கரூர் மறைமுகத் தேர்தலில் கட்சி தாவும் கவுன்சிலர்கள் - செந்தில் பாலாஜி VS எம்.ஆர்.விஜயபாஸ்கர்
12 உறுப்பினர் கொண்ட கரூர் மாவட்ட ஊராட்சி தற்போது அதிமுக 6 உறுப்பினர்களும், திமுக 6உறுப்பினர் சம நிலையில் இருப்பதால் துணைத் தலைவர் தேர்வு இதனால் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
கரூர் மாவட்டத்தில் 2019ஆம் ஆண்டு ஊராட்சி தேர்தல் நடைபெற்றது இதில் 12 மாவட்ட ஊராட்சி உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். அதிமுகவைச் சேர்ந்த ஒன்பது பேரும் திமுகவைச் சேர்ந்த 3 பேர் வெற்றி பெற்றனர். இதையடுத்து மாவட்ட ஊராட்சி குழு தலைவராக அதிமுகவைச் சேர்ந்த கண்ணதாசனும், துணைத்தலைவராக முத்துக்குமாரும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இந்நிலைகளில் சட்டமன்றத் தேர்தலில் கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடுவதற்காக துணைத் தலைவராக இருந்த முத்துக்குமார் தனது பதவியை ராஜினாமா செய்தார்.
நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் முத்துக்குமார் தோல்வி அடைந்தார். இந்நிலையில் பல்வேறு காரணங்களால் ஏற்பட்ட காலி இடங்கள் மற்றும் நிரப்பப்படாத பதவிக்கான ஊரக உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கப்பட்டது. இதில் தாந்தோணி ஊராட்சி ஒன்றிய வார்டு எண் 8 க்கான மாவட்ட ஊராட்சி உறுப்பினர் பதவிக்கு அதிமுக சார்பில் மீண்டும் முத்துக்குமாரும், திமுக சார்பில் கண்ணனும் போட்டியிட்டனர்.
இதில் திமுகவைச் சேர்ந்த கண்ணன் வெற்றி பெற்றார். இதையடுத்து மாவட்ட ஊராட்சியில் அதிமுக உறுப்பினர்கள் எண்ணிக்கை 9 ஆக இருந்தது 8 ஆகக்குறைந்தது. திமுகவின் எண்ணிக்கை மூன்றில் இருந்து நான்கு அதிகரித்த நிலையில் மாவட்ட ஊராட்சி குழு துணைத் தலைவர் பதவிக்கு கடந்த அக்டோபர் மாதம் 22ஆம் தேதி மறைமுக தேர்தல் அறிவிக்கப்பட்டது. அப்போது 12 மாவட்ட உறுப்பினர்களும் வந்திருந்தனர்.
கூகுள் செய்திகள் பக்கத்தில் ABPநாடு செய்திகளை உடனுக்குடன் பெற இந்த லிங்கை க்ளிக் செய்யவும்
இந்நிலைகளில் தேர்தல் நடத்தும் அதிகாரி மந்த்ரா சலம் தேர்தலை ஒத்திவைப்பதாக அறிவித்தார். இந்த ஒத்திவைப்புக்கு எதிராக போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் அதிகாரியிடம் காரை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்ட அதிமுகவினர் கைது செய்யப்பட்டனர். இந்த கைதுக்கு எதிராக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் ஈபிஎஸ் ஆகியோர் கண்டன அறிக்கை வெளியிட்டனர்.
அதிமுக மாவட்ட கவுன்சிலர்கள் அலமேலு மற்றும் நல்ல முத்து ஆகியோர் அதிமுகவில் இருந்து விலகி திமுகவில் இணைந்தனர். இதனால் திமுகவின் மாவட்ட குழு உறுப்பினர் எண்ணிக்கை 4 லிருந்து 6 ஆக உயர்ந்தது. அதிமுகவின் மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் எண்ணிக்கை 8 இருந்து 6 ஆகக் குறைந்தது. இதனால் திமுக, அதிமுக சம பலத்துடன் மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர்கள் இருக்கின்றனர். இந்நிலையில் மீண்டும் மாவட்ட ஊராட்சி குழு துணை தலைவர் பதவிக்கு மறைமுக தேர்தல் நேற்று 2.30 மணிக்கு நடத்தப் படுவதாக அறிவிக்கப்பட்டது. இதனால் சமபலத்துடன் திமுக அதிமுக இந்தத் துணைத் தலைமை பதவியை கைப்பற்ற போவது யார் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டது. இதனால் மாவட்ட ஊராட்சி அலுவலகத்தில் பரபரப்பாக காணப்பட்டது. மேலும், போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டிருந்தது. தேர்தல் நடத்தும் அலுவலர் வாணி ஈஸ்வரி மற்றும் உதவி தேர்தல் நடத்தும் அதிகாரி முருகேசன் ஆகியோர், தேர்தல் நடைபெறும் அலுவலகத்தில் தயாராக இருந்தனர்.
இந்நிலையில் திமுக, அதிமுகவை சேர்ந்த கவுன்சிலர் யாரும் மறைமுக தேர்தலுக்கு வரவில்லை. மதியம் 3.30 மணி வரை தேர்தல் நடத்தும் அதிகாரிகள் காத்திருந்தனர். இந்நிலையில் மதியம் 3.30 மணி வரை எந்த மாவட்ட கவுன்சிலர் வராததால் நேற்று நடைபெறவிருந்த மறைமுக தேர்தல் மீண்டும் ஒத்தி வைக்கப்படுவதாக தேர்தல் நடத்தும் அதிகாரி அறிவித்தார். இதுகுறித்து தேர்தல் நடத்தும் அதிகாரியிடம் கேட்டபோது 3.30 மணிவரை யாரும் வராததால் இந்த தேர்தல் வைக்கப்படுவதாகவும், மாநில தேர்தல் ஆணையம் அறிவிக்கும் தேதியில் பின்னர் மீண்டும் தேர்தல் நடத்தப்படும் என தெரிவித்தனர்.
கரூர் மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் துணைத்தலைவர் மறைமுக தேர்தலில் தொடர்ந்து 2 முறை தள்ளி வைக்கப்பட்டுள்ளதால் கரூர் மாவட்ட அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. கரூர் மாவட்ட ஊராட்சி குழு துணைத் தலைவர் பதவிக்கு, திமுக- அதிமுக இடையே கடும் போட்டி இருக்கின்ற காரணத்தாலும், இருவரும் சம நிலையில் இருப்பதால் கூடுதல் பரபரப்பு ஏற்பட்டு வருகிறது. இந்த நிலையில் மறைமுகத் தேர்தல் நடத்துவதில் ஒருதலைபட்சமாக அரசு அதிகாரிகள் செயல்படுவதாக கூறியும் அதனை கடித்தும் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஸ் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் ஈபிஎஸ் ஆகியோர் அறிக்கைவிட்டு இருக்கின்றனர்.
கரூர் மாவட்ட ஊராட்சிக் குழு துணைத் தலைவர் பதவிக்கான தேர்தல் கடந்த 22.10.2021 அன்று நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. மொத்தம் உள்ள 12 மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினர்களில், கழகத்தைச் சேர்ந்தவர்கள் 8 பேர், திமுக-வைச் சேர்ந்தவர்கள் 4 பேர் என்ற எண்ணிக்கையில் உள்ளனர். இந்நிலையில், தேர்தல் நேர்மையாகவும், நியாயமாகவும் வெளிப்படைத் தன்மையுடனும் நடைபெற வேண்டும் என்று கரூர் மாவட்டக் கழகச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான திரு. ஆ.சு. விஜயபாஸ்கர் அவர்கள், கடந்த 21.10.2021 அன்று மாவட்ட ஆட்சித் தலைவர் மற்றும் தேர்தல் அதிகாரியிடம் நேரில் சென்று மனு அளித்திருந்தார்.
மாவட்ட ஊராட்சிக் குழு துணைத் தலைவர் தேர்தலில் திமுக வெற்றி பெற வேண்டும் என்பதற்காக, கழகத்தைச் சேர்ந்த மாவட்ட ஊராட்சிக் குழு வார்டு உறுப்பினர்கள் திமுக-விற்கு ஆதரவாக வாக்களிக்கும்படி மிரட்டப்பட்டு வந்தனர். இந்நிலையில், தேர்தல் நாளான 22.10.2021 அன்று 4 உறுப்பினர்களை மட்டுமே கொண்ட திமுக வெற்றிபெற முடியாது என்பதால், தேர்தல் நடத்தும் அதிகாரி ஆளுங் கட்சியினரின் மிரட்டலுக்குப் பயந்து தேர்தலை தள்ளி வைத்துள்ளார். தேர்தல் அதிகாரி ஒருதலைப்பட்சமாக நடந்து கொண்டார். கழகத்தைச் சேர்ந்த மாவட்ட ஊராட்சிக் குழு வார்டு உறுப்பினர்களும், கழக நிர்வாகிகள் மற்றும் கழக வழக்கறிஞர்களும், தேர்தல் நிறுத்தப்பட்டதற்குக் காரணம் கேட்டபோது, காவல் துறை அதிகாரிகளை வைத்து தாக்குதல் நடத்தி அங்கிருந்தவர்கள் மீது பொய் வழக்கு போட்டுள்ளனர். அதன் பிறகு, தேர்தலை நேர்மையாகவும், நியாயமாகவும், வெளிப்படைத் தன்மையுடனும் நடத்த வேண்டும் என்று கழகத்தைச் சேர்ந்த மாவட்ட ஊராட்சிக் குழு வார்டு உறுப்பினர்கள் மதுரை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர்.
மாண்புமிகு நீதியரசர்கள் தேர்தல்] ஆணையத்திற்கும், மாவட்ட ஆட்சித் தலைவருக்கும், தேர்தல் நடத்தும் அதிகாரிக்கும், தேர்தலை நேர்மையாக நடத்தவும், தேர்தலை வீடியோ பதிவு செய்யவும் உத்தரவிட்டனர். இந்நிலையில், தேர்தலில் தோற்றுவிடுவோம் என்று தெரிந்துகொண்ட மாவட்ட
அமைச்சர் திரு. செந்தில்பாலாஜி மற்றும் அவரது சகோதரர் திரு. அசோக்குமார் தூண்டுதலின் பேரில், அரசு அதிகாரிகள் மற்றும் காவல் துறை அதிகாரிகளை வைத்து, கழகத்தைச் சேர்ந்த மாவட்ட ஊராட்சிக் குழு வார்டு உறுப்பினர்களை மிரட்டியும், அச்சுறுத்தியும் வருகின்றனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு, கழகத்தைச் சேர்ந்த கரூர் மாவட்ட ஊராட்சிக் குழு 2வது வார்டு உறுப்பினர் திருமதி ஆ. அலமேலு அவர்களின் கணவர் மீது, குட்கா வைத்திருந்ததாக ஜாமீனில் வெளியில் வர முடியாத பிரிவுகளில் காவல் துறையினர் இரண்டு பொய் வழக்குகளைப் போட்டுள்ளனர். திருமதி அலமேலு மற்றும் அவரது குடும்பத்தினர் தொடர்ந்து மிரட்டப்படவே, தங்கள் குடும்பத்தையும், தொழிலையும் காப்பாற்றிக்கொள்ள வேறு வழியின்றி அவர்கள் கடந்த 18.11.2021 அன்று திமுக-வில் சேர்ந்துவிட்டனர்.
அதே போல், கழகத்தைச் சேர்ந்த மாவட்ட ஊராட்சிக் குழு 10வது வார்டு உறுப்பினர் திருமதி நல்லமுத்து வடிவேல் அவர்களுக்குச் சொந்தமான நிறுவனத்திற்கு மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் நேரில் சென்று, நிறுவனத்தை சீல் வைப்பதாக மிரட்டியும்; ஜாமீனில் வெளியில் வர முடியாத பிரிவுகளில் வழக்கு தொடுப்பதாகவும் கூறியுள்ளனர். அவர்களின் மிரட்டலுக்குப் பயந்து 23.11.2021 அன்று திருமதி நல்லமுத்து வடிவேல் அவர்களும் திமுக-வில் சேர்ந்துவிட்டார். இதுபோல், கரூர் மாவட்டத்தில் தொடர்ந்து, கழகத்தைச் சேர்ந்த மாவட்ட ஊராட்சிக் குழு வார்டு உறுப்பினர்கள், ஊராட்சி ஒன்றிய குழுத் தலைவர்கள், ஊராட்சி ஒன்றியக் குழு துணைத் தலைவர்கள், ஊராட்சி மன்றத் தலைவர்கள், ஊராட்சி மன்ற துணைத் தலைவர்கள், ஊராட்சி ஒன்றியக் குழு வார்டு உறுப்பினர்கள், மாவட்டத்தைச் சேர்ந்த கழக நிர்வாகிகள், கழக உடன்பிறப்புகள் மற்றும் கழகத்தின் ஆதரவாளர்கள் அனைவரையும் திமுக-வில் சேருமாறு, மாவட்ட அமைச்சர் திரு. செந்தில்பாலாஜி மற்றும் அவரது சகோதரர் திரு. அசோக்குமார் ஆகியோர் தொடர்ந்து மிரட்டி வருகின்றனர்.
கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த கழக நிர்வாகிகள் திமுக-வில் சேரவில்லை என்றால், அவர்கள் மீது ஜாமீனில் வெளியில் வர முடியாத பிரிவுகளில் பொய் வழக்குகள் தொடுக்கப்பட்டு வருகின்றன. மேலும், அவர்கள் தொழில் செய்ய முடியாத அளவிற்கு திமுக-வினர், அதிகாரிகளை வைத்து மிரட்டியும் வருகின்றனர். நேர்மையாக இருக்க வேண்டிய அரசு அதிகாரிகள் மற்றும் காவல் துறை அதிகாரிகள் திமுக-விற்கு ஆள் சேர்ப்பது வெட்கப்பட வேண்டிய ஒன்று. மேலும், அரசியல் ரீதியாக அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை சந்திக்க முடியாத திராணியற்ற திமுகவை வன்மையாகக் கண்டிக்கிறோம் என அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.