![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
சேலம்: ஆகாய கங்கை, முட்டல் நீர்வீழ்ச்சிகளில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
முட்டல் நீர்வீழ்ச்சியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டும் நிலையில், நீர்வரத்து அதிகரிக்க வாய்ப்புள்ளதால் பாதுகாப்பு கருதி நீர்வீழ்ச்சியில் சுற்றுலா பயணிகள் குளிக்கவும் படகு பயணம் மேற்கொள்ளவும் தடை.
![சேலம்: ஆகாய கங்கை, முட்டல் நீர்வீழ்ச்சிகளில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை Salem news Tourists are prohibited from bathing in Agaya Ganga and Muttal waterfalls - TNN சேலம்: ஆகாய கங்கை, முட்டல் நீர்வீழ்ச்சிகளில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/05/18/0942d9bc5fcca19749e698a7937405e71716017024037113_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
தமிழ்நாடு முழுவதும் கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக நீர் நிலைகளில் அதிக அளவில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. குறிப்பாக பழைய குற்றாலம் நீர்வீழ்ச்சியில் நேற்று திடீர் என ஏற்பட்ட வெள்ளப் பெருக்கில் 17 வயது சிறுவன் உயிரிழந்தார். இது தமிழகம் முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்திய நிலையில், இதன் எதிரொலியாக நீர் வரத்து அதிகம் உள்ள நீர் நிலைகளில் பொதுமக்கள் குளிப்பதற்கும் படகு சவாரி மேற்கொள்வதற்கும் தடை விதிக்கப்பட்டு வருகிறது. இதன்படி சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள ஆணைவாரி முட்டல் நீர்வீழ்ச்சியில் தண்ணீர் கொட்டுவதாலும், மேலும் அதிக அளவு தண்ணீர் வருவதற்கு வாய்ப்புள்ளதால் பாதுகாப்பு கருதி நீர்வீழ்ச்சியில் சுற்றுலா பயணிகள் குளித்திடவும் படகு பயணம் மேற்கொள்ளவும் தடை விதித்து சேலம் மாவட்ட ஆட்சியர் பிருந்தா தேவி உத்தரவிட்டுள்ளார்.
சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள முட்டல் கிராமத்தையொட்டி கல்வராயன் மலை தொடர்ச்சியில் முட்டல் ஏரி மற்றும் நீர்வீழ்ச்சி உள்ளது. இந்த பகுதியை வனத்துறையினர் சுற்றுலாத்தலமாக பராமரித்து வருகின்றனர். படகு சவாரி மற்றும் நீர் வீழ்ச்சியில் சுற்றுலா பயணிகள் குளிக்கும் வசதி, வனப்பகுதியில் பொழுது போக்கும் வகையில் குடில், பூங்கா மற்றும் சிறுவர்கள் விளையாட வசதிகள் செய்யப்பட்டுள்ளது. சுற்றுலாத்தலத்தில் உள்ள நீர் வீழ்ச்சிக்கு செல்ல தார்ச்சாலை அமைப்பட்டுள்ளதால் சேலம் மட்டுமின்றி பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர்.
இந்த நிலையில் கடந்த சில நாட்களாக கோடை வெயில் வாட்டி வந்த நிலையில் கடந்த இரண்டு மாதமாக நீர் வீழ்ச்சி தண்ணீர் இன்றி வறண்டு காணப்பட்டதால் சுற்றுலா பயணிகள் குளிக்க முடியாமல் ஏமாற்றம் அடைந்து வந்தனர். இந்த நிலையில் கடந்த ஐந்து நாட்களாக சேலம் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் தொடர்ந்து கல்வராயன் மலை பகுதியில் பெய்த கன மழையால் கடந்த 16 ஆம் தேதி முதல் ஆணைவாரி முட்டல் நீர் வீழ்ச்சியில், தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. கோடை வெய்யிலை தனிக்கும் விதமாக ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தந்து நீர் வீழ்ச்சியில் குளித்தும் அங்குள்ள ஏரியில் படகு சவாரி செய்தும் பூங்காவை சுற்றிப்பார்த்து பொழுதை கழித்து உற்சாகமடைந்து வந்தனர்.
இந்த நிலையில் தொடர் மழையின் காரணமாக ஆத்தூர் ஆணைவாரி முட்டல் நீர் வீழ்ச்சியில் அதிகளவிலான நீர்வரத்து வர வாய்ப்புள்ளதால் பாதுகாப்பு கருதி மறு உத்தரவு வரும்வரை இந்நீர்வீழ்சியில் சுற்றுலா பயணிகள் குளித்திடவும், அருகில் உள்ள ஏறியில் படகு பயணம் மேற்கொள்ளவும் தடை விதித்து மாவட்ட ஆட்சியர் பிருந்தா தேவி உத்தரவிட்டுள்ளார். கடந்த இரண்டு நாட்களாக நீர் வீழ்ச்சியில் சுற்றுலாப் பயணிகள் குளித்து மகிழ்ச்சியடைந்து வந்த நிலையில் தற்போது ஆட்சியரின் உத்தரவு சுற்றுலா பயணிகளிடையே ஏமாற்றத்தை அளித்துள்ளது.
இதேபோல் நாமக்கல் மாவட்டம் கொல்லிமலை மலைப்பகுதியில் உள்ள ஆகாய கங்கை நீர்வீழ்ச்சியிலும் சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் கொல்லிமலை வரும் சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பி செல்கின்றனர்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)