Vengaivayal Issue | "தலித்தே குற்றவாளியா?" வேங்கைவயல் வழக்கில் TWIST! திருமா ஆவேசம்!
வேங்கைவயல் வழக்கில் பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த 3 பேரை குற்றவாளிகள் என்று சொல்வதா என கொந்தளித்திருக்கிறார் விசிக தலைவர் திருமாவளவன்.
புதுக்கோட்டை அருகே உள்ள வேங்கைவயலில் கடந்த 2022 ஆம் ஆண்டு பட்டியல் சமூக மக்கள் பயன்படுத்தும் குடி நீர் தொட்டியில் மனித கழிவுகள் கலக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இன்று விசாரணைக்கு வந்த இந்த வழக்கில் மனுதாரர்கள் தரப்பில், சம்பவம் நடந்து இரண்டு ஆண்டுகளுக்கு மேலாகியும் இதுவரை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படவில்லை என தெரிவிக்கப்பட்டது.
இதை மறுத்த தமிழக அரசின் கூடுதல் தலைமை வழக்கறிஞர் ரவீந்திரன், விசாரணை முடிவடைந்து முரளிராஜா, சுதர்சன் மற்றும் முத்துகிருஷ்ணன் ஆகியோருக்கு எதிராக ஜனவரி 20-ம் தேதி புதுக்கோட்டை சிறப்பு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
அதோடு, சி.பி.சி.ஐ.டி போலீஸார் நடத்திய விசாரணையில், வேங்கைவயல், இறையூர் கிராமங்கள் அடங்கிய முட்டுக்காடு பஞ்சாயத்து தலைவராக உள்ள பத்மா முத்தையா, குடிநீர் தொட்டி ஆப்ரேட்டர் சண்முகத்தை பணி நீக்கம் செய்ததால், பஞ்சாயத்து தலைவரின் கணவர் முத்தையாவை பழிவாங்கும் வகையில், குடிநீரில் நாற்றம் வருவதாக முரளி ராஜா என்பவர் பொய் தகவலை பரப்பியதாகவும், அதன்பின் குடிநீர் தொட்டி மீது ஏறிய முத்துகிருஷ்ணன் மற்றும் சுதர்சன் ஆகியோர் இந்த குற்றச் செயலில் ஈடுபட்டதாகவும் கூறி கூடுதல் தலைமை வழக்கறிஞர் அறிக்கை தாக்கல் செய்தார்.
இந்த நிலையில், வேங்கைவயல் வழக்கில் காவல்துறையின் குற்றப் பத்திரிகையை விசாரணையை நீதிமன்றம் ஏற்கக்கூடாது எனவும் இவ்வழக்கை சிபிஐ விசாரணைக்குத் தமிழ்நாடு அரசே ஒப்படைக்கவேண்டும் எனவும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார்..
இதுகுறித்து திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் “வேங்கை வயல் வழக்கில் தமிழ்நாடு காவல்துறை பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த மூவரை குற்றவாளிகள் எனக் கூறியிருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. காவல்துறையின் குற்றப்பத்திரிக்கையை விசாரணை நீதிமன்றம் ஏற்றுக் கொள்ளக் கூடாது; மேல்விசாரணைக்கு ஆணையிட வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.





















