Modi Vs Oppositions: “என் தாயை அவமதித்தவர்களை நான் மன்னிக்கலாம், ஆனால்..“ - பிரதமர் மோடி கூறியது என்ன.?
பீகாரில் நடந்த பாஜக பொதுக்கூட்டத்தில் காணொலி மூலம் பேசிய பிரதமர் மோடி, தனது தாயை அவமதித்தவர்களை தான் மன்னித்தாலும், அவர்கள் மன்னிக்க மாட்டார்கள் என்று கூறினார். அவர்கள் யார் தெரியுமா.?

பீகாரில், சமீபத்தில் ராஷ்ட்ரிய ஜனதா தளம் மற்றும் காங்கிரஸ் கட்சியின் சார்பில், வாக்காளர் அதிகார யாத்திரை நடைபெற்றது. அப்போது, அடையாளம் தெரியாத நபர் ஒருவர், மைக்கில் பேசியபோது, பிரதமர் மோடியின் தாயாரைப் பற்றி கூறிய கருத்து பேசுபொருளானது.
இந்நிலையில், இன்று பீகாரில் நடந்த பாஜக பொதுக் கூட்டத்தில், டெல்லியிலிருந்து காணொலி வாயிலாக பங்கேற்ற பிரதமர் மோடி பேசியபோது, தனது தாயை அவமதித்தவர்களை தான் மன்னித்தாலும், பீகார் மக்கள் மன்னிக்க மாட்டார்கள் என்று கூறினார். அவர் பேசியதன் முழு விவரங்களை தற்போது காணலாம்.
“என் தாயை இழிவாக பேசியபோது என் இதயம் காயமடைந்தது“
காணொலி மூலம் பீகார் மக்களிடையே உரையாற்றிய பிரதமர் மோடி, அம்மா தான் உலகம். அம்மா தான் எங்கள் சுயமரியாதை. பாரம்பரியம் நிறைந்த இந்த பீகாரில், ராஷ்ட்ரிய ஜனதா தளம் காங்கிரஸ் கூட்டத்தின்போது, என தாயை எதிர்க்கட்சிகிள் அவமதித்து விட்டனர், என் தாயை மட்டுமல்ல, இந்த நாட்டின் தாய்மார்களையும், சகோதரிகளையும் அவமதித்து விட்டனர் என்று கூறினார்.
‘இந்திய தாயை‘ அவமதிப்பவர்களுக்கு என் அம்மாவை திட்டுவது ஒரு பொருட்டே அல்ல என்று கூறிய மோடி, அத்தகையவர்கள் தண்டிக்கப்பட வேண்டும். என் தாயை இழிவாக பேசியபோது, என் இதயம் எவ்வளவு காயமடைந்ததோ, அதைவிட பீகாரில் உள்ள பெண்கள் அதை கேட்டு எந்த அளவிற்கு வலியை சுமந்தீர்கள் என்று எனக்குத் தெரியும் என்று கூறினார்.
“என் தாயை இழிவாக பேசியர்களை பீகார் மக்கள் ஒருபோதும் மன்னிக்க மாட்டார்கள்“
ராஷ்ட்ரிய ஜனதா தளம் மற்றும் காங்கிரஸ் கட்சிகளை நான் மன்னித்து விடுவேன், ஆனால் என் தாயை இழிவாகப் பேசியவர்களை பீகார் மக்கள் ஒருபோதும் மன்னிக்க மாட்டார்கள் என்று பிரதமர் மோடி தெரிவித்தார்.
பீகாரில், ராஷ்ட்ரிய ஜனதா தள ஆட்சி, பெண்களால் தான் கவிழ்க்கப்பட்டது என்பதால், அக்கட்சி பெண்களை பழிவாங்குகிறது என்று அவர் கூறினார். மேலும், எனது தாயை இழிவாக பேசியவர்களின் மனநிலையே, பெண்கள் என்றாலே பலவீனமானவர்கள் என்பதுதான் என விமர்சித்தார்.
என் இதயத்தில் எவ்வளவு வலி இருக்கிறதோ அந்த வலி பீகார் மக்களிடமும் இருக்கிறது என்று கூறிய பிரதமர், அரசியலுக்கும் எனது தாய்க்கும் எந்த தொடர்பும் இல்லை. அப்படி இருக்கும் நிலையில், ராஷ்ட்ரிய ஜனதா தளம், காங்கிரஸ் கட்சி நடத்திய வாக்காளர் அதிகார யாத்திரையில், எனது தாயை பற்றி பேச வேண்டியதன் அவசியம் என்ன என கேள்வி எழுப்பினார்.
மேலும், பழங்கடி குடும்பத்தைச் சேர்ந்த குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவை காங்கிரஸ் எப்போதும் அவமதிக்கிறது என்றும், பெண்கள் மீதான இந்த வெறுப்பு அரசியலை நிறுத்துவது மிகவும் முக்கியம், ராஷ்ட்ரிய ஜனதா தளம் மற்றும் காங்கிரஸ் செய்யும் அட்டூழியங்களை நாங்கள் பொறுத்துக் கொள்ள மாட்டோம் என்று பிரதமர் மோடி கூறினார்.





















