Gujarat Election : " வெற்றி பெற்றால் கிரிக்கெட் மைதானத்தில் மோடி பெயர் நீக்கம்" - தேர்தல் வாக்குறுதி அளித்த காங்கிரஸ்..!
குஜராத் சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்றால் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தின் பெயர் மாற்றியமைக்கப்படும் என காங்கிரஸ் வாக்குறுதி அளித்துள்ளது.
குஜராத்தில் கடந்த 30 ஆண்டுகளாக பாஜக ஆட்சி தான் நடைபெற்று வருகிறது. அதிலும் பிரதமர் மோடி நான்கு முறை குஜராத் தேர்தலில் வெற்றி பெற்று, கடந்த 2001 முதல் 2014ம் ஆண்டு வரை அம்மாநில முதலமைச்சராக பதவி வகித்தார்.
குஜராத் மாடலை முன்னிலைப்படுத்தியே கடந்த 2014 மற்றும் 2019ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தல்களில் பாஜக கூட்டணி பெரும் வெற்றி பெற்றது. இதன் காரணமாகவே குஜராத் மாநில சட்டமன்ற தேர்தல் தேசிய அளவில் முக்கியத்துவம் பெற்றுள்ளது. இந்நிலையில் தான், குஜராத் சட்டமன்ற தேர்தல் வரும் டிசம்பர் 1 மற்றும் 5 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடைபெற உள்ளது.
குவியும் தேர்தல் வாக்குறுதிகள்
வழக்கமாக குஜராத்தில் பாஜக மற்றும் காங்கிரஸ் இடையே கடும் போட்டி நிலவும். ஆனால், இம்முறை ஆம் ஆத்மி கட்சியும் களத்தில் இறங்கியுள்ளதால், இந்த தேர்தலில் மும்முனைப்போட்டி நிலவி வருகிறது. கடந்த முறையே பாஜக கைப்பற்றிய தொகுதிகள் இரட்டை இலக்கங்களில் அடங்கியதால், இம்முறை பாஜக சற்று கூடுதல் கவனமாகவே செயல்பட்டு வருகிறது. கடந்த தேர்தலில் வென்ற 38 எம்.எல்.ஏக்களுக்கு பாஜக இம்முறை வாய்ப்பு மறுத்து, பல அதிரடி முடிவுகளை எடுத்துள்ளது. இதனிடையே, ஆம் ஆத்மி கட்சி இலவச மின்சாரம், வேலைவாய்ப்புகள் என ஏராளமான தேர்தல் வாக்குறுதிகளை வழங்கி வருகிறது. இந்நிலையில் காங்கிரசும் தனது தேர்தல் வாக்குறுதி பட்டியலை வெளியிட்டுள்ளது.
காங்கிரஸ் தேர்தல் வாக்குறுதி:
குஜராத்தில் 10 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும், அரசு பணிகளில் 50% பெண்களுக்கு ஒதுக்கப்படும், கணவரை இழந்த பெண்கள் மற்றும் வயது முதிர்ந்த பெண்களுக்கு மாதம் ரூ.2,000 உதவித்தொகை வழங்கப்படும் எனவும் காங்கிரஸ் தேர்தல் வாக்குறுதியில் தெரிவித்துள்ளது. 300 யூனிட் இலவச மின்சாரம், ரூ.3 லட்சம் வரையிலான விவசாய கடன் தள்ளுபடி, வேலையில்லா இளைஞர்களுக்கு மாதம் ரூ.3,000 உதவித்தொகை, வீட்டு பயன்பாட்டிற்கான சிலிண்டர் ரூ.500-க்கு வழங்கப்படும் போன்ற பல்வேறு வாக்குறுதிகளும் வழங்கப்பட்டுள்ளன. பெண்களுக்கு முதுநிலை பட்டப்படிப்பு வரை இலவச கல்வி, ஆங்கில வழியில் பாடம் கற்பிக்க 3000 பள்ளிகள் திறக்கப்படும், பொதுமக்களுக்கு ரூ.10 லட்சம் வரையில் இலவச சிகிச்சை போன்ற வாக்குறுதிகளையும் காங்கிரஸ் வழங்கியுள்ளது.
IMAGE COURTESY: INDIA TODAY
மோடி பெயர் மாற்றப்படும் - காங்கிரஸ்
குஜராத் தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்றால், அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தின் பெயர் சர்தார் படேல் மைதானம் என பெயர் மாற்றம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. முதல் அமைச்சரவை கூட்டத்திலேயே காங்கிரஸ் வாக்குறுதிகள் அரசின் அதிகாரப்பூர்வ ஆவணமாக எடுத்துக்கொள்ளப்படும் எனவும், காங்கிரஸ் அறிவித்துள்ளது.