Governor RN Ravi: தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி மாற்றம்... என்ன காரணம்.. புதிய ஆளுநர் இவர் தான்!
தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்கம் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கு விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. இப்படியான நிலையில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

தமிழ்நாட்டின் ஆளுநராக செயல்பட்டு வந்த ஆர்.என்.ரவி திடீரென இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். இதனைத் தொடர்ந்து தமிழ்நாட்டின் ஆளுநராக ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் நியமிக்கப்பட்டுள்ளார்.
திமுக அரசுக்கு சிம்ம சொப்பனமாக திகழ்ந்த ஆர்.என்.ரவி
ஆர்.என்.ரவி தமிழ்நாட்டின் ஆளுநராக கடந்த 2021ம் ஆண்டு நியமிக்கப்பட்டார். அவர் நியமனம் செய்யப்பட்டது முதலே அவருக்கும் தமிழ்நாடு அரசுக்கும் இடையே கடுமையான மோதல் போக்கு நிலவி வந்தது. சட்டப்பேரவையில் ஆளுநர் உரையின்போது முதலிலும், கடைசியிலும் தேசிய கீதம் இசைக்கப்பட வேண்டும் என்பது தொடங்கி பல விஷயங்களில் அவர் நேரடியாகவே ஆளும் திமுக அரசை விமர்சித்தார்.
மேலும் தமிழ்நாடு அரசு சட்டப்பேரவையில் நிறைவேற்றிய மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் காலம் தாழ்த்தினார். இதனால் உச்சநீதிமன்றத்தை தமிழ்நாடு அரசு நாடிய நிலையில், இது சட்ட விரோதம் என நீதிபதிகள் தீர்ப்பளித்தனர். இதனால் ஒரே நேரத்தில் நிலுவையில் இருந்த 10 மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்கி பரபரப்பை ஏற்படுத்தினார். அவரை மாற்றக்கோரி பலமுறை மத்திய அரசுக்கு தமிழ்நாடு அரசு சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்ட நிலையில் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படாமல் இருந்தது.
ஆளுநர்கள் மாற்றம்
இந்த நிலையில் தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்கம் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கு விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. இதனை முன்னிட்டு ஆளுநர் மாற்றம் இருக்கலாம் என எதிர்பார்க்கப்பட்டது. அதேசமயம் மேற்கு வங்க ஆளுநராக இருந்த சி.என்.போஸ் திடீரென தனது பதவியை ராஜினாமா செய்தார். இதனைத் தொடர்ந்து ஆர்.என்.ரவியை மேற்கு வங்க ஆளுநராக இடமாற்றம் செய்து குடியரசுத்தலைவர் திரௌபதி முர்மு உத்தரவிட்டுள்ளார்.
அதுமட்டுமல்லாமல் கேரள ஆளுநராக செயல்பட்டு வரும் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் தமிழ்நாட்டின் ஆளுநராகவும் கூடுதல் பொறுப்பு வகிப்பார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேகாலயா மற்றும் நாகாலாந்து மாநிலங்களின் ஆளுநராக பணியாற்றிய ஆர்.என்.ரவி 15வது தமிழக ஆளுநராக கடந்த 5 ஆண்டுகள் பணியாற்றினார். பீகார் மாநிலம் பாட்னாவைச் சேர்ந்த அவர், சர்வாதிகாரியாக நடந்து கொண்டதாக முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசால் கடுமையாக விமர்சிக்கப்பட்டார். 2023ம் ஆண்டு தமிழ்நாட்டில் இதுவரை ஆண்ட கட்சிகள் பிற்போக்குத்தனமாக நடப்பதாக கருத்து தெரிவித்து கடும் எதிர்ப்புகளைப் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
பிற மாநில ஆளுநர்கள் மாற்றம்
டெல்லி துணை நிலை ஆளுநராக பதவி வகித்து வந்த வினய் குமார் சக்சேனா லடாக் துணை நிலை ஆளுநராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார். டெல்லிக்கு தரன்ஜித் சந்து பணியமர்த்தப்பட்டுள்ளார். மேலும் நாகாலாந்து ஆளுநராக நந்த் கிஷோர் யாதவும், மகாராஷ்டிரா ஆளுநராக தெலங்கானாவில் பணியாற்றி வந்த ஜிஷ்ணு தேவ் வர்மாவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
புதிய தெலங்கானா ஆளுநராக ஷிவ்பிரதாப் சுக்லா இமாச்சல பிரதேசத்தில் இருந்து இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். அதேசமயம் இமாச்சலுக்கு கவிந்தர் குப்தா நியமனம் செய்யப்பட்டிருக்கிறார். பீகார் ஆளுநராக சையத் அடா ஹஸ்னன் பணியமர்த்தப்பட்டிருக்கிறார்.
ட்ரெண்டிங் செய்திகள்






















