Actor Vadivelu | முதல்வர் நிவாரண நிதிக்கு ரூ.5 லட்சம் வழங்கிய நடிகர் வடிவேலு
கொரோனா முதல்வர் நிவாரண நிதிக்கு ரூ. 5 லட்சம் வழங்கினார் நடிகர் வடிவேலு.
சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் ஸ்டாலினை நேரில் சந்தித்த வடிவேலு நிவாரண நிதியாக ரூ.5 லட்சம் வழங்கினார். சினிமாவில் மீண்டும் நடிப்பீர்களா என்ற கேள்விக்கு நல்லதே நடக்கும் என்று பதிலளித்தார் வடிவேலு. முதல்வர் ஸ்டாலின் குறித்து பேசிய வடிவேலும், ஆட்சிக்கு வந்து ஒரே மாதத்தில் உலகமே உற்றுப்பார்க்கும் வகையில் கொரோனாவை முதல்வர் கட்டுப்படுத்தியுள்ளார் என்றார்.
மேலும்பேசிய அவர், ”நல்லா இருக்குற தமிழ்நாட்டை பிரிக்காதீர்கள். இதையெல்லாம் கேட்டாம் தலை சுற்றுகிறது. ராம்நாடு, ஒரத்தநாடுன்னு இருக்கு. நாடு, நாடு என தனித்தனியாக பிரித்தால் என்னாவது? இதையெல்லாம் கேட்டால் தலை சுத்துது” என்றார். கொரோனாவை ஒழிக்க அனைவரும் முன் வந்து தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என்றார்
கொரோனா தொற்று பரவல் தடுப்பு மற்றும் சிகிச்சைக்கு அதிக நிதி தேவைப்படுவதால் முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு தொழில் நிறுவனங்கள் மற்றும் பொதுமக்கள் நன்கொடை வழங்குமாறு கடந்த மே 11-ஆம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை விடுத்திருந்தார். 10 லட்சம் ரூபாய் மேல் வழங்குபவர்களின் பெயர்கள் பத்திரிகையில் வெளியிடப்படும் என்றும், ereceipt.tn.gov.in/cmprf/cmprf.html என்ற இணையதளம் வழியாக நிதியை செலுத்தலாம் என்றும் கூறினார். மேலும், நன்கொடை - செலவினங்கள் பொதுவெளியில் வெளியிடப்படும் என்றும் முதல்வர் கூறினார். இதனைத் தொடர்ந்து பலரும் முதலமைச்சர் நிவாரண நிதிக்கு நன்கொடை வழங்கி வருகின்றனர்.
கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டு ஓராண்டு கடந்த நிலையிலும், கொரோனா 2-வது அலையால் தொற்று பரவல் குறையாமல் மார்ச், மே மாதங்களில் அதிகமாகி வந்தது. குறிப்பாக இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலை கோரதாண்டவம் ஆடியது. மகாராஷ்டிரா, டெல்லி, உத்திரப்பிரதேசம், தென் மாநிலங்களான கேரளா, தமிழ்நாடு, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களிலும் தொற்று பாதிப்பு அதிகரித்தது. கொரோனா தொற்று பரவலை தடுக்க மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அத்துடன் தடுப்பூசிகள் போடப்படும் பணிகளும் தீவிரமாக நடைபெறுகின்றன. மேலும், தொற்று பரவலை கட்டுப்படுத்த பல மாநிலங்களில் ஊரடங்குகள் அமல்படுத்தப்பட்ட நிலையில், தொற்று குறைந்து வருவதால் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.