Salem Book Fair 2024: மக்களே தொடங்கியது சேலம் புத்தகத் திருவிழா... எத்தனை நாட்கள் நடக்கும்?- திறந்திருக்கும் நேரம்? - முழு விவரம் இதோ
சேலம் புத்தகத் திருவிழா டிசம்பர் மாதம் 9 ஆம் தேதி வரை மாநகராட்சித் திடலில் நடைபெறவுள்ளது. புத்தகக் கண்காட்சியானது நாள்தோறும் காலை 10 மணிக்கு தொடங்கி இரவு 9 மணி வரை நடைபெறுகிறது.
சேலம் புதிய பேருந்து நிலையம் அருகில் உள்ள மாநகராட்சித் திடலில் புத்தகத் திருவிழா தொடங்கியது. இதனை சுற்றுலாத் துறை அமைச்சர் ராஜேந்திரன் தொடங்கி வைத்தார்.
சேலம் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் சேலம் புத்தகத் திருவிழா டிசம்பர் மாதம் 9 ஆம் தேதி வரை மாநகராட்சித் திடலில் நடைபெறவுள்ளது. புத்தகக் கண்காட்சியானது நாள்தோறும் காலை 10 மணிக்கு தொடங்கி இரவு 9 மணி வரை நடைபெறுகிறது. இதில் தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்கம் மற்றும் புத்தக வெளியீட்டார்கள் கலந்துகொள்ளும் வகையில் 200-க்கும் மேற்பட்ட அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன.
நிகழ்ச்சியில் பேசிய சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன், புத்தக வாசிப்பு என்பது நம்மை நாமே செதுக்கிக் கொள்கிற ஒரு பேராயுதமாகும். குறிப்பாக, நூலகங்கள் திறக்கப்படும்போது சிறைச்சாலைகள் மூடப்படுகிறது என்ற பொன்மொழிக்கேற்ப தமிழ்நாடு முதல்வர் மற்றும் துணை முதல்வர் பல்வேறு நூலகங்கள் திறந்து வைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்கள்.
"தொட்டனைத் தூறும் மணற்கேணி மாந்தர்க்குக் கற்றனைத் தூறும் அறிவு" என்ற வள்ளுவரின் வாக்கிற்கிணங்க, தோண்டத் தோண்ட ஊற்றுநீர் கிடைப்பது போல, தொடர்ந்து படிக்கப் படிக்க அறிவு பெருகிக் கொண்டே இருக்கும். கோடி ரூபாய் கிடைத்தால் என்ன செய்வீர்கள் என்று கேட்டபோது ஒரு நூலகம் கட்டுவேன்" என்றார் மகாத்மா காந்தி. அதேபோன்று, யார் படித்தாலும், படிக்கா விட்டாலும் நானே எழுதி நானே அச்சிடுவேன் என்று தந்தை பெரியார் குறிப்பிட்டார்கள். அவருடைய அறிவுப்புரட்சி என்பது இந்திய துணை கண்டத்திலேயே எங்கேயும் இல்லாத அளவிற்கு தமிழ்நாட்டில் மிகப்பெரிய புரட்சியை உருவாக்கியது.
அமெரிக்காவில் சிகிச்சை பெற்றுவந்த பேரறிஞர் அண்ணா தற்போது நூலைப் படித்துக் கொண்டிருக்கிறேன். நாளைக்குள் படித்து முடித்துவிடுவேன். பிறகு நான் இறந்தாலும் கவலையில்லை. அறுவை சிகிச்சையை நாளை மறுநாள் வைத்துக்கொள்ளலாமா? என்று மருத்துவரிடம் கேட்டார். அப்படியான சிறந்த புத்தக ஆர்வலர் மற்றும் பேச்சாளர் பேரறிஞர் அண்ணா. அதேபோன்று புத்தகத்தில் ஆர்வம் கொண்ட கலைஞர் "புத்தகத்தில் உலகை படிப்போம், உலகத்தை புத்தகமாய் படிப்போம்" என்று கூறி தொடர்ந்து அறிவுப் புரட்சியை உருவாக்கினார் என்று பேசினார்.
சேலம் புத்தகத் திருவிழாவில் நாள்தோறும் காலை முதல் கருத்தரங்குகள், பயிலரங்குகள், கலை நிகழ்ச்சிகள் என வாசகர்கள், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள், பொதுமக்கள் என அனைத்துத்தரப்பினரும் பயன்பெறும் வகையில் பல்வேறு நிகழ்வுகளுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. குறிப்பாக, நாள்தோறும் மாலையில் முதன்மை விருந்தினர்கள் கலந்துகொள்ளும் கருத்துரைகள் நடைபெறவுள்ளது. அந்த வகையில், முதல் நாளான வெள்ளிக்கிழமை தன்னம்பிக்கை ஊக்கப் பேச்சாளர் மதுரை ராமகிருஷ்ணன் சிறப்புரை ஆற்றினார். இதனைத்தொடர்ந்து, 30 ஆம் தேதி நாஞ்சில் நாடன் பசியும் சுவையும் என்ற தலைப்பிலும், டிசம்பர் 1 ஆம் தேதி பவா செல்லதுரை, என் அன்பான புத்தகமே என்ற தலைப்பிலும், டிசம்பர் 2 ஆம் தேதி யுவன் சந்திரசேகர் மாற்று எழுத்து என்ற தலைப்பிலும் கருத்துரை வழங்கவுள்ளார்கள்.
மேலும், 3 ஆம் தேதி மரு.இரா. ஆனந்தகுமார் மைதீரா பேனாவின் எழுத்திசை என்ற புத்தகத்தை வெளியிட்டு, நூற்றுக்கு நூறு என்ற தலைப்பிலும், ஹரிகிருஷ்ணன் நிகழ்த்துக் கலைகள் என்ற தலைப்பிலும் கருத்துரை வழங்கவுள்ளார்கள். மேலும், புத்தகத் திருவிழாவிற்கு வருபவர்கள் எளிதில் அறிந்துகொள்ளும் வகையில் அதன் கருப்பொருள் அடிப்படையில் புத்தக அரங்குகளை வரிசைப்படுத்தி அமைத்திடவும், முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் இப்புத்தகக் கண்காட்சியில் பங்கேற்கும் வகையில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.