சேலம்: கல்லறை நிலத்தை திமுக கவுன்சிலர் அபகரித்ததாக காவல் ஆணையரிடம் புகார்
சேலம் நான்கு ரோடு பகுதியில் ஒரு கோடி மதிப்புள்ள கல்லறை தோட்ட நிலத்தின் ஒரு பகுதியை ஆக்கிரமித்த திமுக கவுன்சிலர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி சிஎஸ்ஐ தேவாலய நிர்வாகிகள் புகார்.
சேலம் மாநகர் சிஎஸ்ஐ தேவாலய நிர்வாகத்திற்கு சொந்தமாக நான்கு ரோடு பகுதியில் உள்ள கல்லறை தோட்ட நிலத்தினை திமுக கவுன்சிலர் ஆக்கிரமித்துள்ளதாக தேவாலய நிர்வாகம் சார்பில் சேலம் மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர். சேலம் மாநகர பகுதிகளில் உள்ள பழமையான கல்லறைகளில் ஒன்றான நான்கு ரோடு கல்லறை தோட்டம் நிலத்தை அபகரித்து கடைகள் கட்டி வருவதைக் கண்ட சிஎஸ்ஐ தேவாலய நிர்வாகம் திமுக கவுன்சிலரிடம் முறையிட்டதாக கூறப்படுகிறது. ஆனால் திமுக கவுன்சிலரின் கணவர் தேவாலய நிர்வாகத்தினரை மிரட்டி கல்லறை நிலத்தில் கடைகள் கட்டி வருவதாக கூறப்படுகிறது. இதனை கண்டித்து தேவாலய நிர்வாகிகள் இன்று மாநகர காவல் ஆணையாளர் அலுவலகத்திற்கு வந்தனர்.
இதுகுறித்து சிஎஸ்ஐ தேவாலய நிர்வாகத்தினர் செய்தியாளர்களிடம் கூறும் போது, சேலம் மாநகரம் நான்கு ரோடு பகுதியில் சிஎஸ்ஐ தேவாலயம் அமைந்துள்ளது. இந்த ஆலயத்திற்கு சொந்தமான ஆங்கிளின்கன் கல்லறை தோட்டம் பல கோடி மதிப்புள்ள சுமார் 2 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. இந்த கல்லறை தோட்டத்தில் கிறிஸ்துவ மதத்தை சேர்ந்த உடல்களை அடக்கம் செய்து வருகிறது. இந்த நிலையில் சேலம் மாநகரம் 16 வது வார்டு திமுக கவுன்சிலர் வசந்தா,- அவரின் கணவர் மயில்வேல் ஆகியோர் கல்லறை தோட்டத்தில் ஒரு பகுதியை ஆக்கிரமித்து வணிக வளாகம் கட்ட நடவடிக்கை எடுத்து தடுப்பு சுவர் அமைத்துள்ளனர். இது குறித்து சிஎஸ்ஐ கிறிஸ்தவ தேவாலய நிர்வாகிகள் திமுக கவுன்சிலரிடம் கேட்டதற்கு தகாத வார்த்தையில் பேசியும் மிரட்டியும் உள்ளனர். எனவே எங்களுக்கு நிலத்தை ஆக்கிரமிப்பு செய்த 16 வது வார்டு கவுன்சிலர் வசந்தா மயில் வேல் மீது நடவடிக்கை எடுத்து தேவாலயத்துக்கு சொந்தமான நிலத்தை மீட்டு தர வேண்டும் என தெரிவித்தனர். நிலத்தை மீட்காவிட்டால் தேவாலய நிர்வாகிகள் மற்றும் மக்கள் ஒன்று கூடி நிலத்தை மீட்டுத் தர வலியுறுத்தி மிகப்பெரிய அளவில் மறியல் போராட்டம் நடத்தப்படும் என தெரிவித்தனர்.
சிஎஸ்ஐ தேவாலயத்திற்கு சொந்தமான கல்லறை தோட்டத்தில் சுமார் ஒரு கோடி மதிப்பிலான நிலத்தை ஆக்கிரமித்த திமுக கவுன்சிலர் மீது நடவடிக்கை எடுக்க கோரி ஆணையாளர் அலுவலகத்தில் புகார் அளிக்க வந்ததால் பரபரப்பு நிலவியது.