SC Stray Dogs: குழந்தைகள் டூ முதியவர்கள்.. தெரு நாய்கள் பிரச்னை ஒழியுமா? உச்சநீதிமன்றம் சொல்லப்போவது என்ன?
SC Stray Dogs: டெல்லி மற்றும் தலைநகரை சுற்றியுள்ள பகுதிகளிலிருந்து தெருநாய்களை அப்புறத்த உத்தரவிட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பளிக்கிறது.

SC Stray Dogs: டெல்லி மற்றும் தலைநகரை சுற்றியுள்ள பகுதிகளிலிருந்து தெருநாய்களை அப்புறத்த உத்தரவிட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் உச்சநீதிமன்றம் இடைக்கால உத்தரவினை பிறப்பிக்க உள்ளது.
தெருநாய்கள் பிரச்னை:
டெல்லி மற்றும் தலைநகர் பிராந்தியத்தில் இருந்து தெருநாய்களை காப்பகங்களுக்கு மாற்றுவதை கட்டாயமாக்கும் முந்தைய உத்தரவை நிறுத்தி வைக்கக் கோரிய மனு தொடர்பாக உச்ச நீதிமன்றம் இன்று தனது இடைக்கால உத்தரவை பிறப்பிக்க உள்ளது. டெல்லி அரசு மற்றும் விலங்கு நல அமைப்புகள் உட்பட பல தரப்பினரின் வாதங்களைக் கேட்ட நீதிபதிகள் விக்ரம் நாத், சந்தீப் மேத்தா மற்றும் என்.வி. அஞ்சாரியா ஆகியோர் அடங்கிய சிறப்பு அமர்வு ஆகஸ்ட் 14 அன்று பிறப்பித்த உத்தரவை ஒத்திவைத்தது. உள்ளூர் அதிகாரிகளின் "செயலற்ற தன்மையால்" இந்தப் பிரச்சினை உருவானது என்று அமர்வு கண்டித்தது குறிப்பிடத்தக்கது.
விலங்கு நல ஆர்வலர்கள்:
நாய் கடி பிரச்னை தொடர்பான வழக்கில் ஆகஸ்ட் 14 ஆம் தேதி நடைபெற்ற விசாரணையில், டெல்லி அரசாங்கத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, "ஒரு தரப்பினர் விலங்குகளுக்காக குரல் கொடுக்கிறார்கள். நான் வீடியோக்கள், நேர்காணல்களைப் பார்த்திருக்கிறேன். மக்கள் இறைச்சி, கோழி போன்றவற்றை சாப்பிடுகிறார்கள், இப்போது விலங்கு பிரியர்களாகக் காட்டிக் கொண்டு இதை எதிர்க்கிறார்கள் ரேபிஸ் காரணமாக குழந்தைகள் இறக்கின்றனர்.
கருத்தடை திட்டங்கள் வெறிநாய்க்கடியை ஒழிக்கவில்லை, தடுப்பூசி போடுவதால் மட்டுமே நாய் தாக்குதல்களால் ஏற்படும் காயங்களைத் தடுக்க முடியாது” என்றும் அவர் வாதிட்டதாக கூறப்படுகிறது.
காப்பகம், கருத்தடை சிகிச்சை பிரச்னைகள்:
உச்ச நீதிமன்றத்தின் ஆகஸ்ட் 11 உத்தரவின் சில பகுதிகளுக்கு தடை விதிக்கக் கோரி ஒரு தன்னார்வ தொண்டு நிறுவனம் சார்பில் வாதாடிய மூத்த வழக்கறிஞர் கபில் சிபல், அதிகாரிகளின் தற்போதைய அணுகுமுறை நாய்களைக் கொல்ல வழிவகுக்கும் என்று எச்சரித்தார். நிதி கிடைத்த போதிலும் நகராட்சி நிறுவனங்கள் தங்குமிடங்களை கட்டவோ அல்லது கருத்தடை இயக்கங்களை மேற்கொள்ளவோ ஏன் தவறிவிட்டன என்று கேள்வி எழுப்பினார். மற்றொரு மூத்த வழக்கறிஞர் அபிஷேக் சிங்வி, ரேபிஸ் தொடர்பான இறப்புகள் குறித்த அரசாங்கத்தின் கூற்றை சவால் செய்தார். நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட தரவுகளின் அடிப்படையில் 2022 முதல் 2025 வரை டெல்லியில் ரேபிஸ் இறப்புகள் பூஜ்ஜியமாக இருந்தன" என்று சுட்டிக்காட்டினார்.
உச்ச நீதிமன்ற உத்தரவு
ஆகஸ்ட் 11 ஆம் தேதி உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஜே.பி. பர்திவாலா மற்றும் ஆர். மகாதேவன் ஆகியோர் அடங்கிய அமர்வு பிறப்பித்த உத்தரவைத் தொடர்ந்து, பெரிய அமர்வு விசாரணை நடத்தப்பட்டது. டெல்லி-என்.சி.ஆர் அதிகாரிகள் நாய் காப்பகங்கள் அல்லது பவுண்டுகளை அமைத்து எட்டு வாரங்களுக்குள் நிலை அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும் என்று உத்தரவிட்டது. தெருநாய்களை காப்பகங்களில் இருந்து விடுவிப்பதற்கும் இந்த உத்தரவு தடை விதித்தது. அந்த விசாரணையின் போது, குறைந்தபட்சம் 5,000 விலங்குகளை தங்க வைக்கும் உள்கட்டமைப்புடன் தொடங்கி, தெருக்களில் இருந்து நாய்களை தங்குமிடங்களுக்கு மாற்றத் தொடங்குமாறு அதிகாரிகளிடம் உச்ச நீதிமன்ற அமர்வு கேட்டுக் கொண்டது.
ஆதரவும்.. எதிர்ப்பும்..
தெருநாய்களால் பாதிக்கப்பட்டவர்கள் இந்த தீர்ப்பை வரவேற்றனர். அதேநேரம், இந்த உத்தரவு நாடு முழுவதும் பரவலான போராட்டங்களைத் தூண்டியது, பல விலங்கு நலக் குழுக்களும் குடிமக்களும் கடும் எதிர்ப்பைத் தெரிவித்தனர். பின்னர் இந்த வழக்கை மூன்று நீதிபதிகள் கொண்ட சிறப்பு அமர்வு விசாரித்தபோது, டெல்லி-என்.சி.ஆர். பகுதியில் தெருநாய்களின் அச்சுறுத்தல் பெரும்பாலும், நாய்களுக்கு கருத்தடை மற்றும் தடுப்பூசி போடுவதை கட்டாயமாக்கும் விலங்கு பிறப்பு கட்டுப்பாட்டு விதிகளை அமல்படுத்துவதில் நகராட்சியின் செயலற்ற தன்மையின் விளைவாகும் என்று குறிப்பிட்டது.
இடைக்கால உத்தரவு என்ன?
உச்சநீதிமன்றத்தின் பழைய தீர்ப்பை வரவேற்ற மற்றொரு தரப்பினர், இதனை நாடு முழுவதும் அமல்படுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். தெருநாய்களுக்கு ஆதரவாக பேசுபவர்கள் யாரும் பாதிக்கப்பட்டதாக தெரியவில்லை என்றும், பாதிக்கப்பட்டவர்கள் பக்கம் அரசாங்கம் நிற்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர். உச்சநீதிமன்ற தீர்ப்பை முன்னுதாரணமாக கொண்டு, எங்கள் பகுதியில் உள்ள தெருநாய்களையும் அப்புறப்படுத்த வேண்டும் என வலியுறுத்துகின்றனர். இந்நிலையில், உச்சநீதிமன்றம் இன்று கொடுக்கப்போகும் இடைக்கால உத்தரவு என்ன என்பது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.





















