"மாணவியை பாலியல் வன்கொடுமை செய்தது தி.மு.க நிர்வாகி" அண்ணாமலை பகிரங்க குற்றச்சாட்டு!
அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதற்கு முழுக்க முழுக்க தி.மு.க. அரசே பொறுப்பு என்று அண்ணாமலை குற்றம் சாட்டியுள்ளார்.

இந்தியாவின் புகழ்பெற்ற பல்கலைக்கழகம் சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழகம் ஆகும். ஆயிரக்கணக்கான மாணவர்கள் படிக்கும் இந்த பல்கலைக்கழகத்தில் நேற்று பல்கலைக்கழக வளாகத்தில் வைத்தே மாணவியை இளைஞர் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்ச்சியை தமிழ்நாடு முழுவதும் ஏற்படுத்தியுள்ளது.
தி.மு.க. நிர்வாகி
இந்த விவகாரம் தொடர்பாக போலீசார் குற்றவாளியான ஞானசேகரனை கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட ஞானசேகரன் தற்போது போலீஸ் விசாரணையில் உள்ளார். இந்த விவகாரத்திற்கு தமிழ்நாட்டில் உள்ள அரசியல் கட்சித் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். இந்த விவகாரம் தொடர்பாக தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது,
"அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமைக்கு ஆளான வழக்கில் கைதாகியுள்ள ஞானசேகரன் என்ற நபர், ஏற்கனவே இது போன்ற குற்றங்களில் பல முறை ஈடுபட்டவர் என்பதும், அவர் திமுகவின், சைதை கிழக்கு பகுதி மாணவர் அணி துணை அமைப்பாளர் என்பதும் தெரிய வந்துள்ளது. தமிழகம் முழுவதும், இதுபோன்ற குற்ற வழக்குகளில் இருந்து ஒரு தெளிவான திட்டம் புலப்படுகிறது.
1. ஒரு குற்றவாளி, தி.மு.க.வில் உறுப்பினராவதோடு, அந்தப் பகுதி திமுக நிர்வாகிகளுடன் நெருக்கமாகிறார்.
2. அவர் மீது பதிவு செய்யப்பட்ட அனைத்து வழக்குகளும் கிடப்பில் போடப்படுகின்றன. மேலும், அவர் சரித்திரப் பதிவு குற்றவாளி என வகைப்படுத்தப்படாமல், பகுதி காவல் நிலையத்தின் கண்காணிப்புப் பட்டியலில் வைக்கப்படாமல் விடுவிக்கப்படுகிறார்.
3. அந்தந்த பகுதி திமுக நிர்வாகிகள் மற்றும் அமைச்சர்களின் அழுத்தம் காரணமாக, அவர் மீதான வழக்குகளை காவல்துறை விசாரிக்காமல் இருப்பதால், மேலும் குற்றங்களைச் செய்ய அது அவருக்கு இடமளிக்கிறது.
திமுக அரசே பொறுப்பு:
தொடர்ந்து தமிழகமெங்கும் நடைபெறும் குற்றங்களில், குற்றவாளிகள் திமுகவைச் சேர்ந்தவர்கள் என்றால், ஆளுங்கட்சி நிர்வாகிகள் அழுத்தத்தால், காவல்துறை நடவடிக்கை எடுக்காமல் இருக்கிறது. இதனால் பாதிக்கப்படுவது அப்பாவி பொதுமக்களே.
தொடர்ந்து பாலியல் குற்றங்களில் ஈடுபட்டு வந்ததாக, 15 வழக்குகள் உள்ள ஒருவரை, இத்தனை நாட்களாக எந்த நடவடிக்கையும் எடுக்காமல் விட்டுவைத்ததால்தான், இன்று ஒரு அப்பாவி மாணவிக்கு இந்தக் கொடூரம் நடைபெற்றிருக்கிறது. இதற்கு முழுக்க முழுக்க திமுக அரசே பொறுப்பு.
எவ்வளவு காலம் தமிழக மக்கள் இந்த நிலையைப் பொறுத்துக் கொள்ள வேண்டும்? ஆளுங்கட்சியினர் என்றால், குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்கக் கூடாது என்று தமிழகத்தில் சட்டம் உள்ளதா? முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இப்போதாவது பொதுமக்கள் கேள்விகளுக்குப் பதிலளிப்பாரா?"
இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார். இந்த பதிவுடன் கைது செய்யப்பட்ட ஞானசேகரன் அமைச்சர் மா.சுப்பிரமணியத்துடன் நிற்கும் புகைப்படத்தையும், உதயநிதி ஸ்டாலின் அருகில் நிற்கும் புகைப்படத்தையும் பகிர்ந்துள்ளார்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

