது கூடுதல் கவனம் செலுத்த அறிவுறுத்தினார். முன்னதாக, ஜூன் மாதத்தில் திருவள்ளூரைச் சேர்ந்த டி. கிருத்திகா என்ற மாணவியும் தனது விடுதி அறையில் தற்கொலை செய்து கொண்டார்.
ரூ.57 கோடி செலவில் அதிநவீன வசதிகளுடன் கட்டப்பட்ட இந்த பள்ளி, போட்டித் தேர்வுகளுக்கு மாணவர்களை தயார்படுத்துவதற்காகவே தொடங்கப்பட்டது. இந்த பள்ளியை மே 8-ம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். இந்த ஆண்டு மற்ற அரசு பள்ளிகளிலும் தற்கொலை சம்பவங்கள் பதிவாகியுள்ளன. கடந்த மார்ச் மாதம், புத்தூரில் உள்ள பார்வையற்றோர் பள்ளியின் விடுதியில் மாணவர் ஒருவர் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார்.
இதுபோன்ற துயர சம்பவங்கள் இனி நடைபெறாமல் தடுக்க பள்ளி நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. மாணவர்களின் மனநலத்தை பாதுகாப்பதற்கும், அவர்களுக்கு தன்னம்பிக்கை அளிப்பதற்கும் பள்ளி நிர்வாகம் உறுதி பூண்டுள்ளது. இதன் அடிப்படையில்தான் சுற்றுலா அழைத்துச் செல்ல திட்டமிடப்பட்டுள்ளது. ஒரே இடத்தில் இருப்பதால் மன அழுத்தம் அதிகரிக்கும். வெளியில் சுற்றுலாவாக செல்லும் போது பலதரப்பு இடங்கள், மனிதர்கள், இயற்கை சூழல் என்று மனம் மாறும் என்பதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.





















