Schools Colleges Holiday: எங்கெல்லாம் மழை? - எந்தெந்த மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகள் விடுமுறை - மொத்த லிஸ்ட் இதோ!
வங்கக்கடலில் உருவான தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுவிழந்து நாளை கரையை கடக்கிறது.
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருவதால் எங்கெல்லாம் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை என்று பார்க்கலாம்.
வங்கக்கடலில் உருவான தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுவிழந்து நாளை கரையை கடக்கிறது. இதையொட்டி கடலூர் மாவட்டத்தில் அதி கனமழை பெய்யக்கூடும் எனவும் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கனமழை பெய்யும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் கடலூர் மாவட்டத்திற்கு ரெட் அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது.
கனமழை எச்சரிக்கையை தொடர்ந்து இன்று கடலூர் மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் விழுப்புரம் மாவட்டத்திலும் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களுக்கு பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவித்து அந்தந்த மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளனர். ஆனால் காஞ்சிபுரம் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகள் இயங்கும் என மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
இதனிடையே புதுச்சேரி, காரைக்காலில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று மற்றும் நாளை என 2 நாட்கள் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாளை மாமல்லபுரம் - காரைக்காலுக்கு இடையே வலுவிழ்ந்து கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன்காரணமாக தமிழகத்தின் பல்வேறு இடங்களிலும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் மழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல் தமிழகத்தில் சென்னை, செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகை, திருவாரூர் மற்றும் புதுவை காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்யும். மேலும் ஒரு சில இடங்களில் அதி கனமழை பெய்யும்.
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், அரியலூர், தஞ்சாவூர் மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழையும் ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், திருச்சி, பெரம்பலூர், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களில் கனமழை பெய்யும் என கணிக்கப்பட்டுள்ளது.
நாளை தமிழகத்தில் அநேக இடங்களிலும் புதுவை, காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. டிசம்பர் ஒன்றாம் தேதி முதல் 4ஆம் தேதி வரை தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும் புதுவை காரைக்கால் பகுதிகளிலும் மழை பெய்யக்கூடும்.