A Raja MP Interview: முதல்வருக்கு அப்படி நடந்தப்பவே, வீடு கட்டணும்னு முடிவு பண்ணேன்.. ஆ.ராசா எம்.பி., வைரல் இண்டர்வியூ
2ஜி வழக்கு மிகுந்த அயர்ச்சியை, அழுத்தத்தைக் கொடுத்துவிட்டது. அதிலேயே உடல்நல கெடுதல் வந்துவிட்டது.. உடல்நலம் குறித்த கேள்விக்கு சுவாரஸ்யமான பதிலளித்தார் திமுக எம்.பி., ஆ. ராசா...
பொதுவாகவே திரை நட்சத்திரங்களின் ஹோம் டூர் எல்லாமே இண்டெர்நெட்டில் பயங்கர வைரலாகும். அதைப்போலவே கட்சி சார்பைத் தாண்டியும் தங்களின் ஆளுமையால் கவர்ந்த அரசியல்வாதிகளின் ஹோம் டூரும், தனி நேர்காணல்களும் எல்லோராலும் கவனிக்கப்படும். அதைப்போலவே கலாட்டா யூ ட்யூப் சேனல் தற்போது, திமுக எம்.பி ஆ ராசாவை எடுத்த நேர்காணலும் வைரல் ஹிட் அடிக்கிறது. அதில் ஆ ராசாவால் பகிர்ந்துகொள்ளப்பட்ட சில சுவாரஸ்யமான தகவல்களை இங்கே கொடுத்திருக்கிறோம்.
மறைந்த அவரது துணை பரமேஸ்வரி குறித்து கேட்கப்பட்டபோது, “அவர் புகைப்படமாக இருக்கிறார். அவர் இருப்பதாக நினைத்துக்கொள்வது மூடநம்பிக்கைதான். ஆனால் என் மனதிடத்துக்காக ஒளியாக இருந்து என்னை வழிநடத்துமாறு கேட்டுக்கொள்கிறேன். அவர் இறந்தபோது நான் உடைந்துவிட்டேன். படிப்பும், வெளியுலக பரிச்சயமும் அறிந்த என் மகள்தான் என்னைத் தேற்றினார். என் துணைவியார் என் வீட்டில் காட்டிய அக்கறையை, காத்த சுற்றங்களை இப்போது என் மகள் கையாள்கிறார். அவர் என் பெருமை” என்றார்.
உடல்நலம் குறித்து கேட்கப்பட்டபோது, “2ஜி வழக்கு மிகுந்த அயர்ச்சியை, அழுத்தத்தைக் கொடுத்துவிட்டது. அதிலேயே உடல்நல கெடுதல் வந்துவிட்டது. தொண்டர்கள் வீட்டுக்குச் செல்லும்போது, அன்புமிகுதியில் இறைச்சி விதவிதமாக போட்டி, மூளை, வறுவல் போட்டுவிடுவார்கள். அவர்கள் அன்புக்காக அனைத்தையும் சாப்பிட்டுவிடுவேன். ஆனால் நிச்சயம் மறுநாள் அதற்கான உடற்பயிற்சியை மேற்கொள்வேன். கலோரியை கணக்கில் எடுத்து அடுத்தநாளே உடற்பயிற்சியில் அதை சமன்செய்வேன். கலைஞரிடம் இருந்துதான் உடலைப் பேணும் இந்தப் பண்பை நான் கற்றுக்கொண்டேன்” என்றார்
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா குறித்து மறைந்த முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதி உங்களிடம் பகிர்ந்து கொண்ட ஒன்றைக் கூறுங்கள் என்னும் கேள்விக்கு பதிலளித்தபோது, “காஞ்சி சங்கரச்சாரியாரை கைது செய்தபோது அதை வியந்தார்” என்றார். ”அவரின் ஜனநாயகத்தை மதிக்காத போக்கை கலைஞர் விமர்சித்தார்” என்றார்.
கலைஞர் மாவட்டங்களுக்கு சுற்றுப்பயணம் செல்லும்போது தொண்டர்கள் வீட்டுக்குப் போவார். அப்படி முதல்வர் ஸ்டாலினும் வந்திருக்கிறாரா எனக் கேட்கப்பட்டது. அதற்குப் பதிலளித்த ஆ.ராசா, “முதல்வர் இருமுறை பெரம்பூரில் என் வீட்டுக்கு வந்து தங்கியிருந்தார். பெரம்பூரில் நான் கெஸ்ட் ஹவுஸில் தங்கியிருந்தபோது, திமுக இளைஞரணித்தலைவர் அங்கு வந்திருந்தார்.
அப்போது இளைஞரணித் தலைவராக இருந்த அவர், சிறுநீர் கழிக்கவேண்டும் என சொன்னபோது, அப்போது இருந்த ஒரு (அதிமுக ஆட்சியில்) கலெக்டர் அந்த இடத்தில் அனுமதி மறுத்துவிட்டார். அப்போது நான் முடிவு செய்தேன், பெரம்பூரில் வீடுகட்ட வேண்டுமென்று. அதன்பின்பு முதல்வர் ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் வரும்போது அங்கு சாப்பிட்டு விட்டு செல்வது திருப்தி அளிக்கிறது” என்றார்