USA India: ”மோடி மோசமான நடிகர், நடந்தது நாடகம்” என்னடா இது?.. இந்தியாவை சுத்தி சுத்தி அடிக்கும் அமெரிக்கா
USA India: ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாடு ஒரு நாடகம் என, அமெரிக்க நிதி அமைச்சர் ஸ்காட் பெசெண்ட் கடுமையாக விமர்சித்துள்ளார்.

USA India: பிரதமர் மோடி மற்றும் புதின் உள்ளிட்டோர் மோசமான நடிகர்கள் என, அமெரிக்க நிதி அமைச்சர் ஸ்காட் பெசெண்ட் கடுமையாக விமர்சித்துள்ளார்.
இந்தியாவை தொடர்ந்து விமர்சிக்கும் அமெரிக்கா:
அமெரிக்காவிற்கு எந்தவித வரியையும் ரத்து செய்ய இந்தியா முன்வரவில்லை என, ட்ரம்ப் குற்றம்சாட்டினார். இந்நிலையில், தற்போது நிலவும் பிரச்னையை முடிவுக்கு கொண்டு வரும் நிலையானது, இருநாடுகளுக்கும் இருப்பதாக அமெரிக்க நிதி அமைச்சர் ஸ்காட் பெசெண்ட் தெரிவித்துள்ளார். அதேநேரம், இந்தியாவை கடுமையாக விமர்சித்ததோடு, ரஷ்யாவிடம் தொடர்ந்து எண்ணெய் வாங்குவது உக்ரைன் மீதான போரை அதிகரிக்கும் அபாயம் உள்ளதாகவும் எச்சரித்துள்ளார். தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், ரஷ்ய அதிபர் புதின் மற்றும் சீன அதிபர் ஜி ஜின்பிங் உடனான பிரதமர் மோடியின் சமீபத்திய சந்திப்பு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தாது என ஸ்காட் தெரிவித்துள்ளார்.
”நாடகம்..மோசமான நடிகர்கள்..”
ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாடு குறித்து பேசுகையில், “இது ஒரு நீண்டகால சந்திப்பு, இது ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு (SCO) என்று அழைக்கப்படுகிறது, மேலும் இது பெரும்பாலும் நாடகத்தன்மை மிக்கதாக இருக்கும் என்று நான் நினைக்கிறேன். இந்தியா உலகின் அதிக மக்கள் தொகை கொண்ட ஜனநாயகம் என்று நான் நினைக்கிறேன். அவர்களின் மதிப்புகள் ரஷ்யாவை விட அமெரிக்காவிற்கும் சீனாவிற்கும் மிக நெருக்கமானவை.
இவர்கள் மோசமான நடிகர்கள். இந்தியா ரஷ்யாவின் போர் இயந்திரத்திற்கு எரிபொருளை ஊற்றுகிறது, சீனா ரஷ்ய போர் இயந்திரத்திற்கு எரிபொருளை ஊற்றுகிறது. ஒரு கட்டத்தில் நாமும் நட்பு நாடுகளும் முன்னேறப் போகிறோம் என்று நினைக்கிறேன்” என ஸ்காட் தெரிவித்தார்.
மேலும் இருநாட்டு உறவுகள் குறித்து பேசுகையில், “அமெரிக்காவும் இந்தியாவும் ஒரு வலுவான அடித்தளத்தைப் பகிர்ந்து கொண்டுள்ளன. இரு ஜனநாயக நாடுகளும் தங்கள் வேறுபாடுகளை நிர்வகிக்கும் திறன் கொண்டவை. இரண்டு பெரிய நாடுகளும் இதைத் தீர்க்கும்” என வலியுறுத்தினார்.
மோடியை சாடிய வெள்ளை மாளிகை அதிகாரி:
முன்னதாக சீனா மற்றும் ரஷ்ய அதிபர்களுடன் பிரதமர் மோடி நெருக்கம் காட்டியது குறித்து பேசிய ட்ரம்பின் வர்த்தக ஆலோசகர் பீட்டர் நவேரா, “சீன அதிபர் ஜி ஜிங்பிங் மற்றும் ரஷ்ய அதிபர் புதினுடன் சேர்த்து பிரதமர் மோடியை பார்ப்பது வெட்கக்கேடானது. அவர் என்ன நினைத்துக் கொண்டிருக்கிறார் என்பது எனக்கு தெரியவில்லை? அவர் ரஷ்யா உடன் அல்ல அமெரிக்கா உடன் தான் இருக்க வேண்டும் என்பதை புரிந்துகொள்வார் என்பதை நான் நம்புகிறேன்” என எச்சரித்துள்ளார்.
மோசமடையும் உறவு:
அமெரிக்காவின் 50 சதவிகித வரி விதிப்பை தொடர்ந்து தங்களது ஏற்றுமதி பொருட்களுக்கான சந்தையை பன்முகப்படுத்த இந்தியா தீவிரம் காட்டி வருகிறது. அந்த வகையில் சீனா மற்றும் ரஷ்யாடனான உறவை மேலும் வலுப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. இதனை விரும்பாத அமெரிக்கா, இந்தியா மீது தொடர்ந்து கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வருகிறது. மோடியின் நெருங்கிய நண்பராக கருதப்பட்ட ட்ரம்ப் மீண்டும் அதிபரானதால், இந்தியா - அமெரிக்கா உறவு முன்னெப்போதும் இல்லாத அளவில் வலுவடையும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், சூழல் தலைகீழாக மாறி இருப்பது சர்வதேச அரசியலில் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.




















