மேலும் அறிய
தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோயில்: பக்தர்களுக்காக ரூ.11.75 கோடி திட்டம்! இணை ஆணையருக்கு நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
அடிப்படை வசதிகளை சீர் செய்ய இந்து சமய அறநிலையத்துறையின் திட்டம் அரசின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டுள்ளது. ஒரு மாதத்தில் உரிய முடிவெடுக்கப்படும் - அரசுத்தரப்பு.

தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோயில்
Source : whats app
தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோயிலில் அடிப்படை வசதிகளை செய்வதற்கான திட்டம் தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து அறிக்கை தாக்கல் செய்ய இந்து சமய அறநிலையத்துறையின் இணை ஆணையருக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
சக்திவாய்ந்த தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோயில்
சிவகங்கை மாவட்டம் தாயமங்கலத்தில் அமைந்துள்ள முத்துமாரி கோயில் பிரசித்திபெற்றது. கோயிலை சுற்றியுள்ள 22 கிராம மக்கள் தங்களது சொந்த தாயாக நினைத்து வழிபட்டு வருகின்றனர். தென்மாவட்ட மக்கள் அதிகளவு சாமி தரிசனம் செய்து செல்கின்றனர். திருமண தடை நீங்க, குழந்தை பாக்கியம், விவசாயம் செழிக்க உள்ளிட்ட பல்வேறு வேண்டுதல்களை நிறைவேற்றுவதாக நம்பப்படுகிறது. இதனால் தினமும் நூற்றுக்கணக்கான பக்தர்கள் இந்த கோயிலுக்கு வந்துசெல்லும் நிலையில், இந்த கோயிலுக்கு அடிப்படை வசதிகள் செய்துதர கோரிக்கை எழுந்தது. இந்த சூழலில் இதற்காக ரூ.11.75 கோடியில் புதிய திட்டம் தீட்டப்பட்டுள்ளதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முத்துமாரியம்மன் கோயிலில் அடிப்படை வசதி செய்துதரக் கோரி மனு
சிவகங்கை மாவட்டம் இளையான்குடியைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன் உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் மனு தாக்கல் செய்திருந்தார் அதில்..,"சிவகங்கை மாவட்டம், தாயமங்கலம் கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ அருள்மிகு முத்துமாரியம்மன் கோயிலில் பக்தர்களுக்கு தேவையான குடிநீர், கழிவறை, ஓய்வறை, சமையலறை போன்ற அடிப்படை வசதிகளை செய்து தரக் கூறியிருந்தார்.
11.75 கோடி ரூபாய் மதிப்பீட்டில், திட்டம் தயார்
இந்த வழக்கு நீதிபதிகள் அனிதா சுமந்த், குமரப்பன் அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது. இந்து சமய அறநிலையத்துறையின் சிவகங்கை மாவட்ட இணை ஆணையர் தரப்பில், "தாயமங்கலம் ஸ்ரீ அருள்மிகு முத்துமாரியம்மன் கோயிலில் அடிப்படை வசதிகளை செய்து தருவதற்காக 11.75 கோடி ரூபாய் மதிப்பீட்டில், திட்டம் தயார் செய்யப்பட்டு இந்து சமய அறநிலையத்துறையின் ஆணையருக்கு அனுப்பப்பட்டுள்ளது" என தெரிவிக்கப்பட்டது.
திட்டம் தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு
அரசுத் தரப்பில், "இந்து சமய அறநிலையத்துறையின் திட்டம் அரசின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டுள்ளது. ஒரு மாதத்தில் உரிய முடிவெடுக்கப்படும்" என தெரிவிக்கப்பட்டது. அதையடுத்து நீதிபதிகள், அடிப்படை வசதிகளை செய்வதற்கான திட்டம் தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து அறிக்கை தாக்கல் செய்ய இந்து சமய அறநிலையத்துறையின் இணை ஆணையருக்கு உத்தரவிட்டு வழக்கை 2 வாரங்களுக்கு ஒத்திவைத்தனர்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் படிக்கவும்
Advertisement
Advertisement




















