CSK Dhoni: அவசரப்பட்ட சிஎஸ்கே ரசிகர்கள், கடுப்பான தோனி எடுத்த முடிவு - ருதுராஜ் காலி? ஏலத்தில் ஜடேஜா?
IPL 2025 CSK Dhoni: ஐபிஎல் போட்டியில் தோனியின் ஓய்வு, கேப்டனாக ருதுராஜின் எதிர்காலம் மற்றும் ஜடேஜா சென்னை அணியில் தொடர்வது தொடர்பான முக்கிய தகவல் வெளியாகியுள்ளது.

IPL 2025 CSK Dhoni: நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் ரசிகர்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யாத சென்னை அணி, ஏற்கனவே பிளே-ஆஃந்ப் வாய்ப்பை இழந்துவிட்டது குறிப்பிடத்தக்கது.
குட்பாய் சொல்லும் தோனி?
தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்ட ஐபிஎல் போட்டிகள் இன்று முதல் மீண்டும் தொடங்குகிறது. ஆனால், ஏற்கனவே 12 போட்டிகளில் விளையாடி ஒன்பது தோல்விகளை கண்ட சென்னை அணி, நடப்பு தொடருக்கான பிளே-ஆஃப் வாய்ப்பை இழந்துவிட்டது. இதனால் கடும் விமர்சனங்களை எதிர்கொண்டு வரும், இடைக்கால கேப்டனான தோனி நடப்பு தொடரும் ஓய்வு பெறுவார் என கூறப்பட்டது. கடைசி 2 லீக் போட்டிகளில் அவரை சிறப்பாக வழியனுப்பவும் ரசிகர்கள் திட்டமிட்டுள்ளனர். ஆனால், அந்த திட்டங்களை ரசிகர்கள் கட்டாயம் சிறிது காலத்திற்கு நிறுத்தி வைக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. காரணம், 43 வயதான தோனியின் ஐபிஎல் பயணம் நடப்பு தொடருடன் முடியாது என, சிஎஸ்கே அணி நிர்வாகம் திட்டவட்டமாக நம்புவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தோனிக்கு மீதமிருக்கும் வேலைகள்:
தற்போதைய சிஎஸ்கே அணியில் தோனியின் பங்களிப்பு என்ன? அவரது செயல்பாடு குறித்து ரசிகர்கள் உட்பட பல்வேறு தரப்பினரும் ஏராளமான கேள்விகளை எழுப்பி வருகின்றனர். ஆனாலும் தனது ஓய்வு குறித்து தற்போது வரை அணி நிர்வாகத்திடம் தோனி எந்த கருத்தையும் கூறவில்லையாம். அடுத்த ஐபிஎல் தொடங்குவதற்கு சில மாதங்களுக்கு முன்பே தனது முடிவு இறுதியாகும் என தோனி ஏற்கனவே கூறி இருந்தார். ஆனால், தற்போதைய சூழலில் எதிர்காலத்திற்கான அணியை கட்டமைப்பதில் பல்வேறு பிரச்னைகள் உள்ளன. இந்த சூழலில் அணியை விட்டுச்செல்வது சரியாக இருக்காது என தோனி கருதுவதாக தெரிகிறது. அணியில் ஏராளமான இளைஞர்கள் இருப்பதால் அவர்கள் தங்களுக்கான இடத்தை உறுதி செய்வதற்கு சிறிது காலம் வேண்டும், அதோடு சிஎஸ்கே அணி கடந்த 2023ம் ஆண்டு வரையில் இருந்த பழைய ஃபார்மிற்கு திரும்ப வேண்டும். இந்த இலக்குகளுக்கு அணியின் கீப்பராகவும், டெயில் எண்ட் பேட்ஸ்மேன் ஆகவும், வழிகாட்டும் ஒரு மூத்த வீரரகாவும் தோனி அணியில் இருப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
கேப்டனாக தொடர்வாரா தோனி?
மேற்குறிப்பிட்ட காரணங்களால் தோனி அணியில் தொடர வாய்ப்புள்ளதாகவே தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த சில ஆண்டுகளை காட்டிலும், நடப்பாண்டில் தோனி உடல் ரீதியாக திறம்பட செயல்பட்டதை அவரது பேட்டிங் மற்றும் கீப்பிங் திறன்கள் வெளிப்படுத்தியுள்ளன. அதேநேரம், தோனி அடுத்த சீசனில் கேப்டனாக தொடரமாட்டார் என்றும் கூறப்படுகிறது. நடப்பாண்டிற்கான இடைக்கால கேப்டன் மட்டுமே என்பதில் தோனி தெளிவாக இருக்கிறாராம்.
ருதுராஜ் கேப்டன் பதவி பறிப்பு?
காயத்திலிருந்து மீண்டும் ருதுராஜ் கெய்க்வாட் அணியில் இணையும்போது, அவர் வசம் மீண்டும் கேப்டன் பதவியை ஒப்படைக்கவே சிஎஸ்கே நிர்வாகமும், தோனியும் விரும்புவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த ஒன்றரை சீசன்களில் எதிர்பார்த்த அளவில் ருதுராஜின் தலைமையின் கீழ் சிஎஸ்கே அணி செயல்படவில்லை. இருப்பினும் அவரது பதவியை பறிப்பது என்பது அவசர முடிவாக இருக்கலாம் என்றும், ருதுராஜிற்கு இன்னும் சிறிது காலம் வாய்ப்பளிக்கவும் தோனி விரும்புகிறாராம். அதேநேரம், அணியை கட்டமைப்பதற்கான நடப்பாண்டிற்கான வீரர்களுக்கான ஏலத்தில் தலையிடாத தோனி, அடுத்த மினி ஏலத்தில் வீரர்களுக்கான தேர்வில் பங்களிப்பார் என கூறப்படுகிறது.
ஏலத்தில் ஜடேஜா?
தோனி மற்றும் ருதுராஜிற்கு அடுத்தபடியாக சென்னை அணியில் நடப்பாண்டில் அதிகம் விமர்சிக்கப்பட்டவர் ஜடேஜா தான். 18 கோடி ரூபாய் எனும்பெரும் தொகைக்கு தக்கவைக்கப்பட்ட ஆல்ரவுண்டர், அதற்கு ஈடாக களத்தில் செயல்படவில்லை என்பதையே தரவுகள் காட்டுகின்றன. இதனால் அவர் அணியிலிருந்து விடுவிக்கப்படலாம்? அடுத்த மினி ஏலத்தில் அவரது பெயர் இடம்பெறலாம்? என கூறப்பட்டது. ஆனால், நடப்பு சீசனின் இரண்டாவது பாதியில் பேட்டிங்கில் ரன்சேர்ப்பதோடு, விக்கெட்டுகளையும் ஜடேஜா கைப்பற்ற தொடங்கியுள்ளார். பொறுப்பை உணர்ந்து சூழலுக்கு ஏற்ப செயல்படக்கூடிய, ஜடேஜாவின் அனுபவம் அணியின் வலுவான கட்டமைப்புக்கு உதவும் என சிஎஸ்கே நிர்வாகம் நம்புகிறதாம். இதனால், அடுத்த ஆண்டும் சென்னை அணியில் ஜடேஜா தொடர்வார் என்பதில் எந்த ஐயமும் வேண்டாம்.




















