"மயிலாடுதுறைக்கு பணிக்கு வர தயங்கும் மருத்துவர்கள்" அய்யோ, இதுதான் காரணமா..?
கரோனா வைரஸ் வீரியம் குறைவாக உள்ளதால் பொதுமக்கள் அச்சமடைய வேண்டாம் என மருத்துவம் மற்றும் ஊரக நல பணிகள் இயக்குனர் ஜெய.ராஜமூர்த்தி தெரிவித்துள்ளார்.

கரோனா வைரஸ் வீரியம் குறைவாக உள்ளதால் பொதுமக்கள் அச்சமடையாமல் கடந்த கால வழிமுறைகள் பின்பற்றினால் போதும் என மருத்துவம் மற்றும் ஊரக நல பணிகள் இயக்குனர் ஜெய.ராஜமூர்த்தி கூறியுள்ளார்.
மயிலாடுதுறை அரசு மருத்துவமனைகளில் ஆய்வு
மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை மாவட்ட அரசு மருத்துவமனையில் மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இயக்குனர் டாக்டர் ஜெய.ராஜமூர்த்தி தலைமையில் குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர். டயாலிசிஸ் பிரிவு, புதிய கட்டடம் கட்டுமான பணிகள், சிடி, எம்.ஆர்.ஐ. ஸ்கேன் பிரிவுகள் ஆகியவற்றை ஆய்வு மேற்கொண்டு நோயாளிகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்து கேட்டறிந்தனர்.

செய்தியாளர் சந்திப்பு
அதனைத் தொடர்ந்து மருத்துவகம் மற்றும் ஊரக நலப்பணிகள் இயக்குனர் டாக்டர் ஜெய.ராஜமூர்த்தி செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது அவர் கூறுகையில், மயிலாடுதுறை மாவட்டத்தில் மயிலாடுதுறை, குத்தாலம், வைத்தீஸ்வரன்கோவில், சீர்காழி, தரங்கம்பாடி, பொறையார் ஆகிய அரசு மருத்துவமனைகள் மற்றும் ஆரம்பசுகாதார நிலையங்கள், துணைசுகாதார நிலையங்களில் மூன்று நாட்கள் தொடர்ந்து ஆய்வு செய்து, மாவட்ட ஆட்சியருடன் கலந்தாலோசிக்க உள்ளோம்.
மயிலாடுதுறை மாவட்டத்தில் 3 குழுக்கள் ஆய்வு
மயிலாடுதுறை அரசு தலைமை மருத்துவமனையில் 3 குழுவினர் பல்வேறு பணிகளை ஆய்வு செய்துள்ளனர். அரசு மருத்துவமனையில் பல்வேறு சேவைகள் செய்யப்பட்டு வருகிறது. 600-க்கும் மேற்பட்ட படுக்கை வசதிகள் கொண்ட மாவட்ட தலைமை மருத்துவமனையில் 80 சதவிகித்திற்கு மேல் உள்நோயாளிகள் தங்கி சிகிச்சை பெற்று வருகின்றனர். புறநோயாளிகள் பிரிவில் 1,700க்கும் மேற்பட்ட நோயாளிகள் தினந்தோறும் சிகிச்சை பெற்று செல்கின்றனர்.

முழுமையாக நிரப்பப்பட்ட செவிலியர்கள் பணியிடம்
சிடி ஸ்கேன், எம்.ஆர்.ஐ. ஸ்கேன் மற்றும் முதலமைச்சர் காப்பீடு திட்டத்தில் எவ்வாறு சிகிச்சை அளிக்கப்படுகிறது என்பது குறித்து ஆய்வு செய்யப்பட்டுள்ளது. 36 டாக்டர்கள் பணியாற்றிக்கொண்டு இருக்கின்றனர். காலியாக உள்ள டாக்டர்கள் பணியிடங்கள் விரைவில் பணிஅமர்த்தப்பட உள்ளது. பொது அறுவை சிகிச்சை நிபுணர் உள்ளிட்ட டாக்டர்கள் நியமிக்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. செவிலியர் பணியிடங்கள் முழுமையாக நிரப்பப்பட்டுள்ளது.
ரேடியாலஜி முடித்த டாக்டர்கள் பற்றாக்குறை
ரேடியாலஜி முடித்த டாக்டர்கள் குறைவாக இருப்பதால் சிடி, எம்.ஆர்.ஐ. ஸ்கேன் ரிப்போர்ட் பெறுவதற்கான டாக்டர்கள் நியமிக்க முடியாததால் அதற்கான நடவடிக்கை எடுக்கப்படும். இங்கு எந்த வகையில் சிகிச்சை அளிக்க முடியுமோ அந்த அளவிற்கு இங்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. சூப்பர்ஸ்பெசாலிட்டி சிகிச்சை தேவைப்படும்போது அந்த நோயாளிகள் மேல்சிகிச்சைக்கு பரிந்துரை செய்யப்படுகின்றனர்.

மயிலாடுதுறை பகுதிக்கு வர தயாராக இல்லாத மருத்துவர்கள்
தற்போது வரும் கரோனா வீரியமிக்க வைரசாக இல்லை. அதனால் மக்கள் அச்சமடைய தேவையில்லை. கூட்டமாக இருக்கும் இடங்களில் மாஸ்க் அணிந்து செல்வதோடு கடந்தகால கரோனா வழிமுறைகளை பின்பற்றினாலே போதுமானது. இருதயநோய் சிகிச்சை பிரிவுக்கு மெடிக்கல் எஜிகேஷனில் கவுன்சிலிங் வைத்தபோது 35 பேரிடம் கேட்டபோது மயிலாடுதுறை பகுதிக்கு வர அவர்கள் தயாராக இல்லை. மருத்துவக்கல்லூரி தொடங்கினால் நிச்சயமாக இருதயநோய் சிகிச்சை டாக்டர்கள் வருவார்கள் என்றார். உடன் இணை இயக்குனர் பானுமதி, தலைமை மருத்துவர் மருதவாணன் மற்றும் டாக்டர்கள் உடனிருந்தனர்.






















