40 ஆண்டுகளுக்கு பின் புதுச்சேரியில் பெண் அமைச்சர்!
40 ஆண்டுகளுக்குப் பிறகு புதுச்சேரி அமைச்சரவையில் பெண் ஒருவர் அமைச்சராக பதவியேற்கவுள்ளார்.
புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் தேசிய ஜனநாயக சார்பில் என்.ஆர்.காங்கிரஸ் மற்றும் பாரதிய ஜனதா கட்சி கூட்டணியில் ஆட்சி அமைந்துள்ளது. முதல்வராக என்.ஆர்.காங்கிரஸ் கட்சியின் தலைவர் ரங்கசாமி பொறுப்பேற்றார். குறிப்பாக முதல்வர் பதவியேற்று 45 நாட்கள் மேலாகியும் அமைச்சரவையை இறுதி செய்வதில் இழுபறி நீடித்தது. குறிப்பாக கூட்டணிக் கட்சிகளுக்கு இடையே அமைச்சர் பதவி யாருக்கு ஒதுக்குவது என்ற குழப்பம் நிலவியது.
இதற்கு காரணம் கூட்டணி கட்சிக்குள் இருந்த குழப்பம் எனச் சொல்லப்பட்டது. பின்னர் கடந்த சில தினங்களுக்கு முன்னர் இதில் சுமூக உடன்பாடு ஏற்பட்டதை தொடர்ந்து புதிய அமைச்சரவை பட்டியலை துணை நிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜனிடம் கடந்த 23ஆம் தேதி முதல்வர் ரங்கசாமி வழங்கினார். இதில் 5 பேர் கொண்ட புதிய அமைச்சரவை பட்டியலில், பாஜகவிற்கு 2 அமைச்சர்களும் மற்றும் என்.ஆர்.காங்கிரஸ் கட்சிக்கு 3 அமைச்சர்களும் ஒதுக்கப்பட்டது. இதையடுத்து முதல்வர் ரங்கசாமி வழங்கிய அமைச்சரவை பட்டியலை துணை நிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் உள்துறை அமைச்சகத்தின் ஒப்புதலுக்கு அனுப்பிவைத்தார். இந்த நிலையில் உள்துறை அமைச்சகத்திற்கு அனுப்பப்பட்டபுதிய அமைச்சரவை பட்டியலுக்குக் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் வழங்கினார். இதையடுத்துபுதிதாக நியமிக்கவுள்ள 5 அமைச்சர்கள் யார் என்று புதுச்சேரி மாநில அரசிதழில் அதிகாரப்பூர்வமாக அரசு அறிவித்துள்ளது. 5 பேர் கொண்ட அமைச்சர்கள் பட்டியலில் என்.ஆர்.காங்கிரஸ் கட்சியை சேர்ந்த சந்திர பிரியங்கா, லட்சுமி நாராயணன் மற்றும் தேனி ஜெயக்குமார் உள்ளிட்ட மூவர் இடம் பெற்றுள்ளனர். இவர்களை அடுத்து பாஜகவை சேர்ந்த நமச்சிவாயம் மற்றும் சாய் சரவணக்குமார் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.
புதிய அமைச்சரவைக்கான பதவியேற்பு விழா வரும் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 2.30 மணிக்கு நடைபெறும் என புதுச்சேரி தலைமைச் செயலாளர் அஸ்வனி குமார் தெரிவித்துள்ளார். 40 ஆண்டுகளுக்கு பிறகு புதுச்சேரி அமைச்சரவையில் பெண் உறுப்பினருக்கு வாய்ப்பு. புதுச்சேரி அமைச்சரவையில் சுமார் 40 ஆண்டுகளுக்கு பிறகு காரைக்கால் நெடுங்காடு தொகுதியைச் சேர்ந்த பெண் சட்டமன்ற உறுப்பினர் சந்திர பிரியங்கா அமைச்சரவையில் இடம் பெற்றுள்ளார். முன்னாள் அமைச்சர் சந்திரகாசுவின் மகளான இவர், தொடர்ந்து இரண்டாவது முறையாக காரைக்கால் நெடுங்காடு தொகுதியில் வெற்றி பெற்றுள்ளார்.
1980ஆம் ஆண்டு காங்கிரஸ் திமுக கூட்டணியில் ஆட்சி நடைபெற்ற போது, காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ரேணுகா அப்பாதுரை என்பவர் அப்போதைய கல்வி அமைச்சராக இருந்தார். அவரை தொடர்ந்து 40 ஆண்டுகளுக்கு பிறகு பெண் அமைச்சர் ஒருவரை என்.ஆர்.காங்கிரஸ் கட்சிஅமைச்சராக நியமித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இவரைத் தொடர்ந்து என்.ஆர்.காங்கிரஸ் கட்சியை ராஜ்பவன் தொகுதியைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர் சேர்ந்த லட்சுமி நாராயணன் மற்றும் மங்கலம் தொகுதியைச் சேர்ந்த தேனி ஜெயக்குமார் உள்ளிட்டோர் இரண்டாவது முறையாக அமைச்சராகவுள்ளனர். இவர்களைத் தொடர்ந்து பாஜகவை சேர்ந்த மண்ணாடிப்பட்டு சட்டமன்ற உறுப்பினர் நமச்சிவாயம் அமைச்சரவையில் இடம் பெற்றுள்ளார். இவர் நான்காவது முறையாக மீண்டும் அமைச்சர் பொறுப்பேற்க உள்ளார். இவரையடுத்து பாஜகவை சேர்ந்த ஊசுடு சட்டமன்ற உறுப்பினர் சாய் சரவணக்குமார் முதல் முறையாக அமைச்சராகிறார்.
5 பேர் கொண்ட இந்த அமைச்சரவை பட்டியலில், காரைக்கால் நெடுங்காடு தொகுதியை சந்திர பிரியங்கா மற்றும் ஊசுடு தொகுதியை சேர்ந்த சாய் சரவணக்குமார் ஆகிய இருவரும் தனித் தொகுதியில் போட்டியிட்டு வென்றுள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 40 ஆண்டுகளுக்குப் பிறகு, புதுச்சேரி அமைச்சரவையில் பெண் ஒருவர் அமைச்சராக சந்திர பிரியங்கா கல்வித்துறை பதவியேற்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.