மேலும் அறிய
சிவகங்கையில் 246 ஆண்டுகள் பழமையான ஆங்கில எழுத்து கல்வெட்டு கண்டுபிடிப்பு
இவ்வூரில் 246 ஆண்டுகளுக்கு முன்னாள் கல்லறையின் தலைக்கல்லாக வைக்கப்பட்ட ஒரு கல்வெட்டு பழமையை தாங்கி நின்று வரலாறு பேசி நிற்கிறது.

ஆங்கில கல்வெட்டு
Source : whats app
சிவகங்கையில் 246 ஆண்டுகள் பழமையான ஆற்காடு நவாப் கால ஆங்கில எழுத்தால் எழுதப்பட்ட கல்லறைக் கல்வெட்டு கண்டெடுக்கப்பட்டுள்ளது.
கல்வெட்டு கண்டெடுப்பு
சிவகங்கை நகர் சமத்துவபுரம் பகுதியில் கல்வெட்டு ஒன்று கிடப்பதாக சிவகங்கையைச் சேர்ந்த வழக்கறிஞர் சத்தியன் சிவகங்கை தொல்நடைக் குழுவிற்கு தகவல் தெரிவித்தார். அதன் அடிப்படையில் அவ்விடத்தில் சிவகங்கை தொல்நடைக் குழு நிறுவநர் புலவர் கா. காளிராசா, செயலர் இரா.நரசிம்மன் கள ஆய்வு மேற்கொண்டனர். இதுகுறித்து சிவகங்கை தொல்நடைக் குழு நிறுவநர், புலவர் கா.காளிராசா தெரிவித்ததாவது...,"பழமையான கட்டடங்களை இடித்து அப்புறப்படுத்தும் ஒப்பந்தகாரர் ஒருவர் சிவகங்கை நகர் பகுதியில் பழமையான கட்டிடம் ஒன்றை இடித்து அப்புறப்படுத்தி இவ்விடத்தில் பழைய கற்களை போட்டு வைத்ததில் இருந்து இக்கல்வெட்டு கண்டெடுக்கப் பெற்றுள்ளது.
கல்வெட்டுச் செய்தி.
1759 ஜூன் முதல் நாள் பிறந்து 1779 ஜூலை 25ஆம் நாள் இறந்து போன 20 ஆண்டுகள் ஒரு மாதம் 25 நாள் மட்டுமே இப்பூமியில் வாழ்ந்த திருமணமாகாத எலிசபெத் ஹெல்மர் எனும் இளம் பெண்ணிற்காக இக்கல்லறைக் கல்வெட்டு ஆங்கில மொழியில் ஆங்கில எழுத்தால் எழுதப்பட்டு வைக்கப்பட்டுள்ளது.
கல்வெட்டு வரிகள்.
HEAR:
LAID THE: BODY
OF: MS ELLIZA
BETH: HALMEY
ER BORNE: IN THE YEAR OF OUR LORD 1759
THE FIRS JUNE: DIED
1779 THE 25 JULY
HEAR AGE 20 YEAR
ONE MONTH 25 TAYS
கல்வெட்டு வரிகள் தமிழில்.
இங்கே புதைக்கப்பட்ட உடல் செல்வி எலிசபெத் ஹெல்மெர், இவர் கடவுள் அருளால் பிறந்தது 1759 ஜூன் முதல் நாள், இறந்தது 1779 ஜூலை 25ஆம் நாள். இவளுக்கு வயது 20 ஆண்டுகள் ஒரு மாதம் 25 நாள்கள் என எழுதப்பெற்றுள்ளது. கல்வெட்டு அமைப்பு முறை நான்கடி உயரமும் இரண்டடி அகலமும் உடையதான கல்லில் எழுத்து புடைப்பாக உள்ளபடியும் தலைப்பகுதி அரைவட்ட வடிவிலும் மிகவும் நேர்த்தியாக கல்வெட்டு அமைக்கப்பட்டுள்ளது.
ஆங்கில எழுத்தில் கல்வெட்டு.
பொதுவாக நம் பகுதியில் தமிழ் எழுத்து கல்வெட்டுகள் கிரந்தம் மற்றும் தெலுங்கு சொற்கள், எழுத்துகள் கிடைக்கப்பெறுகின்றன, ஆனால் இக்கல்வெட்டு 1779 ஆம் ஆண்டு இன்றிலிருந்து 246 ஆண்டுகளுக்கு முன்னாள் செதுக்கப்பட்டுள்ள ஆங்கில எழுத்துக் கல்வெட்டு என்பது குறிப்பிடத்தக்கது.
ஆற்காடு நவாப் ஆட்சிக்காலம்.
சிவகங்கைப் பகுதியை சசிவர்ணருக்குப் பிறகு சிவகங்கையின் இரண்டாவது மன்னரான முத்து வடுகநாதர் ஆண்டு வந்தார். அவர் ஆற்காடு நவாபிற்காக ஆங்கிலேயப் படையால் 1772ல் கொல்லப்பட்டார். அதன் பிறகு 1772ல் இருந்து 1780 வரை 8 ஆண்டுகள் ஆற்காடு நவாபினரால் சிவகங்கை ஹுசைன் நகர் என்னும் பெயரில் ஆளப்பட்டு வந்தது. சிவகங்கையில் நவாபின் நேர்பிரதிநிதியாக ஆற்காடு நவாபின் மூத்த மகன் உம்தத் உல் உம்ரா செயல்பட்டார். அக்காலக்கட்டத்தில் இக்கல்வெட்டு 1779ல் வெட்டப்பட்டுள்ளது. இது சிவகங்கையை மீண்டும் வேலுநாச்சியார் மற்றும் மருது சகோதரர்கள் கைப்பற்றுவதற்கு முன்னதான காலமாகும்.
பழமையை தாங்கி நின்று வரலாறு பேசி நிற்கிறது
ஆற்காடு நவாப் காலத்தில் சிவகங்கையை ஆற்காட்டு நவாபின் சிப்பாய்களும் ஆங்கிலேயப் படை வீரர்களும் காவல் செய்ததாக வரலாறு தெரிவிக்கிறது, அவ்வாறாக இப்பெண்ணும் ஆங்கிலேயப் படையுடனோ அல்லது வேறு ஏதேனும் தேவையுன் பொருட்டோ கடல் கடந்து கப்பலில் இவ்வூருக்கு வந்திருந்த வேளையில் நோய்வாய் பட்டோ அல்லது வேறு ஏதோ காரணத்தால் இறந்து போய் இருக்கலாம். ஆனாலும் இவ்வூரில் 246 ஆண்டுகளுக்கு முன்னாள் கல்லறையின் தலைக்கல்லாக வைக்கப்பட்ட ஒரு கல்வெட்டு பழமையை தாங்கி நின்று வரலாறு பேசி நிற்கிறது. இக்கல்வெட்டின் முதன்மையையும் பாதுகாப்பையும் கருதி இக்கல்வெட்டை சிவகங்கை அரசு அருங்காட்சியகத்தில் சிவகங்கை தொல்நடைக் குழு ஒப்படைக்க உள்ளது" என்று தெரிவித்தார்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் படிக்கவும்





















