Chennai Air Show Death: உயிரிழந்தோரின் குடும்பத்துக்கு ரூ.1 லட்சம்; குழந்தைகளின் கல்விச் செலவை ஏற்கிறோம்- காங்கிரஸ் அறிவிப்பு
Chennai Air Show 2024 Death: சென்னை மெரினா விமான சாகச நிகழ்வுக்குச் சென்று உயிரிழந்தோரின் குடும்பத்துக்கு ரூ.1 லட்சம் வழங்கப்படும் என்று காங்கிரஸ் மாநிலத் தலைவர் செல்வப் பெருந்தகை அறிவித்துள்ளார்.
சென்னை மெரினா விமான சாகச நிகழ்வுக்குச் சென்று உயிரிழந்தோரின் குடும்பத்துக்கு ரூ.1 லட்சம் வழங்கப்படும் என்றும் இறந்தவர்களுடைய குழந்தைகளின் கல்விச் செலவை தமிழ்நாடு மாநில காங்கிரஸ் கமிட்டி ஏற்கும் என்றும் காங்கிரஸ் மாநிலத் தலைவர் செல்வப் பெருந்தகை அறிவித்துள்ளார்.
விமான சாகச நிகழ்ச்சியில் விழிபிதுங்கிய மக்கள்
இந்திய விமானப் படை சார்பில் விமான சாகச நிகழ்ச்சி நேற்று காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு முன்னதாக, போலீஸாரும் சென்னை மாநகராட்சியும் இணைந்து தேவையான ஏற்பாடுகளைச் செய்தனர். காலை 7 மணி முதலே நிகழ்வு நடைபெறும் இடத்தில் மக்கள் குவிந்தனர். பார்க்கிங் வசதி தனியாக பல்வேறு சாலைகளில் செய்யப்பட்டு இருந்தது. காவல்துறையினர் கூட்டத்தைக் கட்டுக்குள் வைத்தனர்.
காலையில் முறையான திட்டமிடல் செய்யப்பட்டிருந்த நிலையில், மக்கள் கூட்டம் கட்டுக்குள் இருந்தது. மக்களும் வெவ்வேறு நேரங்களில் கடற்கரைக்கு வந்ததால், காவல் துறையினர் கட்டுப்படுத்துவதும் எளிதாக இருந்தது. எனினும் நிகழ்ச்சி முடிந்த பிறகு எல்லா மக்களும் ஒரே நேரத்தில் வெளியே வரத் தொடங்கினர். கடற்கரையில் இருந்து காமராஜர் சாலைக்கு வர வெவ்வேறு வழிகள் இருந்ததால், அனைத்து வழிகளிலும் மக்கள் கூட்டம் சாரை சாரையாகப் படையடுத்தது.
5 பேர் பலி, 102 பேர் மருத்துவமனையில் அனுமதி
இதனால் ஏற்கெனவே வந்த கூட்டத்துடன் புதிதாக வந்தவர்களின் எண்ணிக்கையும் சேர்ந்தது. திரும்பச் செல்லும்போது போலீஸார் யாரும் போக்குவரத்தை ஒருங்கிணைக்காததால், நேரம் செல்லச் செல்ல கூட்டம் தள்ளுமுள்ளாக மாறியது. இதில் ஏராளமான பொதுமக்கள் மாட்டிக் கொண்டனர். வெயில் மற்றும் கூட்ட நெரிசலில் 5 பேர் பலியாகினர். 102 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
இதுகுறித்து எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட எதிர்க் கட்சித் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்த நிலையில், விசிக தலைவர் திருமாவளவன், மார்க்சிஸ்ட் பாலகிருஷ்ணன் உள்ளிட்ட கூட்டணிக் கட்சித் தலைவர்களே உயர்மட்ட விசாரணை கோரி உள்ளனர்.
இந்த நிலையில், சாகச நிகழ்வுக்குச் சென்று உயிரிழந்தோரின் குடும்பத்துக்கு ரூ.1 லட்சம் வழங்கப்படும் என்றும் இறந்தவர்களுடைய குழந்தைகளின் கல்விச் செலவை தமிழ்நாடு மாநில காங்கிரஸ் கமிட்டி ஏற்கும் என்றும் காங்கிரஸ் மாநிலத் தலைவர் செல்வப் பெருந்தகை அறிவித்துள்ளார்.