மேலும் அறிய
தூய்மையான மாணிக்கக்கல் வணிகத்தால் ராமநாதபுரத்தில் இந்த ஊர்களுக்கு இப்படியான சிறப்பு பெயரா?
காயல்பட்டினம் இஸ்லாமியர் உதவியுடன் பாண்டியர் மீட்ட செம்பிநாடு. தொல்லியல் ஆய்வு நிறுவனத்தின் தலைவர் வே.இராஜகுரு பேச்சு.

காயல் கலாச்சார சங்கமம்
Source : whats app
பிற்காலப் பாண்டியர், நாயக்கர் காலத்திலும் இப்பள்ளி புனரமைப்பு செய்யப்பட்டுள்ளதை இங்குள்ள தூண்கள் அமைப்பால் அறிய முடிகிறது - எனவும் தெரிவித்தார்.
கலாச்சார சங்கமம்
காயல்பட்டினம் வரலாற்று ஆய்வு மையம் சார்பில் நடந்த மூன்றாவது காயல் கலாச்சார சங்கம விழா வெகு விமர்சையாக நடைபெற்றது. நிகழ்ச்சியில் அரபுத்தமிழ் தோற்றம், வளர்ச்சி, வீழ்ச்சி, மறுமலர்ச்சி' என்ற நூலையும், அரபு - தமிழ் எழுத்து மாற்றி கருவியையும் அறிமுகம் செய்தனர்.
மாணிக்கக்கல் வணிகத்தால் பெயர் பெற்ற ஊர்கள்
இதில் ராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு நிறுவனத்தின் தலைவர் ராஜகுரு, பாண்டிய மன்னர்களும் காயல்பட்டினமும் என்ற தலைப்பில் பேசியதாவது...,”தமிழ்நாட்டின் கிழக்குக் கடற்கரையில் பாண்டியர், இஸ்லாமியர் வரலாற்றோடு தொடர்புடைய தொண்டி, பெரியபட்டினம், காயல்பட்டினம் ஆகிய மூன்று ஊர்களும் பவித்திரமாணிக்கப்பட்டினம் என்றே வரலாற்றின் இடைக்காலத்தில் அழைக்கப்பட்டன. தூய்மையான மாணிக்கக்கல் வணிகத்தால் இவ்வூர்கள் இப்பெயர் பெற்றுள்ளன.
இரண்டு அச்சு நாணயம் கொடுக்கப்பட்டுள்ளது
முதலாம் சடையவர்மன் குலசேகரப் பாண்டியன் கல்வெட்டில், இவ்வூர் ‘தென் கீழ்க் கடல் படர் காயலந்துறை’ எனவும், முதலாம் மாறவர்மன் சுந்தரபாண்டியன் கல்வெட்டில் காயல்துறை எனவும் அழைக்கப்பட்டது. ராமநாதபுரம் மாவட்டம் பெரியபட்டினத்தில் இரண்டாம் மாறவர்மன் சுந்தரபாண்டியன் காலத்தில் சோனகச் சாமந்தப்பள்ளியான பிழார் பள்ளி என்ற இஸ்லாமியப் பள்ளி இருந்ததைப்போல் இவ்வூரில் அதற்கு முன்பே சோனவப் பிள்ளார்ப் பள்ளி இருந்துள்ளது. கி.பி.1325இல், கறுப்புடையார் பள்ளியில் சந்தியா தீப விளக்குகேற்ற, இவ்வூர் வியாபாரி வடவணிகன், இரண்டு அச்சு நாணயம் கொடுத்துள்ளான். இரண்டாம் மாறவர்மன் குலசேகரப் பாண்டியன் காலத்தில், கி.பி.1330இல், இரட்டைக்குளம் பள்ளிவாசலுக்கு சுல்தான், உய்யவந்தான், திருவனந்தான் ஆகியோர் தானம் வழங்கியுள்ளனர்.
பாண்டியர் வரலாற்றுக்கு முக்கிய சான்று
முதலாம் மாறவர்மன் வீரபாண்டியனின் கி.பி.1345 ஆண்டுக் கல்வெட்டு, பவித்தரமாணிக்கபட்டினத்து கறுப்புடையார் சோனகப்பள்ளிக்கு, ஆரல் கத்தலை தரள தரங்கத்து சோனக வியாபாரி நாயகத்திடம், காகிற்றூர் நாடாள்வான் அவ்வூரில் உள்ள நிலத்தை தானமாகக் கொடுத்துள்ளார். இக்கல்வெட்டில் செம்பிநாடு கொண்டருளிய என முதலாம் மாறவர்மன் வீரபாண்டியன் அழைக்கப்படுகிறான். திருப்புல்லாணி, கீழக்கரை, பெரியபட்டினம், ஏர்வாடி உள்ளிட்ட பகுதிகள் கீழ்ச்செம்பிநாடு, செம்பிநாடு எனப்படுகின்றன. மதுரையில் டில்லி சுல்தான்கள் ஆட்சி நடந்துவந்த காலத்தில் அவர்களிடமிருந்து செம்பி நாட்டை காயல்பட்டினம் முஸ்லிம்கள் உதவியுடன் பாண்டியர் கைப்பற்றியதால் முதலாம் மாறவர்மன் வீரபாண்டியன் செம்பிநாடு கொண்டருளிய என அழைக்கப்படுகிறான். இது பாண்டியர் வரலாற்றுக்கு ஒரு முக்கிய ஆதாரமாக உள்ளது.
பள்ளிவாசல் குளம் அலம்புநீர் வாவி
செம்பிநாட்டுக்காக டில்லி சுல்தான்கள் பாண்டியர் இடையே அடிக்கடி போர் நடந்திருக்க வேண்டும். மூன்று வகையான எழுத்தமைதியில் 15க்கும் மேற்பட்ட அரபிக் கல்வெட்டுகள் உள்ளதும், விஜயநகர மன்னன் வீர கம்பண உடையாரின் கி.பி.1371-ம் ஆண்டு முதல் கல்வெட்டும் திருப்புல்லாணி கோயிலில் தான் உள்ளது. கி.பி.14-ம் நூற்றாண்டு ஏர்வாடி ஏராந்துறைக் கல்வெட்டில் தமிழுடன் அரபி எழுத்துகளும் உள்ளன. இதன்மூலம் கி.பி.13, 14ஆம் நூற்றாண்டுகளில் பாண்டிய நாட்டின் கிழக்குக் கடற்கரையில் முஸ்லிம் வணிகர்கள் ஆதிக்கம் செலுத்தியதை அறியலாம். அரிகேசரி பராக்கிரம பாண்டியன் கி.பி.1451இல் காயல்பட்டினம் துருக்க நயினாப்பள்ளியில் அர்த்தமண்டபம், இடைநாழி, பெருமண்டபம், அலம்புநீர் வாவி அமைத்து ஆத்தூர் என்ற ஊரையும் தானமாகக் கொடுத்துள்ளான். இதில் பள்ளிவாசல் குளம் அலம்புநீர் வாவி என குறிப்பிடப்பட்டுள்ளது.
முற்காலப் பாண்டியரின் கலைப்பாணி
கோயிலுக்கு தானமாக கொடுக்கப்பட்ட இறையிலி நிலம் தேவதானம் எனப்படுவதைப் போல முஸ்லிம் பள்ளிவாசலுக்கு கொடுக்கப்பட்ட இறையிலி நிலமும் தேவதானம் என கி.பி.1451 காயல்பட்டினம் கொடிமரத்து சிறுநயினார் பள்ளிக் கல்வெட்டு குறிப்பிடுகிறது. பெரிய குத்பா பள்ளியில் பெரிய அளவிலான சதுரத் தூண்கள் வெட்டுப் போதிகையுடன் உள்ளன. இது முற்காலப் பாண்டியரின் கலைப்பாணியில் அமைந்துள்ளதால் இப்பள்ளி கி.பி.9ஆம் நூற்றாண்டு அளவில் கட்டப்பட்டிருக்கலாம். பிற்காலப் பாண்டியர், நாயக்கர் காலத்திலும் இப்பள்ளி புனரமைப்பு செய்யப்பட்டுள்ளதை இங்குள்ள தூண்கள் அமைப்பால் அறிய முடிகிறது” என்றும் கூறினார்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் படிக்கவும்
Advertisement
Advertisement





















