TVK Blood Camp: தவெக தலைவர் விஜய் பிறந்தநாள் விழா - சேலத்தில் 1000க்கும் மேற்பட்டோர் ரத்த தானம்
தாம்பூல தட்டி வைத்து விவசாயிகள் விளைவித்த காய்கறிகளை ரத்த தானம் வழங்கியவர்களுக்கு வழங்கி மரியாதை.
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் நடிகர் விஜய் மற்றும் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் ஆகியோரின் பிறந்தநாளை முன்னிட்டு சேலத்தில் மாபெரும் ரத்ததான முகாம் இன்று நடைபெற்றது. சேலம் மாவட்ட தலைவர் பார்த்திபன் தலைமையில் நடைபெற்ற இந்த முகாமில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு ரத்ததானம் வழங்கினர். இதில் சேலம், தர்மபுரி, ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த அரசு மருத்துவமனையின் ரத்த வங்கி குழுவினர் ரத்தத்தை சேகரித்தனர்.
இதைத்தொடர்ந்து ரத்த தானம் வழங்கியவர்களுக்கு தமிழக வெற்றி கழகம் சார்பாக ஊட்டச்சத்து மிகுந்த முருங்கை கீரை, பீட்ரூட், செவ்வாழை, மர நெல்லிக்காய், அண்ணாச்சி பழம் உள்ளிட்டவை அடங்கிய தொகுப்புகள் தாம்பூல தட்டில் வைத்து வழங்கப்பட்டது. மேலும் ரத்ததானம் வழங்கும் அனைவருக்கும் வெஜிடபிள் பிரியாணி 1500க்கும் மேற்பட்டோருக்கு வழங்கினர். ரத்ததான முகாம் ரத்தம் வழங்கிய நிர்வாகிகளுக்கு விவசாயிகள் விளைவித்த காய்கறிகளை வழங்குவதன் மூலமாக விவசாயிகள் விளைவிக்கும் பொருட்களில் விற்பனை அதிகரித்து விவசாயிகள் நலன் பெறுவார்கள் என்றும் கூறினர். ரத்த தான முகாமில் ரத்த தானம் செய்ததற்கான சான்றிதழ்களும் வழங்கப்பட்டது. தனியார் மண்டபத்தில் ஒரே நேரத்தில் 50 பேர் ரத்தம் கொடுக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. ஆனால் ஒரே நேரத்தில் 300க்கும் மேற்பட்டோர் ரத்தம் கொடுக்க முற்பட்டு மண்டபத்திற்குள் உள்ளே நுழைய முற்பட்டனர். இதனிடையே ரசிகர்கள் மற்றும் நிர்வாகிகள் ஒருவருக்கொருவர் முந்திக்கொண்டு உள்ளே வந்து ரத்தம் கொடுக்க முற்பட்டதால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. பின்னர் கட்சி நிர்வாகிகள் அமைதிப்படுத்தி வரிசையில் வரவைத்து ரத்ததானம் பெற்றுக்கொண்டனர்.