பாமகவில் உச்சகட்ட மோதல்: ராமதாஸ் vs அன்புமணி! அடுத்த நகர்வுகள் என்ன? பரபரப்பு தகவல்கள்!
Anbumani vs Ramadoss: பாமகவில் உட்கட்சி மோதல் நிலவிவரும் நிலையில், அன்புமணி மற்றும் ராமதாஸ் ஆகிய இருவரும் அடுத்து என்ன செய்யப் போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு கூடிய உள்ளது

பாமகவில் தந்தை மற்றும் மகனின் மோதல் உச்சகட்டத்தை நெருங்கியுள்ளது. கிட்டத்தட்ட குடும்ப உறுப்பினர்கள், சைதை துரைசாமி, குருமூர்த்தி உள்ளிட்ட பல தரப்பினர் நடத்திய பேச்சு வார்த்தைகளும் தோல்வியில் முடிந்துள்ளன. பாமகவை கைப்பற்ற போவது ராமதாசா ? அன்புமணியா ? என்ற கேள்வி எழத் தொடங்கியுள்ளது.
சமாதான பேச்சுவார்த்தைக்கு வாய்ப்புள்ளதா ?
கடந்த வியாழக்கிழமை ராமதாஸின் செய்தியாளர் சந்திப்பை வைத்து பார்க்கும்போது, இனி சமாதானம் என்பதற்கு வாய்ப்பில்லை என்பதே அரசியல் வல்லுநர்களின் கருத்தாக இருக்கிறது. அதேபோன்று அடுத்த நாள் வெள்ளிக்கிழமை ராமதாஸ் செய்தியாளர்களை சந்தித்தபோது, " இறுதி மூச்சு உள்ளவரை நான் தான் தலைவர் " என தெரிவித்திருப்பது, மேலும் இந்த பிரச்சனை சிக்கலாக்கி உள்ளது. எனவே நீயா ? நானா ? பார்த்து விடலாம் என்ற நிலைமை தான் பாமகவின் தற்போது நிலவிக் கொண்டிருப்பதாக அரசியல் ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.
தைலாபுரத்தில் நடந்து கொண்டிருப்பது என்ன ?
ராமதாஸ் முதலில் நிர்வாகிகளை மாற்ற மாட்டேன் என தெரிவித்து வந்தார். இதன் ராமதாஸ், தனது ஆதரவாளர்களை மாவட்ட, ஒன்றிய மற்றும் நகர நிர்வாகிகளை நியமித்து வருகிறார். ராமதாஸ் நீக்கும் நிர்வாகிகள் கட்சியில் தொடர்வார்கள் என அடுத்த நிமிடமே, அன்புமணி தரப்பிலிருந்து பாமக நிர்வாகிகளுக்கு கடிதம் கொடுக்கப்பட்டு வருகிறது.
ராமதாஸிடம் கடிதம் பெறும் நிர்வாகிகள் யார் ?
பாமக நிறுவனர் ராமதாஸிடம், கடித பெரும் நிர்வாகிகள் பெரும்பாலானோர் முன்னாள் நிர்வாகிகளாக இருக்கின்றனர். ஒரு சிலர் வேறு கட்சிக்கு சென்ற நபர்களுக்கும், ராமதாஸ் தரப்பிலிருந்து நியமன கடிதம் கொடுக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக சமூக நீதி பேரவை தலைவர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ள கோபு, பாமகவில் பதவி கிடைக்கவில்லை என அதிமுகவிற்கு சென்றவர் என பாமகவினரே குற்றச்சாட்டை முன்வைக்கின்றனர். அதுபோன்று ராமதாஸ் நினைக்கும் பல மாவட்ட நிர்வாகிகள், வேறு கட்சிக்கு சென்றவர்கள் என பாமகவினர் சமூக வலைதளத்தில் பதிவு செய்து வருகின்றனர்.
பனையூரில் நடப்பது என்ன ?
அன்புமணி ராமதாஸ் பனையூரில் தனது அலுவலகத்தில் தொடர்ந்து, தனது ஆதரவாளர்கள் மற்றும் பாமகவின் நிர்வாகிகளிடம் ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார். முதற்கட்டமாக மாவட்ட பொதுக்குழு கூட்டத்தை வெற்றிகரமாக நடத்த வேண்டும், என நிர்வாகிகளுக்கு அன்புமணி உத்தரவிட்டுள்ளார். இதுபோக ராமதாஸ் ஆதரவு நிர்வாகிகளையும் தன் பக்கம் வளைத்து போடும் பணியிலும் ஈடுபட்டு வருகிறார்.
குறிப்பாக ராமதாஸின் வலது கரம் என அறியப்பட்ட, கட்சியின் பொதுச்செயலாளர் வடிவேல் ராவணன் அன்புமணி ஆதரவாளராக மாறியுள்ளார். அதேபோன்று பாமகவின் முன்னாள் தலைவர் பேராசிரியர் தீரன் உள்ளிட்டு வரும் அன்புமணி ஆதரவாளர்களாக மாறி இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அன்புமணியின் அடுத்த கட்ட நகர்வு என்ன ?
அன்புமணி பனையூர் அலுவலகத்தில், நிர்வாக குழு மற்றும் மாவட்ட செயலாளர் கூட்டம் கூட்டப்பட்டது. இந்த கூட்டத்தில் மாவட்ட பொதுக்குழு மூலம் நிர்வாகிகளை தேர்ந்தெடுக்க வேண்டும் என அன்புமணி உத்தரவிட்டுள்ளார். மாவட்ட நிர்வாகிகள் மாவட்ட பொதுக்குழு மூலம் நியமிக்கப்பட்டால், அந்த நியமனம் மட்டுமே தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்படும் என அன்புமணி தரப்பில் நிர்வாகிகளுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்காகவே முதற்கட்டமாக 10 வருவாய் மாவட்ட அளவில் பொதுக்குழு கூட்டம் நடைபெற உள்ளது. முதற்கட்டமாக இந்த பொதுக்குழு கூட்டத்தில் நிர்வாகிகள் நியமிக்கப்பட்டு பாமக தலைவர் அன்புமணிக்கு அனுப்பி வைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பொதுக்குழுவின் நியமிக்கப்படும் நிர்வாகிகளை உடனடியாக தலைமை அங்கீகரிக்கும் எனவும் நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தல் கொடுக்கப்பட்டுள்ளது.
இந்த பிரச்சினைகள் எல்லாம் ஒருபுறம் முடித்துவிட்டு, அடுத்த மாதம் 25ஆம் தேதி முதல் நடை பயணத்தையும் அன்புமணி துவங்குவார் என அறிவுறுத்தல் கொடுக்கப்பட்டுள்ளது. நிர்வாகிகளிடம் பேசும் அன்புமணி, " எக்காரணம் கொண்டும் நாம் மருத்துவர் அய்யாவை விமர்சிக்க கூடாது " என்ற உத்தரவையும் பிறப்பித்து வருகிறார்.
ராமதாஸின் அடுத்த கட்ட நகர்வு என்ன ?
ராமதாஸ் இன்று தைலாபுரம் தோட்டத்திற்கு தனது ஆதரவாளர்கள் மற்றும் புதிய நிர்வாகிகளுக்கு அழைப்பு கொடுத்துள்ளார். புதிய நிர்வாகிகளிடம் அடுத்த கட்ட நகர்வுகள் குறித்து ராமதாஸ் எடுத்து கூற உள்ளார். குறிப்பாக மாவட்ட அளவில் போட்டி பொதுக்குழு கூட்டத்தை நடத்த தனது, ஆதரவாளர்களுக்கு ராமதாஸ் உத்தரவிட இருப்பதாக தைலாபுரம் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதுப்போக பொதுக்குழு கூட்டத்தை கூட்டி, தன்னைத் தலைவராக தேர்ந்தெடுக்கும்படி தனது ஆதரவாளர்களுக்கு அசைன்மென்ட் கொடுக்க உள்ளதாகவும் ரகசிய, தகவல்கள் வெளியாகி உள்ளன. ராமதாஸ் தரப்பிலிருந்து விரைவில், இளைஞர் அணி மற்றும் பொதுச் செயலாளர் ஆகிய பதிவுகளுக்கும் ஆட்கள் நியமனம் செய்யப்படுவார்கள் என தகவல்களும் வெளியாகி உள்ளது.
தொண்டர்களின் நம்பிக்கை
இதுகுறித்து பாமக நிர்வாகிகளிடம் பேசியபோது: " நீர் அடித்து நீர் விலகுவதில்லை, ஒரு கட்டத்தில் இரண்டு தரப்பும் சமாதானம் ஆகி விடுவார்கள். நீங்கள் பொறுத்திருந்து பாருங்கள் " என ஒரு சில தொடர்ந்து நம்பிக்கையுடன் பேசி வருவது குறிப்பிடத்தக்கது.





















