ஜீப் சாகசம் மீண்டும் துவக்கம்: சுற்றுலா பயணிகளுக்கு கட்டுப்பாடுகளுடன் அனுமதி! முழு விவரம் இதோ!
இடுக்கி மாவட்டத்தில் சாகச ஜீப் பயணம் மேற்கொள்ள சில கட்டுப்பாடுகளுடன் அனுமதி அளித்துள்ளார் அம்மாவட்ட ஆட்சியர் விக்னேஷ்வரி.
கேரள மாநிலம் இடுக்கியில் பல்வேறு சுற்றுலா தலங்கள் உள்ளன. மூணாறு, மறையூர், வாகமன் உள்ளிட்ட பல்வேறு சுற்றுலாத் தலங்களுக்கு சுற்றுலா பயணிகள் சென்று வருகின்றனர். இவ்விடங்களில் குறிப்பாக மலைப்பாங்கான பகுதிகளுக்கு ஜீப்களில் சாகச பயணம் செல்வதற்கும் அதிகமான சுற்றுலா பயணிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்த நிலையில்தான் சுற்றுலாப் பயணிகளின் ஆர்வத்தை கருத்தில் கொண்டு இங்கு சாகச ஜீப் பயணம் கொண்டுவரப்பட்டது. இந்த ஜீப் சவாரி மூலம் இடுக்கிக்கு சுற்றுலா வரும் பயணிகள், இயற்கை அழகை ரசிப்பதோடு, சாகச ஜீப் சவாரி பயணமும் சென்று வந்தனர். ஆனால் சில நேரங்கள் சாகச ஜீப் பயணம் மேற்கொள்ளும் போது விபத்துக்களும் ஏற்பட்டது.
சாகச ஜீப் பயணம் மேற்கொள்ளும்போது அடிக்கடி விபத்துக்கள் ஏற்படுவதாக மாவட்ட ஆட்சியர் விக்னேஷ்வரிக்கு புகார்கள் வந்த வண்ணம் இருந்தன. இதையடுத்து ஜீப் சவாரி நடத்த ஆட்சியர் விக்னேஷ்வரி தடை விதித்தார். எனினும், சாகச ஜீப் பயணத்துக்கு விதிக்கப்பட்ட தடை உத்தரவை வாபஸ் பெற வேண்டும் என்று சாகச ஜீப் பயணம் நடத்துவோர் மற்றும் சுற்றுலா தொழிலை நம்பியுள்ள வியாபாரிகள் கோரிக்கை வைத்தனர். தொடர்ந்து பல்வேறு கோரிக்கை மனுக்கள் அனுப்பப்பட்ட நிலையில், இடுக்கி மாவட்ட ஆட்சியர் விக்னேஷ்வரி சாகச ஜீப் பயணம் மேற்கொள்ள சில கட்டுப்பாடுகளுடன் அனுமதி வழங்கியுள்ளார். மேலும் இது தொடர்பாக எந்தெந்த பகுதிகளுக்கு செல்ல வேண்டும் என்று வரைபடம் தயார் செய்ய தேவிகுளம் துணைவட்டாட்சியருக்கு ஜெயச்சந்திரன் தலைமையில் ஒரு குழு அமைத்து உத்தரவிட்டுள்ளார்.
இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டிருப்பதாவது, இன்று 16 ஆம் தேதி முதல் இடுக்கி மாவட்டத்தில் சில கட்டுப்பாடுகளுடன் ஜீப் சாகச பயணம் மேற்கொள்ள அனுமதி வழங்கப்படுகிறது.சாகச ஜீப் பயணம் நடத்தும் ஓட்டுநர்கள் கண்டிப்பாக ஓட்டுனர் உரிமம் பெற்றிருக்க வேண்டும். போலீசாரிடம் தடையில்லா சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். வாகனத்திற்கு தகுதி சான்றிதழ், இன்சூரன்ஸ் சான்றிதழ் இருப்பது அவசியம் ஆகும். மலைப்பகுதியில் ஜீப்களை இயக்க சுற்றுலா வளர்ச்சித்துறை, தீயணைப்பு துறையின் அனுமதி பெற்று இருக்க வேண்டும். மோசமான காலநிலை இருக்கும்போது சாகச பயணம் நடத்தக்கூடாது. இதேபோன்று சாகச ஜீப் பயணம் தொடர்பாக எந்தெந்த பகுதிகளுக்கு செல்ல வேண்டும் என்று வரைபடம் தயார் செய்ய தேவிகுளம்துணைவட்டாட்சியர் ஜெயச்சந்திரன் தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழுவில் வாகன கட்டுப்பாட்டு துறை அதிகாரி, அந்தந்த பகுதி போலீஸ் அதிகாரிகள், பஞ்சாயத்து செயல் அதிகாரிகள், சுற்றுலாத்துறை அதிகாரிகள் ஆகியோர் உறுப்பினர்களாக உள்ளனர்.
இந்த குழுவினர், சாகச சுற்றுலா பயணம் செல்லும் ஜீப்களின் ஓட்டுநர்கள், பயணிகள் எண்ணிக்கை மற்றும் அவர்கள் செல்லும் இடங்கள் குறித்த தகவல்களை இடுக்கி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு அனுப்பி வைப்பார்கள். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. இதையடுத்து இன்று முதல் இடுக்கி மாவட்டத்தில் சாகச ஜீப் பயணம் மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதனால் சுற்றுலா பயணிகளும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.





















