Sengottaiyan : ’கட்டம் கட்டிய எடப்பாடி – கதறும் செங்கோட்டையன்’ இதுதான் காரணமா..?
”5ஆம் தேதிக்கு இன்னும், 2 நாட்கள் இருக்கிறது. அதற்குள் எடப்பாடி பழனிசாமி சமாதானம் பேச தன்னை அழைப்பார் என்று நினைத்துக்கொண்டிருக்கிறார் செங்கோட்டையன். ஆனால், EPS அவரை திரும்பிக் கூட பார்க்கமாட்டார்”

அதிமுக மூத்த தலைவர்களில் ஒருவரான செங்கோட்டையன் மீண்டும் தன்னுடைய அதிருப்தி என்ற அஸ்திரத்தை கையிலெடுத்திருக்கிறார். வரும் 5ஆம் தேதி மனம் திறந்து பேசப் போவதாக சொல்லியிருக்கும் அவருக்குக் என்னதான் பிரச்னை என்று விசாரித்தோம்.
பாஜகவுடன் ரகசிய கூட்டு வைத்த செங்கோட்டையன் – அதிருதியான EPS
பாஜகவுடனான கூட்டணியை முறித்துக்கொண்ட பிறகு எடப்பாடி பழனிசாமி மீண்டும் அவர்களோடு கூட்டணி இல்லையென்பதை ஒவ்வொரு செய்தியாளர் சந்திப்பிலும் அடித்துச் சொல்லி வந்தார். எடப்பாடி பழனிசாமியை பணியவைக்க செங்கோட்டையன் என்ற மூத்த நிர்வாகியை கையிலெடுத்தது பாஜக. அவரும் பாஜக சொன்னபடி நடந்துகொண்டார். மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் உள்ளிட்ட பாஜக நிர்வாகிகளை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஒப்புதல் இல்லாமலேயே ரகசியமாக போய் சந்தித்தார். இதனால், செங்கோட்டையன் மீது கடும் கோபமடைந்திருந்தார் எடப்பாடி. ஆனால், அவர் வெளியில் எதையும் காட்டிக்கொள்ளவில்லை. அமைதியாகவே அதனைக் கடந்துச் சென்றார்.
சரிந்த செங்கோட்டையன் செல்வாக்கு – புரிந்த எடப்பாடி
ஆனால், காலம் போன காலத்தில் செங்கோட்டையன், எடப்பாடிக்கு டஃப் கொடுக்கும் விதத்தில் செயல்படுதாக நினைத்துக்கொண்டிருக்கையில், அவரை கட்சியை விட்டே ஒதுக்கத் தொடங்கினார் எடப்பாடி பழனிசாமி. செங்கோட்டையனுக்கு கோபிசெட்டிப்பாளையம் தாண்டி எங்கையேயும் செல்வாக்கு இல்லை. இன்னும் சொல்லப்போனால், இரட்டை இலை சின்னம் இல்லாமல் கோபிசெட்டிபாளையத்தில் கூட அவர் வெற்றிப் பெற முடியாது என்பதை உணர்ந்த எடப்பாடி பழனிசாமி, பாஜக ஆதரவு நிலைப்பாடு எடுத்த செங்கோட்டையனை கட்டம் கட்ட தொடங்கினார். இது புரியாத செங்கோட்டையன், தனக்கு எடப்பாடி பழனிசாமி பயந்துவிட்டதாகவும் அதனால்தான் தன்னை பற்றி எதுவுமே பேசாமல் அமைதியாக இருப்பதாகவும் சொல்லி, தன்னுடைய ஆதரவாளர்கள் மத்தியில் புலகாங்கிதம் அடைந்தார் செங்கோட்டையன்.
எடப்பாடி எடுத்த அஸ்திரம் – மிரண்ட செங்கோட்டையன்
நாட்கள் ஓடத் தொடங்கின. மீண்டும் பாஜகவுடனான கூட்டணிக்கு ஒப்புதல் கொடுத்தார் எடப்பாடி. பின்னர், அவர் எடுத்ததுதான் உண்மையான அஸ்திரம். தனக்கு எதிராக பாஜகவோடு கைக்கோர்த்து தன்னையே பணியவைக்க நினைத்த செங்கோட்டையனை கட்டம் கட்டி ஒதுக்கிக் தள்ளினார். அவருக்கு புதிய பொறுப்புகள் எதுவும் கொடுக்காமல், முக்கிய நிகழ்வுகளுக்கு அவரை அழைக்காமல் கோபிசெட்டிப்பாளையத்தை தாண்டினால் அவர் ஒன்றுமே இல்லையென்பதை ஒன்றுமே செய்யாமல் செங்கோட்டையனுக்கு உணர்த்தத் தொடங்கினார் எடப்பாடி பழனிசாமி.
செங்கோட்டையனுக்கு பாடம் கற்பித்த எடப்பாடி
சசிகலா, தினகரன், ஒபிஎஸ் போன்ற எத்தனையோ ஜாம்பான்களை ஓரங்கட்டிவிட்டு, அதிமுக பொதுச்செயலாளர் என்ற முக்கியமான பொறுப்பை பிடித்த எடப்பாடி பழனிசாமிக்கு, பாஜகவுடன் ரகசியமாக கைக்கோர்த்த செங்கோட்டையனை சற்றும் பிடிக்கவே இல்லை. அவர் எடப்பாடி சமூத்தை சேர்ந்தவராக இருந்தாலும், தன்னை பணிய வைக்க கூட்டணி போட்ட செங்கோட்டையனுக்கு தக்க பாடம் கற்பிக்க வேண்டும் என்றும் இல்லையென்றால் வருங்காலத்தில் அவர் வேறு ஏதேனும் சிக்கல் கொடுப்பார் என்று அறிந்த எடப்பாடி, செங்கோட்டையனை அதன்பிறகு பக்கத்திலேயே சேர்க்கவில்லை. வரும் சட்டமன்ற தேர்தலில் செங்கோட்டையனுக்கு மீண்டும் சீட் கொடுப்பதே கேள்வி என்ற நிலை உருவானது.
வணக்கம் வைத்த செங்கோட்டையன் – திரும்பி பார்க்காத எடப்பாடி
சமீபத்த்தில் நடைபெற்ற மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் கூட செங்கோட்டையன் வணக்கம் வைத்தும் அவரது முகத்தை கூட பார்க்காமல் கடந்து சென்றார் எடப்பாடி. இதனை செங்கோட்டையன் பெருத்த அவமானமாக கருதினார். அதன் வெளிப்பாடுதான் இப்போது செங்கோட்டையனின் இந்த பேட்டி. வரும் 5ஆம் தேதி மனம் திறந்து பேசுகிறேன் என்ற அறிவிப்பு.
மனம் திறந்து பேச தேதி குறித்தது எதற்கு ?
5ஆம் தேதிக்கு இன்னும், இடையில் இரண்டு நாட்கள் இருக்கிறது. அதற்குள் எடப்பாடி பழனிசாமி சமாதானம் பேச தன்னை அழைப்பார் என்று நினைத்துக்கொண்டிருக்கிறார் செங்கோட்டையன். ஆனால், செங்கோட்டையனுக்கு இப்போது எந்த செல்வாக்கும் இல்லையென்று தெரிந்திருக்கும் எடப்பாடி பழனிசாமி, அவரை சீண்டக் கூட மாட்டார் என்கிறார்கள் ரத்தத்தின் ரத்தங்கள்.





















