அதிமுக-வைச் சீண்டிய கே.என்.நேரு: திமுக கூட்டணி குறித்து பரபரப்பு பதில்!
திமுக கூட்டணி கட்சிகளுக்கு அதிமுக பொதுச் செயலாளர் அழைப்பு விடுத்தது குறித்தான கேள்விக்கு அமைச்சர் கலகல பேச்சு

*இங்கு இருப்பவர்கள் எல்லாம் அவமானப்பட்டார்கள் என்று அவரிடம் பொய் சொன்னார்களா?.....*
*அவர்தான் அவமானப்பட்டு, அடிப்பட்டு நிற்கிறார்...*
*எங்கள் கூட்டணி எல்லாம் சரியாகவும், நேர்மையாகவும் உள்ளது என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு அமைச்சர் கே.என்.நேரு பதிலடி*
*மதுரை மாநகராட்சியில் சொத்து வரி வசூலிப்பில் தவறு இருந்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் கே.என்.நேரு பேட்டி*
சென்னை தி.நகர் தெற்கு உஸ்மான் சாலையில் 164.92 கோடி ரூபாயில் கட்டப்பட்டு வரும் மேம்பாலப் பணிகளை அமைச்சர் கே.என்.நேரு ஆய்வு மேற்கொண்டார். உடன் சட்டமன்ற உறுப்பினர்கள் கருணாநிதி, மயிலை த.வேலு மற்றும் சென்னை மாநகராட்சி மேயர் பிரியா மற்றும் துணை மேயர் மகேஷ் குமார், ஆணையாளர் குமரகுருபரன் உள்ளிட்ட துறை சார்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டு மேம்பால பணிகள் குறித்து அமைச்சர் கே.என்.நேருக்கு எடுத்துரைத்தனர்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் கே.என்.நேரு பேசியதாவது;
தி.நகர் மேம்பால பணிகள் செப்டம்பர் மாதம் முடிக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்படும் என தெரிவித்தார். ஆர்.கே.நகர் மேம்பாலமும் செப்டம்பர் மாதம் திறக்கப்படும், கணேசபுரம் மேம்பாலத்தில் ரயில்வே பணிகள் தாமதமாக நடைபெற்று வருவதால் ஒரு மாதம் தாமதமாக பாலம் திறக்கப்படும்.
மிகவும் போக்குவரத்து நெரிசல் அதிகம் உள்ள பகுதி என்பதால் வேலைகளில் தாமதம் ஏற்பட்டது. இப்போது கூட இந்த கட்டுமான பணிகளுக்கான பொருட்கள் தாம்பரத்தில் நிற்கிறது. நகருக்குள் வேலை செய்வது சிரமமாக உள்ளது.
திமுக கூட்டணி கட்சிகளுக்கு அதிமுக பொதுச் செயலாளர் அழைப்பு விடுத்தது குறித்தான கேள்விக்கு ;
பாலத்தை பத்தி கேட்கும்போது அதுக்கு ஏங்க போகிறீர்கள் ? நான் ஏதாவது சொன்னால் என்னை டிவியில் போடுகிறீர்கள் என சிரித்தவாறு தெரிவித்தார்.
சென்னையில் வேறு புதிய பாலங்களின் கட்டுமானம் குறித்தான கேள்விக்கு;
வேளச்சேரியில் புது பாலம் அமைக்கும் பணிகளுக்கான டெண்டர் போய்க் கொண்டிருக்கிறது. வள்ளுவர் கோட்டத்திற்கு முன்பாக 175 கோடி ரூபாயில் உள்ள மேம்பாலத்தில் நிலம் கையெகப்படுத்தும் பணிகளால் நின்று கொண்டிருக்கிறது எனவும் மெட்ரோ டிராபிக் பணிகள் தாமதம் ஆகிறது.
சென்னையில் மழை நீர் வடிகால் பணிகள் எந்த அளவிற்கு நடைபெற்று வருகிறது என்ற கேள்விக்கு ;
நேற்று முதலமைச்சர் தலைமையில் நகராட்சி துறையில் இருக்கக் கூடிய மாநகராட்சி ஆணையாளர்கள், அனைத்து உயர் அதிகாரிகள் அழைத்து இரண்டு மணி நேரம் கூட்டம் நடத்தி இருக்கிறார். முழு உத்தரவு பிறப்பித்து இருக்கிறார். மழைக்காலத்துக்கு முன்பாக பணிகளை மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தல்கள் வழங்கி உள்ளார். மழை வந்தாலும் மக்கள் பாதிக்கப்படாத வகையில் அனைத்து பணிகளும் நடைபெற்ற வருகிறது.
சென்னை போன்ற போக்குவரத்து நெரிசல் அதிகம் உள்ள இடங்களில் இரும்பு பாலம் எந்த அளவிற்கு பலம் தரும் என்ற கேள்விக்கு ;
டெல்லி விமான நிலையத்தில் இருந்து 9 கிலோ மீட்டர் துரத்திற்கு இரும்பு பாலம் அமைத்திருக்கிறார்கள். எல்லா இடத்திலும் தொழில்நுட்பத்தை மேம்படுத்தி வேகமாக வேலை செய்வதற்கு இதை அமைத்து வருகிறார்கள்.
மதுரை மாநகராட்சியில் சொத்து வரி வசூலிப்பில் 200 கோடி ரூபாய் இழப்பீடு என்ற புகார் குறித்தான கேள்விக்கு ;
இதுகுறித்து விசாரணைக்கு போய் கொண்டு இருக்கும் போது 200 கோடி என எப்படி சொல்ல முடியும், விசாரித்தால் தான் என்ன தப்பு நடந்தது என கூற முடியும். தவறு இருந்தால் நடவடிக்கை எடுக்கப்படும்.
இந்த தி.நகர் மேம்பாலம் திறக்கும் பொழுது ரிப்பன் மாளிகை அருகே உள்ள விக்டோரியா மாஹாலும் திறக்கப்படும். அதில் கூட்டம் நடத்தக்கூடிய ஹால் மற்றும் விழா, கண்காட்சி என நிகழ்ச்சிகள் நடத்தப்படும். பழமை மாறாமல் அப்படியே புதுப்பித்து இருக்கிறார்கள்.
திமுக கூட்டணியில் உள்ள கட்சிகள் எல்லாம் அவமானப்பட்டுள்ளனர் என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அவரது கூட்டணிக்கு அழைத்தது குறித்தான கேள்விக்கு ;
இங்கு இருப்பவர்கள் எல்லாம் அவமானப்பட்டார்கள் என்று அவரிடம் போய் சொன்னார்களா ? அவர் தான் அவமானப்பட்டு நிற்கிறார். ஒருத்தர் கூட்டணி ஆட்சி இருக்கு என்கிறார் ஒருத்தர் கூட்டணி ஆட்சி இல்லை என கூறுகிறார். அவர் தான் அடிப்பட்டு இருக்கிறார். எங்கள் கூட்டணி எல்லாம் சரியாகவும் நேர்மையாகவும் உள்ளது என தெரிவித்தார்.





















