Father Crying : ’’FOOTBOARD அடிக்காதீங்க பா'’காலில் விழுந்து கதறிய தந்தை தேம்பி அழுத மாணவர்கள்
’’பஸ்ல ஃபுட்போர்டு அடிக்காதீங்க…என் பையன் போயிட்டான்..உங்க கால்ல விழுந்து கேட்கிறேன் அப்படி செய்யாதீங்க’’ என பேருந்தில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்த மாணவனின் தந்தை பிற மாணவர்களிடம் கதறி அழும் காட்சிகள் காண்போரை கண்கலங்க வைத்துள்ளது.
கடலூர் தேவனாம்பட்டினத்தை சேர்ந்த மாணவன் நேற்று முன் தினம் தனியார் பேருந்தில் படிக்கட்டில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்தார். இதனை அடுத்து மாணவர் படித்த தனியார் பள்ளியில் கடலூர் புதுநகர் காவல் துறை சார்பில் மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இந்நிகழ்வில் போக்குவரத்து காவல் ஆய்வாளர் அமர்நாத், உதவி ஆய்வாளர் பிரசன்னா மற்றும் உயிரிழந்த மாணவரின் குடும்பத்தினர் கலந்து கொண்டனர். அப்போது உயிரிழந்த மாணவனுக்கு மௌன அஞ்சலி செலுத்தி மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
அப்போது உயிரிழந்த மாணவரின் தந்தை உதவி ஆய்வாளர் பிரசன்னாவை கட்டிப்பிடித்து அழுதார்.இதையடுத்து உயிரிழந்த மாணவனின் தந்தை கதறி அழுத படியே..’’மாணவர்களிடம் பேருந்தில் படிக்கட்டில் தொங்கிவாரு பயணம் செய்யாதீங்க, படிப்பு தான் முக்கியம்..தயவு செஞ்சு அப்படி போகாதீங்க..என் பையன் போயிட்டான்.. உங்க காலை பிடிச்சு கேட்கிறேன் அப்படி செய்யாதீங்க’’ என மண்டியிட்டு மாணவர்களிடையே தேம்பி தேம்பி அழுதார். இச்சம்பவம் அங்கு திரண்டு இருந்த மாணவர்களையும் கண் கலங்க வைத்தது.
மகனை இழந்து வாடும் தந்தையின் கதறல் காண்போர் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.