யார் அந்த சார்? ஆட்டத்தை ஆரம்பித்த அதிமுக! தாக்குதலைத் தொடங்கிய தவெக! என்ன செய்யும் திமுக?
மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரத்தில் அ.தி.மு.க. போராட்டம் நடத்திய நிலையில், விஜய்யும் ஆளுநரைச் சந்தித்தது அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ்நாட்டில் அடுத்த சட்டமன்ற தேர்தல் 2026ம் ஆண்டு தொடங்க உள்ளது. ஆளுங்கட்சியான தி.மு.க.வை ஆட்சியை தக்கவைக்க வேண்டும் என்று இப்போது முதலே அதற்கான பணியில் ஈடுபட்டு வருகிறது. பிரதான எதிர்க்கட்சியான அ.தி.மு.க. இழந்த ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்று துடிப்புடன் உள்ளது. புதியதாக கட்சித் தொடங்கியுள்ள விஜய் முதலமைச்சர் நாற்காலியில் அமர்ந்தே தீர வேண்டும் என்று காய் நகர்த்தி வருகிறார்.
மாணவிக்கு நிகழ்ந்த துயரம்:
அடுத்தாண்டு சட்டமன்ற தேர்தல் களம் தற்போதே சூடுபிடித்துள்ள நிலையில், மகளிருக்கு கட்டணமில்லா பயணம், மாதந்தோறும் உதவித்தொகை என தி.மு.க. அரசு வாக்குகளை கவர சில திட்டங்களை தங்கள் வசம் வைத்திருந்தாலும் தி.மு.க.விற்கு தற்போது பெரிய பின்னடைவாக அமைந்திருப்பது சட்டம் ஒழுங்கு. பகுஜன் சமாஜ்வாதி கட்சித் தமிழக தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலைக்குப் பிறகு, தி.மு.க. அரசுக்கு மிகப்பெரிய களங்கத்தை ஏற்படுத்தியிருப்பது அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை விவகாரம் ஆகும்.
அதுவும் பல்கைலக்கழகத்தின் உள்ளேயே, பல்கலைக்கழகத்திற்கு தொடர்பே இல்லாத நபரால் மாணவிக்கு நிகழ்ந்த இந்த துயரம் ஒட்டுமொத்த தமிழ்நாட்டையே அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. இந்த விவகாரத்தில் ஞானசேகரன் என்பவர் கைது செய்யப்பட்டிருந்தாலும், இந்த விவகாரத்தின் பின்னணியில் முக்கிய பிரமுகர் ஒருவர் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
யார் அந்த சார்?
அந்த மாணவியை ஞானசேகரன் பாலியல் வன்கொடுமைக்கு முயற்சித்தபோது, ஞானசேகரனுக்கு வந்த போனில் அவர் யாரிடமோ சார்? சார்? என்று பேசியதாக அந்த மாணவி போலீசாரிடம் விசாரணையில் கூறியதாக கூறப்படுகிறது. இந்த சூழலில், அந்த சார் யார்? என்று எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியிருந்தார்.
இந்த சூழலில், இன்று அதிமுக தமிழகத்தையே திரும்பி பார்க்க வைக்கும் வகையில் போராட்டம் ஒன்றை கையில் எடுத்தது. மாநிலத்தின் பல இடங்களிலும் யார் அந்த சார்? என்ற போஸ்டர் அ.தி.மு.க. சார்பில் ஒட்டப்பட்டது. அ.தி.மு.க.வின் முக்கிய பிரபலங்கள் தமிழ்நாடு முழுவதும் யார் அந்த சார்? என்ற கோஷத்துடனும், பதாகையுடனும், தமிழ்நாவு முழுவதும் தி.மு.க. அரசுக்கு எதிராக போராட்டத்தை நடத்தினர். குறிப்பாக, யாரும் எதிர்பாராத விதமாக சென்னையின் புகழ்பெற்ற வணிக வளாகத்தின் உள்ளே யார் அந்த சார்? என்ற பதாகையுடன் போராடியது பலரின் கவனத்தை ஈர்த்தது.
ஒரு பக்கம் அ.தி.மு.க., மறுபக்கம் தவெக
இதுநாள் வரை பெரியளவு எதிர்ப்பை காட்டாமல் இருந்து வந்த எடப்பாடி பழனிசாமி சட்டமன்ற தேர்தலை கருத்தில் கொண்டு இன்று முதல் தங்களது வியூகத்தை அமல்படுத்தத் தொடங்கியுள்ளனர். மறுமுனையில் வீட்டை விட்டே வெளியில் வராமல் அரசியல் செய்கிறார் என்ற விமர்சனத்தை எதிர்கொண்டு வந்த விஜய், இன்று யாரும் எதிர்பாராத வகையில் ஆளுநர் ஆர்.என்.ரவியைச் சந்தித்து புகார் அளித்தார்.
அந்த புகாரில் தி.மு.க. அரசின் மீதான தனது குற்றச்சாட்டையும், பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டியதன் அவசியத்தையும் அவர் முன்வைத்திருந்தார். விஜய்யின் இந்த செயல் யாரும் எதிர்பாராத திருப்பமாகவே அமைந்தது. சட்டமன்ற தேர்தலுக்கு ஓராண்டு மட்டுமே உள்ள நிலையில், விஜய் தலைமையிலான தவெக-வும், எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அ.தி.மு.க.வும் ஒரே நாளில் திமுக-விற்கு நெருக்கடி அளித்துள்ளனர்.
என்ன செய்யப் போகிறது தி.மு.க.?
மாணவியின் வழக்கு பெரும் விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில், எஃப்.ஐ.ஆர். கசிவு, எதிர்க்கட்சிகள் நெருக்கடிகளுக்கு மத்தியில் யார் அந்த சார்? ஞானசேகரனால் வேறு பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளனாரா? என்று கடும் விசாரணைக்குப் பிறகு தக்க தண்டனையைப் பெற்றுத் தர தி.மு.க. அரசு மும்முரம் காட்டும் என்றும் அரசியல் வல்லுனர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். அதேசமயம் எதிர்க்கட்சிகள் தங்களுக்கு அளிக்கும் நெருக்கடிகளை தி.மு.க. எப்படி சமாளிக்கப்போகிறது? அதற்காக அவர்கள் மேற்கொள்ள உள்ள நடவடிக்கைகள் என்னென்ன? என்பது குறித்தும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.