Kallakurichi Hooch Tragedy : ”கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய சம்பவத்தில் இந்த அரசியல் கட்சி பிரமுகர்களுக்கு தொடர்பா?” வெளியான பரபரப்பு அறிக்கை..!
”கள்ளக்குறிச்சி எம்.பிக்கு பாராட்டு தெரிவித்து கைது செய்யப்பட்டுள்ள கள்ளச்சாராய வியாபாரி கண்ணுக்குட்டி பேனர் வைத்துள்ளார் என புகார் எழுந்துள்ளது”
கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரத்தில் கள்ளச்சாராயம் குடித்து இதுவரை 35 பேர் உயிரிழந்த சம்பவம் தமிழ்நாட்டையே உலுக்கி வருகிறத். இந்நிலையில், இந்த கள்ளச்சாராய கும்பலுக்கும் திமுக பிரமுகர்களுக்கும் தொடர்பிருப்பதாக வெளியாகியுள்ள அறிக்கை அரசியல் களத்தில் அனலை கிளப்பியிருக்கிறது.
லஞ்சம் வாங்கிய போலீஸ் ? கண்டும் காணமல் இருந்ததா?
கல்வாராயன் மலையில் கள்ளச்சாராயம் காய்ச்சுவது என்பது பலருக்கு அந்த பகுதியில் குடும்ப தொழிலாகவே மாறிபோய்விட்ட நிலையில், அதனை முழுமையாக தடுக்கவும் கள்ளச்சாராயம் விற்பனையை நிறுத்தவும் காவல்துறை முழுமையான நடவடிக்கை எடுக்கவில்லையென்பது தெள்ளத் தெளிவாக இந்த சம்பவத்தில் தெரிய வருகிறது. இத்தனைக்கும் சட்டம் ஒழுங்கு காவல்துறையினர் கூட இதை செய்ய தேவையில்லை. மதுவிலக்கு அமலாக்க பிரிவு என கள்ளச்சாராயம், சட்டவிரோதா மது விற்பனை என இவற்றை தடுப்பதற்கென ஒவ்வொரு மாவட்டத்திலும் தனி போலீஸ் பிரிவே இருக்கிறது. அப்படியிருந்தும், லஞ்சம் வாங்கிக்கொண்டு இந்த கள்ளச்சாராய விற்பனையை கண்டுகொள்ளாமல் விட்டுள்ளது பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது
கைது செய்தவுடனே வெளியில் வரும் சாராய வியாபாரிகள்
காவல்துறையினர் சென்று கள்ளச்சாராயம் காய்ச்சுபவர்களையும் அதனை விற்பவர்களையும் கைது செய்தால், அரசியல் கட்சிகளில் பொறுப்புகளில் இருப்பவர்கள், அதுவும் முக்கிய கட்சியை சேர்ந்த பதவியில் உள்ளவர்கள் சிபாரிசு மூலம் கைது செய்யப்பட்டவர்கள் சிறையில் அடைக்கப்படுவதற்கு முன்பாகவே வெளியே வந்துவிடுகிறார்கள் என்ற குற்றச்சாட்டு அந்த பகுதியில் தொடர்ச்சியாக எழுந்து வந்திருக்கிறது.
அரசியல் கட்சித் தலைவர்களுக்கு தொடர்பா ? வெளியான பரபரப்பு அறிக்கை
இது தொடர்பாக பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் பரபரப்பு அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறார். அதில், கல்வராயன்மலையில் 24 மணி நேரமும் கள்ளச்சாராயம் காய்ச்சி, மாவட்டத்தின் அனைத்துப் பகுதிகளிலும் விற்கப்படுகிறது. அதற்கு காரணமானவர்களை காவல்துறையினர் கைது செய்தாலும் கூட, கள்ளக்குறிச்சி மாவட்டத்தின் பொறுப்பு அமைச்சராக உள்ள எ.வ. வேலுவின் ஆதரவாளரான ரிஷிவந்தியம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் வசந்தம் கார்த்திகேயன், சங்கராபுரம் சட்டமன்ற உறுப்பினர் உதயசூரியன் உள்ளிட்டோர் தலையிட்டு அவர்களை விடுதலை செய்ய வைக்கின்றனர் என்று பகிரங்கமாக குற்றஞ்சாட்டியிருக்கிறார்.
கைது செய்யப்பட்ட கண்ணுக்குட்டி, திமுக எம்.பி.க்கு வாழ்த்து தெரிவித்தாரா ?
மேலும், கள்ளச்சாராய வியாபாரிகளுக்கு எதிராக காவல்துறையினரால் சுதந்திரமாக நடவடிக்கை எடுக்க முடியவில்லை என்றும் இதற்கெல்லாம் மேலாக கள்ளச்சாராய சாவு தொடர்பாக இப்போது கைது செய்யப்பட்டுள்ள கண்ணுக்குட்டி என்கிற கோவிந்தராஜ் என்ற சாராய வியாபாரி, அண்மையில் நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் கள்ளக்குறிச்சி தொகுதியில் வெற்றி பெற்ற திமுக வேட்பாளர் மலையரசனுக்கு வாழ்த்து தெரிவித்து கள்ளக்குறிச்சி நான்குமுனை சந்திப்பில் திமுக அலுவலகம் அருகில் பதாகை வைத்துள்ளார் என்றும் கள்ளச்சாராய சாவு குறித்த செய்தி வெளியான பிறகு தான் நேற்று மாலை அந்த பதாகை அகற்றப்பட்டுள்ளது எனவும் குறிப்பிட்டுள்ள பாமக நிறுவனர் மருத்துவர் இராமதாஸ், அந்த அளவுக்கு சாராய வணிகர்களுக்கும் திமுகவுக்கும் தொடர்பு உள்ளது என தன்னுடைய அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
அமைச்சர் மஸ்தானுக்கு தொடர்பு - பற்ற வைத்த அன்புமணி ராமதாஸ்
அதோடு, கடந்த ஆண்டு மரக்காணம் பகுதியில் நிகழ்ந்த கள்ளச்சாராய சாவுகளுக்கு காரணமான சாராய வியாபாரி மருவூர் இராஜாவுடன் விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த அமைச்சர் மஸ்தானுக்கு நெருங்கிய உறவு இருந்தது அம்பலமானது. கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய சாவுகளில் சாராய வியாபாரி கண்ணுக்குட்டி என்கிற கோவிந்தராஜ் என்பவருக்கும் திமுகவின் சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டோருக்கும் இடையே நெருங்கிய உறவு இருப்பது இப்போது உறுதியாகியுள்ளது. இது குறித்து விசாரணை நடத்துவதுடன், கள்ளச்சாராய வணிகத்திற்கு துணை போன அனைவர் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்