CM Stalin: 6 நாடுகள், 236 மாணவர்கள் - ஃப்ரான்ஸ் கல்வி சுற்றுலா, முதலமைச்சர் ஸ்டாலின் பெருமிதம்
CM Stalin: தமிழ்நாட்டில் கல்வியின் சிறப்பை உணர்ந்து திராவிட மாடல் அரசு சிறப்பான முன்னெடுப்பை நடத்தி வருவதாக முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
CM Stalin: தமிழ்நாடு அரசு இதுவரை நாடுகளுக்கு 236 மாணவர்களை கல்வி சுற்றுலா அழைத்துச் சென்றுள்ளதாக முதலமைச்சர் ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்துள்ளார்.
ஃபிரான்ஸ் அழைத்துச் செல்லும் தமிழக அரசு:
பள்ளிக்கல்வி அமைச்சர் அன்பில் மகேஷ் வெளியிட்ட டிவிட்டர் பதிவில், “ 2023-24ஆம் கல்வியாண்டில் "கனவு ஆசிரியர்" விருது பெற்ற 55 ஆசிரியப் பெருமக்களை மாண்புமிகு முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களின் ஆணைக்கிணங்க ஃபிரான்ஸ் நாட்டிற்கு கல்விச் சுற்றுலா அழைத்துச் செல்லவுள்ளோம். ஃபிரான்ஸ் நாட்டின் கல்வி நிறுவனங்களைப் பார்வையிட்டு, பண்பாடு மற்றும் கலாச்சாரம் சார்ந்த நிகழ்வுகளில் பங்கேற்கவுள்ள கனவு ஆசிரியர்களை இன்று திருச்சியில் சந்தித்து கலந்துரையாடி வாழ்த்துகள் தெரிவித்தோம்” என குறிப்பிட்டு ஆசிரியர்கள் உடனான கலந்துரையாடல் தொடர்பான புகைப்படங்களையும் வெளியிட்டு இருந்தார்.
முதலமைச்சர் ஸ்டாலின் பெருமிதம்
பள்ளிக்கல்வி அமைச்சரின் டிவீட்டை டேக் செய்து முதலமைச்சர் ஸ்டாலின் வெளியிய்யுள்ள டிவிட்டர் பதிவில், “
திரைகடல் ஓடியும் திரவியம் தேடு!
கடல் தாண்டி நாம் பெறும் பெருஞ்செல்வம் கல்வியைத் தவிர வேறொன்று உண்டா? அத்தகைய கல்வியின் சிறப்பை நமது தமிழ்நாட்டின் மாணவச் செல்வங்களும் - ஆசிரியப் பெருமக்களும் உணர்ந்து கல்வி வேட்கை கொள்ள மேற்கொள்ளும் நமது திராவிட மாடல் அரசின் சிறப்பான முன்னெடுப்பு! இந்தப் பதிவு குறித்து நான் தம்பி அன்பில் மகேஷிடம் பேசியபோது, இதுவரையில் எத்தனை மாணவர்களை வெளிநாடுகளுக்கு அழைத்துச் சென்றுள்ளோம் எனக் கேட்டேன். ஆறு நாடுகளுக்கு 236 மாணவர்களை அழைத்துச் சென்றுள்ளதாகவும் - இந்தப் பயணத்துடன் 92 ஆசிரியர்களும் இந்த வாய்ப்பினைப் பெற்றதாகவும் கூறினார். இதைக் கேட்டதும் மகிழ்ச்சியால் என் நெஞ்சம் நிறைந்தது! இந்த முன்னெடுப்புகளைச் செய்துவரும் அன்பில் மகேஷ்
அவர்களுக்கும், அவருக்குத் துணை நிற்கும் துறை அதிகாரிகளுக்கும் வாழ்த்துகள்” என முதலமைச்சர் ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.
கனவு ஆசிரியர் விருது:
எதிர்கால சமுதாயத்தை உருவாக்கும் ஆசிரியர்களுள் தனித்திறன் பெற்று விளங்கும் ஆசிரியர்களை அடையாளம் கண்டு அவர்களது தொழில்சார் அறிவு மற்றும் திறன் மேம்பாட்டிற்கு மேலும் சிறப்பான பல வாய்ப்புகளை உருவாக்கிடும் வகையில் ‘கனவு ஆசிரியர் திட்டம்’ அறிமுகப்படுத்தப்பட்டது. இதற்கான ஆன்லைன் தேர்வில் 10,305 ஆசிரியர்கள் பங்கேற்றனர். 5 கட்டங்களாக நடைபெற்ற தேர்வின் மூலம் குறைந்தபட்சம் 75% மதிப்பெண்ணுடன், 162 இடைநிலை ஆசிரியர்கள், 177 பட்டதாரி ஆசிரியர்கள், 41 முதுநிலை ஆசிரியர்கள் என மொத்தம் 380 பேர் கனவு ஆசிரியர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டனர். இவர்களில் 90 சதவீதத்திற்கும் மேல் மதிப்பெண் பெற்று சிறப்பிடம் பெற்ற 54 ஆசிரியர்கள் வருகிற 23ம் தேதி முதல் 28ம் தேதி வரை ஃபிரான்ஸ் நாட்டுக்கு கல்விச்சுற்றுலா அழைத்துச் செல்லப்பட உள்ளனர்.