Chennai Rains: சென்னையில் இடி, மின்னலுடன் பேய் மழை.. 30 மாவட்டங்களில் சம்பவம் இருக்கு - உங்க ஊரில் எப்படி?
சென்னையில் இன்று அதிகாலையிலே இடி, மின்னலுடன் பயங்கரமாக மழை பெய்தது. தமிழகத்தின் 30 மாவட்டங்களில் 8 மணி வரை மழை பெய்வதற்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக வெயில் வாட்டி வதைத்து வந்த நிலையில், இன்று அதிகாலை தலைநகர சென்னையில் மழை கொட்டித் தீர்த்தது. காலையிலே திடீரென இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது.
இடி மின்னலுடன் மழை:
சென்னையின் முக்கிய பகுதிகளான அண்ணாநகர், கிண்டி, கோடம்பாக்கம், மடிப்பாக்கம், வேளச்சேரி, வடபழனி, அசோக் பில்லர், கோயம்பேடு உள்ளிட்ட பல இடங்களிலும் இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்தது.
திடீரென பலத்த இடி மற்றும் மின்னலுடன் பெய்த இந்த மழையில் சென்னையின் பல பகுதிகளில் சாலைகளில் தண்ணீர் தேங்கியது.
30 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு:
வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, காலை 8 மணி வரை செங்கல்பட்டு, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் கடலூரில் இடி, மின்னலுடன் கூடிய பலத்த மழை பெய்யும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு மிதமான மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் நேற்று அறிவித்த நிலையில், இன்று அதிகாலையிலே இடி, மின்னலுடன் மழை வெளுத்து வாங்கியுள்ளது.
தமிழ்நாட்டில் இனி மழைக்காலம் என்பதால் அடிக்கடி மழைப்பொழிவு இருக்கும் என்பதால் அதற்கேற்ப முன்னேற்பாடுகளை அரசு மேற்கொண்டு வருகிறது.
— IMD-Tamilnadu Weather (@ChennaiRmc) August 21, 2025
அதேபோல, ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருச்சி, பெரம்பலூர், அரியலூர், புதுக்கோட்டை, கரூர், தஞ்சை, திருவாரூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், சேலம், நாமக்கல், ஈரோடு, நீலகிரி, கோயம்புத்தூர், தேனி, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும் இடி, மின்னலுடன் பெய்வதற்கு வாய்ப்புகள் உள்ளது.
கிருஷ்ணகிரி, தர்மபுரி, தென்காசி மற்றும் திருநெல்வேலியில் லேசான மழை பெய்வதற்கு வாய்ப்புகள் உள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சாலையில் தேங்கிய மழைநீர்:
காலையிலே பயங்கரமான இடி மற்றும் மின்னலுடன் மழை பெய்து வருவதால் சென்னையில் காலையிலே பணிக்குச் செல்பவர்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். சென்னையின் பல இடங்களில் மெட்ரோ பணிகள் நடைபெற்று வருவதால் அங்கே மழைநீர் தேங்கியுள்ளது. இதனால், வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். சாலைகளில் தேங்கியுள்ள மழைநீரை அகற்றும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.
தமிழ்நாட்டில் இனி வடகிழக்கு பருவமழை காலம் விரைவில் தொடங்கும் என்பதால் சென்னை உள்ளிட்ட பல மாவட்டங்களில் கனமழை அவ்வப்போது இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக, தலைநகர் சென்னையில் ஆண்டு இறுதியில் மிக கனமழை இருக்கும் என்பதால் அதற்கான முன்னேற்பாடுகளையும் அரசு தற்போது தீவிரமாக முன்னெடுக்க திட்டம் வகுத்து வருகின்றனர்.





















