முக்கிய புள்ளியின் பினாமி.. தொடர்ந்து துரத்தும் ED.. யார் இந்த ரத்தீஷ்?
டாஸ்மாக் ஊழல் விவகாரத்தில் மையப்புள்ளியாக இருப்பது ரத்தீஷ் என்ற தொழிலதிபர். இவர் யார்? இவருக்கும் டாஸ்மாக் நிர்வாக இயக்குநரும் ஐஏஎஸ் அதிகாரியுமான விசாகனுக்கும் என்ன தொடர்பு? இவரால் எப்படி இவ்வளவு செல்வாக்கு செலுத்த முடிந்தது என பல்வேறு கேள்விகள் எழுந்து வருகின்றன.

டாஸ்மாக்கில் 1000 கோடி ரூபாய் அளவில் ஊழல் நடைபெற்றதாக அமலாக்கத்துறை முன்வைத்த குற்றச்சாட்டுகள், தமிழ்நாட்டில் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தி வருகிறது. இந்த விவகாரத்தில் மையப்புள்ளியாக இருப்பது ரத்தீஷ் என்ற தொழிலதிபர். இவர் யார்? இவருக்கும் டாஸ்மாக் நிர்வாக இயக்குநரும் ஐஏஎஸ் அதிகாரியுமான விசாகனுக்கும் என்ன தொடர்பு? இவரால் எப்படி இவ்வளவு செல்வாக்கு செலுத்த முடிந்தது என பல்வேறு கேள்விகள் எழுந்து வருகின்றன.
பூகம்பத்தை கிளப்பும் டாஸ்மாக் 'ஊழல்'
தமிழ்நாடு அரசின் கீழ் இயங்கி வரும் டாஸ்மாக்தான், அரசுக்கு அதிக வருவாய் பெற்றுத்தரும் நிறுவனமாக உள்ளது. தமிழ்நாடு அரசின் வருவாயில் முக்கிய பங்கு வகிக்கும் டாஸ்மாக்கில் பல முறைகேடுகள் நடந்ததாகவும் 1000 கோடி ரூபாயில் ஊழல் நடைபெற்றதாக அமலாக்கத்துறை குற்றச்சாட்டு சுமத்தியது. டாஸ்மாக் மதுபான கூடத்துக்கு உரிமம் வழங்குவது, தனியார் நிறுவனங்களிடம் இருந்து டாஸ்மாக்குக்கு மதுபானங்கள் கொள்முதல் செய்வது, வரி ஏய்ப்பு, சட்டவிரோத பண பரிவர்த்தனை என அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டது.
ஆனால், இந்த குற்றச்சாட்டுகளை எல்லாம் தமிழக அரசு மறுத்து வந்தது. செந்தில் பாலாஜி, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை அமைச்சராக இருந்த போதுதான், இந்த 1000 கோடி ரூபாய் ஊழல் விஸ்வரூபம் எடுத்தது. வேறொரு வழக்கில் (அரசு வேலை வாங்கி தருவதாக லஞ்சம் பெற்ற குற்றச்சாட்டு) தனது அமைச்சர் பதவியை செந்தில் பாலாஜி ராஜினாமா செய்த நிலையில், தற்போது இந்த துறை அமைச்சர் எஸ்.முத்துசாமிக்கு கூடுதலாக ஒதுக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், டாஸ்மாக் ஊழல் குற்றச்சாட்டு தொடர்பாக நேற்று பல்வேறு இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்த தொடங்கினர். டாஸ்மாக் நிர்வாக இயக்குநரும் ஐஏஎஸ் அதிகாரியுமான விசாகன், சினிமா பட தயாரிப்பாளர் ஆகாஷ் உள்ளிட்டவர்களின் வீடுகளில் நேற்று தொடங்கி இன்று வரை சோதனை நடைபெற்று வருகிறது.
யார் இந்த ரத்தீஷ்?
இந்த விவகாரத்தில் மையப்புள்ளியாக இருப்பது ரத்தீஷ் என்ற தொழிலதிபர். இவர் தமிழ்நாட்டின் முக்கிய அரசியல் தலைவர் ஒருவரின் நெருங்கிய நண்பர் எனக் கூறப்படுகிறது. ஐஏஎஸ் அதிகாரி விசாகன் வீட்டில் சோதனை நடைபெற்றபோது, அவரின் வீட்டின் பின்புறத்தில் சில முக்கிய ஆவணங்கள் சிதறி கிடந்ததை அமலாக்கத்துறை அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.
அதை ஆய்வு செய்தபோது, ரத்தீஷ் உடன் விசாகன் மேற்கொண்ட வாட்ஸ்அப் உரையாடல் சிக்கியுள்ளதாக கூறப்படுகிறது. டாஸ்மாக், எந்த நிறுவனத்திடம் இருந்து மதுபானம் வாங்க வேண்டும், யாருக்கு டெண்டர் அளிக்க வேண்டும் என விசாகனுக்கு ரத்தீஷ் ஆர்டர் போட்ட வாட்ஸ்அப் உரையாடல் சிக்கி இருப்பதாகக் கூறப்படுகிறது.
இதையடுத்து, சென்னை பட்டினப்பாக்கம் எம்.ஆர்.சி. நகரில் உள்ள ரத்தீஷின் அடுக்குமாடி குடியிருப்புக்கு அமலாக்கத்துறை அதிகாரிகள் சென்றனர். ஆனால், அமலாக்கத்துறை வருவதை அறிந்த அவர் தப்பித்துவிட்டதாகக் கூறப்படுகிறது.
இதில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனைக்கு வருவதாக ரத்தீஸ்க்கு தகவல் கொடுத்ததே அமலாக்கத்துறையில் இருக்கும் சிலர்தான என சொல்லப்படுகிறது. ரத்தீஷின் அண்ணன், அண்ணி என இருவருமே ஐபிஎஸ் அதிகாரிகள்தான் என்றும், எனவே ஐபிஎஸ் அதிகாரிகள் சிலர் அவருக்கு உதவி செய்து வருவதாகக் கூறப்படுகிறது. இவர், முக்கிய அரசியல் தலைவர் ஒருவரின் பினாமி என்றும் கூறப்படுகிறது.




















